பையர்ஃபாக்ஸ் (Firefox) இணைய உலாவியை உருவாக்கிய மொசில்லா (Mozilla) நிறுவனம் அண்மையில் அதன் தனியுரிமை மற்றும் பயன்பாட்டு விதிகளில் சில மாற்றங்களை செய்ததால், தனியுரிமையை முக்கியமாகக் கருதும் பயனர்கள் அச்சமடைந்தனர். ஆனால் மைக்ரோசாப்ட் எட்ஜ், கூகுள் குரோம் போன்றவற்றைப் பயன்படுத்த விரும்பாதவர்கள், பையர்ஃபாக்ஸ் உலாவிக்கு பதிலாக போர்க் (Firefox Fork) என்று அழைக்கப்படும் பல மாற்று நகல் பதிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இவை பையர்ஃபாக்ஸ்ஸின் (Firefox) அடிப்படை தொழில்நுட்பங்களைக் கொண்டே செயல்படும், ஆனால் வடிவமைப்பு, அமைப்புகள், இலக்குகள் போன்றவற்றில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.
2000களில் மைக்ரோசாப்ட் இணைய உலாவி, இணைய உலகில் ஏகபோகமாக கோலோச்சிய காலகட்டத்தில், அதற்குப் போட்டியாக மொசில்லா பையர்ஃபாக்ஸ் உலாவி அறிமுகப்படுத்தப்பட்டது. இது மற்ற உலாவிகளில் இருந்து மாறுபட்டு கெக்கோ என்ஜினைப் பயன்படுத்துகிறது. திறந்த மூல (open source) திட்டமான இந்த உலாவியின் சில குறிப்பிடத்தக்க மாற்றுப் பதிப்புகளை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் டோர் உலாவி (Tor browser), டோர் (Tor) நெட்வொர்க்கை பயன்படுத்தி, முழு அடையாளமற்ற உலாவலை வழங்குகிறது. லிப்ரேவுல்ஃப் (LibreWolf) மொசில்லாவின் தொலைஅளவியல் (Telemetry) சேவைகளை நீக்கி, அதிக தனியுரிமையை வழங்குகிறது. ஜப்பானில் உருவாக்கப்பட்ட ப்ளூர்ப் (Floorp), மேம்பட்ட பயனர் இடைமுகம் வழங்குவதோடல்லாமல் தனியுரிமைக்கு முக்கியத்துவம் தருகிறது.
பழைய பையர்ஃபாக்ஸ் அம்சங்களை பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்காகவே பழைய எக்ஸ்எம்எல் பயனர் இடைமுக மொழி கூடுதல் சேவைகள் (XUL Add-ons) மற்றும் பழைய பயனர் இடைமுகத்தை (Classic UI) தொடர்ந்து ஆதரிக்கும் பேல் மூன்-ம் (Pale Moon), பழைய Firefox Engine (Goanna) பயன்படுத்தும் பசிலிஸ்க்-ம் (Basilisk) பயன்பாட்டில் உள்ளன.
2011 ஆம் ஆண்டில் அலெக்ஸ் (Alex Kontos) என்பவரால் உருவாக்கப்பட்ட வாட்டர்ஃபாக்ஸ் பயனர் தரவுகளை சேமிக்காமல், தொலைஅளவியல் சேவைகளை இயல்பாக முடக்கி, வேகமான உலாவல் அனுபவத்தை வழங்குகிறது.
மேலும், ஜப்பானின் ஆபேல்சொப்ட் கார்போரேஷன் (Abelsoft Corporation) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ப்ளூர்ப் (Floorp) தற்போது ஒரு திறந்த மூல சமூகத்தால் பராமரிக்கப்படுகிறது. இது பயனர் இடைமுகத்தை விருப்பத்திற்கேற்ப மாற்றக்கூடியது.
சில மாற்று நகல் உலாவிகள் வெறும் உலாவியாக மட்டுமின்றி, பல்வேறு கூடுதல் அம்சங்களை வழங்குகின்றன. சீ மன்கி (Sea Monkey) என்பது உலாவி மட்டுமல்ல, மின்னஞ்சல் வசதி, இணைய விரைவு அரட்டை, எளிய செய்தியகம் போன்ற பல அம்சங்களைக் கொண்ட முழுமையான இணைய செயலியாக செயல்படுகிறது.
பையர்ஃபாக்ஸ் திறன்பேசி உலாவியின் மாற்றாக பென்னேக் (Fennec) மற்றும் ஐஸ்ரேவன் (IceRaven) போன்ற உலாவிகள் கிடைக்கின்றன. பென்னேக், கூகிள் பிளேஸ்டோரில் கிடைக்காது. ஆனால் எப்-ட்ராய்ட் போன்ற தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இது பையர்ஃபாக்ஸ் மொபைலைவிட குறைந்த நினைவகத்தில் வேகமாக இயங்கும். மேலும் அதிக இணைப்புகளை ஆதரிக்கும். ஐஸ்ரேவன் அதிக தனியுரிமை வழங்குவதால், திறன்பேசி உலாவியின் வரம்புகளை மீற விரும்பும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
இவை அனைத்தும் தனியுரிமை, பாதுகாப்பு தொடர்பான தனித்துவமான கொள்கை வைத்திருக்கும் பயனர்களுக்கே சரியாக வரும். திறமூல நிரல்களைக் கொண்டு உருவாக்கப்படும் போர்க்ஸ் வகை உலாவிகள் புதிய சிக்கல்களைக் கொண்டுவரவும் வாய்ப்புள்ளது. நெடுங்காலமாகப் பயன்படுத்தினேன், தற்போது புதிய பையர்போக்ஸ் வேண்டாம் என்கிற சாதாரண பயனர்கள் குரோம் உள்ளிட்ட மற்ற உலாவிகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது.
- நவீனா
