கூகுள் தொலைக்காட்சி

அனைத்து கூகுள் தொலைக்காட்சித் தொலைவியக்கியிலும் இலவசத் தொலைக்காட்சி பொத்தான் (FreeTV button) கட்டாயமாகச் சேர்க்கப்படவுள்ளது. கூகுள் தொலைக்காட்சியில், 150 இலவச தொலைக்காட்சி அலைவரிசைகளை வழங்கவுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

Google Tv

கடந்த 2023ல் கூகுள் தொலைக்காட்சியில் நேரலைப் பக்கம் என்ற அம்சம் கொண்டுவரப்பட்டது. அதில் பிபிசி எர்த், கோர்ட் டீவி, ஹால்மார்க் மூவிஸ் போன்ற சில முன்னணி தொலைக்காட்சி அலைவரிசைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்கு எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லாமல், உள்ளடக்கப் பக்கத்திலேயே எளிதாக வழங்கப்பட்டது.

அதன் பிறகு இந்த அம்சத்தைப் பயனர்களுக்கு எளிதாக கொண்டுசெல்லும் நோக்கத்தில், கூகுள் தொலைக்காட்சிகளில் சிலவற்றுக்கு மட்டும் தொலைக்காட்சித் தொலைவியக்கியில் (TV Remote) இலவசத் தொலைக்காட்சி பொத்தான் கொண்டுவரப்பட்டது. அதனை அழுத்துவதன் மூலம் நேரலைப் பக்கம் திறக்கும். அதில் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளை எளிதாகக் கண்டுகளிக்க முடியும். நேரலைப் பக்க அம்சம் அற்புதமானதாக இருந்தாலும், அதற்கான பொத்தான் மிகவும் பெரியதாக இருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.

ஆனால் இது போன்று அம்சங்களுக்கோ அல்லது செயலிகளுக்கோ தனித்துவமான பொத்தான்கள் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. இது பயனர்களின் வேலையை எளிமையாக்கியிருக்கிறது. தற்போது, அனைத்து கூகுள் தொலைக்காட்சி தொலைவியக்கியுலும் இந்த பொத்தான் வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.

இந்த மாற்றம் பற்றி வெளியாகும் செய்திகள் உண்மைதான் எனக் கூகுளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஆண்டிராய்டு அத்தாரிட்டி தளத்திடம் தெரிவித்திருக்கிறார். அவர் “உள்ளுர் செய்திகள், பிரபலமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் உட்பட இலவசமாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்க்கும் அம்சத்தைக் கூகுள் தொலைக்காட்சி வழங்கி வருகிறது. கூகுள் தொலைக்காட்சியில் இலவச நேரலைப் பக்க அம்சத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியதிலிருந்து, பயனர்களிடமிருந்து நேர்மறையான கருத்துகளைப் பெற்று வருகிறோம். மேலும் இந்த பொத்தானின் அறிமுகம் இப்போது அனைத்து கூகுள் தொலைக்காட்சியிலும் வரவுள்ளது. இது பயனர்களுக்கு நிச்சயம் நல்ல ஒரு அனுபவத்தை வழங்க உதவும்” எனக் கூறியிருக்கிறார். இந்த பொத்தானின் அளவு, நிறம் பற்றிய தகவல்கள் எதையும் கூகுள் இன்னும் வெளியிடவில்லை.

இத்தகவலின் முக்கியமான செய்தி என்னவெனில் இலவசமாகப் பார்க்கக் கூடிய தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது என்பதேயாகும். அனைத்து கூகுள் தொலைக்காட்சி பயனர்களும் இந்த அம்சத்தைப் பெறும்போது இது நிச்சயம் அவர்களுக்கு உதவியாகத்தான் இருக்கும்.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now