பிழைக்கு வருந்தும் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் வாட்ச் 3யில் உள்ள எழுத்துப்பிழைக்காக மன்னிப்பு கோரியுள்ளது அந்நிறுவனம்.

கடந்த ஆண்டு ஒன்பிளஸ் நிறுவனம் வாட்ச் 2 என்ற திறன்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதன் மேம்பட்ட பதிப்பாக வாட்ச் 3 என்ற புதிய திறன்கடிகாரத்தைக் கடந்த பிப்ரவரி 18 முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. இந்த ஒன்பிளஸ் வாட்ச் 3 சீனாவில் தயாரிக்கப்படுகிறது. அதனைக் குறிக்கும் வகையில், திறன் கைக்கடிகாரத்தின் பின்புறத்தில் ‘Made in China’ என்ற வாசகம் குறிப்பிடத் திட்டமிடப்பட்டிருந்தது.

OnePlus Watch 3

ஆனால் முதல் பதிப்பாக உருவாக்கப்பட்ட கடிகாரங்களில், தவறுதலாக ‘Meda in China’ என பிழையோடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துப் பிழையை அறியாமல் சந்தையில் விற்பனை செய்துவிட்டனர் ஒன்பிளஸ் நிறுவனத்தினர். இதைக் கண்டுபிடித்த சில பயனர்கள் சமூக வலைத்தளங்களில் இது பற்றிப் பதிவிட, எச்சரிக்கையானது ஒன்பிளஸ். அதனால் இப்போது வாட்ச் 3ஐ வாங்கும் பயனர்கள் அனைவருக்கும், ஒரு மன்னிப்பு கடிதத்தையும் வழங்கி வருகிறது. அதில் இந்த எழுத்துப்பிழைக்கு மன்னிப்பு கோருகிறது. அதோடு நீங்கள் வைத்திருக்கும் வாட்ச் 3யில் எழுத்துப்பிழை இருந்தால், அதை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் எனக் கோரிக்கையையும் வைத்துள்ளது இந்நிறுவனம்.

அதோடு அதற்கு மாற்றாக புதிய எழுத்துப்பிழை இல்லாத வாட்ச் 3ஐயும் வழங்க உள்ளது. இந்த எழுத்துப்பிழையைத் தவிர பல்வேறு மேம்பட்ட புதுவித அம்சங்களை வாட்ச் 3யில் வழங்கியுள்ளது ஒன்பிளஸ்.

வாட்ச் 3 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் டபிள்யூ5 செயலி மூலம் இயக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் மின்கல ஆயுளை அதிகப்படுத்த உதவும் புதிய BES2800MCU நுண்சில்லு சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு சிலிக்கான் கார்பன் மின்கலத் தொழில்நுட்பமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இது 500mAh முதல் 631mAh வரை சேமிப்புத் திறன் கொண்டது. அதனால் 120 மணிநேரத்திற்கு மின்கல ஆயுளை அதிகரிக்க இயலும் எனக் கூறப்படுகிறது.

பழைய வாட்ச் 2வின் தலைப்பகுதியில்(Crown) உள்ள , சுழல்வது தொடர்பான குறைகளும் களையப்பட்டுள்ளன. இந்த திறன் கைக்கடிகாரமானது எமரால்டு டைட்டானியம் மற்றும் அஷிடியன் டைட்டானியம் என இருவேறு நிறங்களில் சந்தைக்கு வந்துள்ளது.

  • மு.இசக்கிமுத்து

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now