அற்புதமான ஒன்று: ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் 70ஆவது பிறந்த தினம் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் பயனர்கள், ஊழியர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்துவருகின்றனர். இந்நாளையொட்டி அவர் பற்றிய நினைவைப் பகிர்ந்துள்ளது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆவணக்காப்பக இணையத்தளம்.

steve_jobs

ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவாகத் தொடங்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் ஆவணக்காப்பகம் (Steve Jobs Archives) அமைப்பு, தொழில்முனைவரும் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியுமான லாரன் பவல் ஜாப்ஸ், தற்போதைய ஆப்பிள் தலைமை செயலதிகாரி டிம் குக் மற்றும் ஜானி ஐவ் ஆகியோரால் செப்டம்பர் 2022 இல் தொடங்கப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸை இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதையும், அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இது செயல்பட்டு வருகிறது

இந்நிலையில் அவ்வமைப்பு அக்டோபர் 23, 2007 அன்று நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர் சந்திப்பில் ஸ்டீவ் ஜாப்ஸ் பேசிய நிகழ்ச்சியின் களிநயமான காணொளித் துணுக்கினைப் பகிர்ந்துள்ளது. அந்த ஆண்டு ஜனவரியில், தயாரிப்பு வரிசை விரிவடைந்து, சில்லறை விற்பனைகளிலும் சேவைகளிலும் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் நிறுவனம் தனது பெயரை ஆப்பிள் கம்ப்யூட்டர் இன்க் என்பதிலிருந்து ஆப்பிள் இன்க் (Apple Inc) என மாற்றியது.

அப்போதைய ஜூன் மாதத்தில், ஐபோன் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டு விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வந்தது. அதன்மூலம் வருவாய் அதிகரித்துள்ளது, லாபம் மிகவும் அதிகரித்துள்ளது, மேலும் நிறுவனம் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதைப் பார்த்து ஸ்டீவ் வியந்து பேசினார். “நீங்கள் யோசித்து உருவாக்கிய 24 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை மக்கள் விரும்பி வாங்கியுள்ளனர். இது மிகவும் அருமையாக இருக்கிறது” எனவும் ஊழியர்களைப் பாராட்டினார்.

ஸ்டீவ் தனது சொந்த கருத்துக்களைவிட ஊழியர்களின் கேள்விகளுக்கே அதிக நேரம் ஒதுக்குவார். அப்போது ஆப்பிள் வளரும்போது அதன் அடையாளத்தையும் கலாசாரத்தையும் எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளும் என்று ஓர் ஊழியர் கேட்டார். உடனே ஸ்டீவ் ஒரு மிடறு தண்ணீரைக் குடித்துவிட்டு, யாரும் எதிர்பார்க்காத பதிலைக் கூறினார். “மிகுந்த கவனத்துடன் அற்புதமான ஒன்றை உருவாக்குவது மனிதக்குலத்தின் மீதான உங்கள் மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். நீங்கள் ஒருபோதும் மக்களைச் சந்திப்பதில்லை. நீங்கள் அவர்களின் கைகளைத் தொடுவதில்லை. அவர்களின் கதையைக் கேட்பதுமில்லை, உங்களுடைய கதையைச் சொல்வதுமில்லை. ஆனால் மிகுந்த அக்கறையுடனும் அன்புடனும் ஒரு செயலைச் செய்யும்போது, ஏதோ ஒரு உணர்வு அங்குக் கடத்தப்படுகிறது. “ எனக் கூறினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

புதிதாகச் சிந்திக்கவும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு முயன்று பார்க்கவும் நம்மைத் தூண்டும் ஆளுமையாக ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கிறார். அற்புதமான ஒன்றை உருவாக்குங்கள் என்பதைப் பலமுறை குறிப்பிட்டுள்ளார். அழகியலையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து அவர் யோசித்தவிதம் அவருடைய தனித்துவம். எனவேதான் அவர் மறைவுக்குப் பிறகும் தொடர்ந்து நினைவுகூரப்படுகிறார். கொண்டாடப்படுகிறார்.

வரலாறு உங்களை என்றும் நினைவில் வைத்திருக்கும் ஸ்டீவ்.

  • மு. இசக்கிமுத்து

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now