யாழ் வடிவில் உணர்ச்சிக்குறி

ஆப்பிளின் ஐஓஎஸ் 18.4 இயங்கு தளத்தில், தெறிக்கும் ஊதா வண்ணம், யாழ், காய்ந்த மரம் என எட்டு புதிய உணர்ச்சிக்குறி வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Apple Emoji

உணர்ச்சிக்குறி என்பவை மின்னணு தகவல் தொடர்பில் உணர்வுகளை, கருத்துக்களை அல்லது பொருள்களை வெளிப்படுத்தப் பயன்படும் சிறிய சின்னங்கள் ஆகும். இவை உரை அடிப்படையிலான செய்திகளை மேம்படுத்தக்கூடிய காட்சி வழித் தகவல் தொடர்பு முறையாகும். ஆரம்பக்காலத்தில் எளிமையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகத் தோன்றி, தற்போது பல்வேறு கருத்துக்களை அடையாளப்படுத்தும் வகையில் பரிணமித்துள்ளன. இன்றைய தொழில்நுட்ப உலகில் நமது உணர்வுகளுக்கு வண்ணம் பூசும் தூரிகைகள்தாம் உணர்ச்சிக்குறிகள்.

இப்போது ஐஓஎஸ்18.4 இயங்குதளத்தில் புதிதாக எட்டு உணர்ச்சிக்குறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கண்களுக்குக் கீழே பைகள் கொண்ட முகம், கைரேகை, தெறிக்கும் ஊதா வண்ணம், வேர் காய்கறி, இலையற்ற மரம், யாழ், மண்வெட்டி, சார்க் கொடி என நீள்கிறது இந்த வரிசை. முதல் உணர்ச்சிக்குறி உங்கள் சோகத்தையும், சோர்வையும் உங்கள் நண்பர்களுக்குப் பகிர நிச்சயம் உதவும்.

பட்டியலில், இறுதியாக உள்ள உணர்ச்சிக்குறி சார்க் நாட்டின் தேசியக்கொடியாகும். சார்க் என்பது ஒரு தீவு நாடு. இது பிரான்ஸிற்கு அருகே அமைந்துள்ளது. வெறும் ஐந்நூறு மக்கள் மட்டுமே வசிக்கும் இந்நாட்டில் பல்வேறு வித்தியாசமான விதிகள் இருக்கின்றனவாம்.‌ இன்றுவரை இந்நாட்டில் மகிழுந்து ஓட்டுவதற்கு அனுமதி இல்லையாம். மாறாக இந்நாட்டு மக்கள் மிதிவண்டி, குதிரை வண்டியையே போக்குவரத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த புதிய உணர்ச்சிக்குறிகள் யூனிகோடின் செப்டம்பர் 2024 பரிந்துரைகளின் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர சில உணர்ச்சிக்குறிகளில் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது நாம் அறிந்ததுதான். புதிய அரசாங்கம் பழைய தேசியக்கொடியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதைப் பின்பற்றிய ஆப்பிளும் புதிய அரசாங்கம் வெளியிட்டுள்ள கொடியைக் கொண்டுவந்துள்ளது.

பழைய கொடியில் மூன்று நிறப்பட்டைகள் இருந்தன. அவை முறையே சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகும். நடுவிலிருந்த வெள்ளை நிறப் பட்டையில் இரண்டு நட்சத்திரங்கள் இருந்தன. இப்போது உள்ள புதிய கொடியில் சிவப்பு நிறம் பச்சை நிறமாக மாற்றப்பட்டுள்ளது. அதோடு நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள புதிய உணர்ச்சிக்குறிகள் பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

  • மு.‌இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now