ஐபேட் சவாலும் ஆப்பிள் தீர்வும்

ஆப்பிள் ஐபேடில் அண்மையில் வெளியான மேம்படுத்தலைச் செய்தபின் பலருக்குத் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. நீங்களும் அதை அனுபவித்தவரா? அதன் விளக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

ஆப்பிள் ஐபேட் பயனர்களுக்கான ஐஓஎஸில் கடந்த வாரம் புதிய மேம்பாடு ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டது. ஐபேட்ஓஎஸ் 17.7.7 என்ற அந்த மேம்படுத்தலை நிறுவிய பயனர்கள் பலருக்கு பல தொழில்நுட்ப சிக்கல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பயனர்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வந்த நிலையில், அடுத்த மேம்படுத்தலில் அவற்றைச் சரி செய்து வெளியிட வேண்டிய கட்டாயம் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ஐபேட்ஓஎஸ் 17.7.7-ல் என்ன நடந்தது? 

அண்மையில் வெளியிட்ட ஐபேட்ஓஎஸ் மேம்பாட்டை நிறுவியவர்களது ஐபேட்களில் பயனர்கள் திடீர் சிக்கல்களை எதிர்கொண்டனர். அதாவது பயன்படுத்தலின்போதே செயலிகள் மூடப்படுவது, சில செயலிகள் திறக்கப்பட முடியாமல் ஆனது, பயனர்கள் தங்கள் ஆப்பிள் ஐடி மூலம் அடிக்கடி மீண்டும் கணக்கிற்குள் நுழையும்படி நேர்ந்தது, ஐபேட் அடிக்கடி ரீபூட் ஆனது உள்ளிட்ட கோளாறுகளால் பயனர்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கும் புகார்கள் குவிந்தன. இது ஆப்பிள் நிறுவனத்தைத் தற்போது வேகமாகச் செயல்பட வைத்திருக்கிறது. 

ஆப்பிளின் அடுத்த மேம்படுத்தல் 

இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் சோதனை அடிப்படையில் ஐபேட்ஓஎஸ் 17.7.8 ஐ குறிப்பிட்ட சில மாதிரிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக முந்தைய மேம்படுத்தலில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழைகளைச் சரி செய்யும் நோக்கிலேயே இது வெளியிட்டப்பட்டுள்ளது. விரைவில் பயனர்கள் அனைவருக்கும் வெளியிடப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், சோதனை வெற்றியடைந்திருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 

யாருக்கெல்லாம் இந்த மேம்படுத்தல்? 

ஆப்பிள் ஐபேட் மாதிரிகளின் வரிசையில் 2-ம் தலைமுறை 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ பயனர்களுக்கு கிடைக்கும். அதேபோல் 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ பயனர்களுக்கும் இந்த மேம்படுத்தல் கிடைக்கும். 6-ம் தலைமுறை ஐபேடுகள் அனைத்திற்கும் கிடைக்கும்படி இம்மேம்படுத்தல் தற்போதைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐஓஎஸ் 17-ன் மேம்படுத்தல்கள் இத்துடன் நிறுத்தி வைக்கப்படும் என்றும், விரைவில் அனைத்து விதத்திலும் தரமுயர்த்தப்பட்ட ஐபேட்ஓஎஸ் 18 வெளியாகும் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது. 

புதிய மேம்படுத்தலை நிறுவுவது எப்படி? 

ஐபேடில் அமைப்புகள் செயலியைத் திறந்து, பொது அமைப்புகள் (General Settings) பகுதியில் மென்பொறி மேம்பாடு (Software update) என்பதைத் தேர்வு செய்து, அதில் காணப்படும் ஐபேட்ஓஎஸ் 17.7.8 ஐ மேம்படுத்திக் கொள்ளலாம். பழைய ஐபேட்களைப் பயன்படுத்துவோர் விரைவில் இந்த மேம்படுத்தலைச் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இது கருவியைச் சீராகவும் பாதுகாப்பாகவும் இயக்க உதவும். ஐபேட்ஓஎஸ் 18, அடுத்த மாத இறுதிக்குள் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • விவேக்பாரதி

ஆப்பிள் ஐபேட் சவால் மற்றும் தீர்வு குறித்த செய்தி

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now