கண்ணாடித் திரை

பார்ப்பதற்கு இயல்பான கண்ணாடிகளைப் போலத் தோன்றும் திறன்கண்ணாடிகளின் நவீனத்துடன், எழுத்துகளை நமக்கு மட்டும் கண்ணாடியில் காட்டும் தொலை உரைக்காட்டியின் தொழில்நுட்பம் இணைந்த கதை தெரியுமா? அந்தக் கதையில் ஈவன் ரியாலிட்டி கண்ணாடிகளின் பெயர் நிச்சயம் இடம்பெறும்.

நாம் பேச நினைக்கும் உரையை எழுதி மனப்பாடம் செய்து உரையாற்றுவது ஒரு ரகம் என்றால், மனத்திலிருந்து அருவிபோல் சொற்களைக் கொட்டிப் பேசுவது இன்னொரு ரகம். இன்று இவை இரண்டுக்கும் இடைப்பட்ட முறையாகத் திகழ்கிறது தொலை உரைக்காட்டியின் (Teleprompter) பயன்பாடு. முதலில் செய்தி ஊடகங்களில் விரைவாக நகரும் செய்திகளைத் துல்லியமாக வாசிக்கப் பயன்பட்டன திரை உரைக்காட்டிகள். படக்கருவியின் முன் கணித்திரையில் தலைகீழாகத் தோன்றும் எழுத்துகள், நேரே கண்ணாடியில் தெளிவாகத்  தெரியும். அதைக் கொண்டு படக்கருவியை விட்டு கண்ணை நகர்த்தாமல், சொற்றொடர்களைத் தெளிவாகப் படித்துவிட முடியும். 

இதே தொழில்நுட்பத்தைக் கீழுள்ள கணித்திரையை மட்டும் வைத்துக்கொண்டு, மேடைப் பேச்சுகளுக்கும் பயன்படுத்தினர். அப்படித் தொடங்கிய திரை உரைக்காட்டிகளின் கதை, இப்போது கண்ணாடிக்குள் உரைக்காட்டிகளை நிறுவும் வரை வளர்ந்திருக்கிறது. அதில் அமெரிக்காவின் விருப்பமான இடத்தைப் பிடித்திருக்கிறது ஈவன் ரியாலிட்டி நிறுவனம். 

திறன்கண்ணாடிகளை உருவாக்கும் முயற்சி 2011-ல் தொடங்கிவிட்டது. தலைக்கவசத்தின் வடிவில், முன்புறம் நீட்டப்பட்ட திரை வடிவம்தான் முதல் திறன்கண்ணாடி. அதன்மூலம் வெளியுலகையும் பார்க்கலாம், திரையில் வரும் எழுத்துகள், படங்களையும் பார்க்கலாம். இந்த அடிப்படைத் தொழில்நுட்பத்தின் அடுத்தடுத்த படிநிலை, இயல்பான கண்ணாடி வடிவிலேயே திறன்கண்ணாடிகளாக வளர்ந்தன. அமேசான், அப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமன்றி, ரேபான் போன்ற கண்ணாடி நிறுவனங்களும் அம்முயற்சியில் மும்முரம் காட்டி வருகின்றன.

பெரும்பாலான திறன்கண்ணாடிகள், பார்வைக்கு இயல்பானவை போல் தெரிந்தாலும் எளிதில் அடையாளம் கண்டுவிடும்படி இருந்தன. இயக்கத்திற்குத் தேவையான கணிப்பொறிகள் திறன்கண்ணாடிகளின் சட்டகத்தில் பொருத்தப்படுவதால் சற்றே தடிமனாக இருக்கும். அதை இயல்பாக்கும் முயற்சியில் ஈவன் ரியாலிட்டி வெற்றி கண்டிருப்பதாலேயே, அதன் கண்ணாடிகள் அமெரிக்காவில் பலராலும் விரும்பப்படும்படி ஆகியிருக்கிறது. 

ஈவன் ரியாலிட்டியின் கண்ணாடிகள் முழுமையான செயற்கை நுண்ணறிவுத் திறன்கண்ணாடிகள் அல்ல. அடிப்படையில் அவை, கண்ணாடி வடிவிலான தொலை உரைக்காட்டிகள் மட்டுமே. ஆனால் உரைகளுக்கு ஏற்ப திரையில் எழுத்துகளை வரவழைப்பதில்தான் அதில் செயற்கை நுண்ணறிவு தேர்ந்த பணியைச் செய்கிறது. பார்க்க இயல்பான கண்ணாடிகள் போன்றிருக்கும் அவற்றுக்குள் பச்சை நிறத்தில் எழுத்துகள் வரும். எவ்வளவு தூரத்தை நாம் பார்க்கிறோமோ அதற்கு ஏற்றாற்போல் திரையில் எழுத்துகளின் வடிவம் தானாக சீராகிக் கொள்ளும். பச்சை நிறத்தில் தெரியும் அந்த எழுத்துகள், உரையின் வேகத்தைக் குரல் மூலம் துல்லியமாகக் கணித்து, அதற்கேற்றாற்போல் எழுத்துகளை மேலும் கீழும் ஓட்டுகிறது. தொலை உரைக்காட்டியின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவின் இணைப்பு, இந்த வசதியை மேம்படுத்தி இருப்பதாக ஈவன் ரியாலிட்டி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

ஈவன் ரியாலிட்டி ஜி1, ஜி2 ரகக் கண்ணாடிகள் ஒருபுறம் பெரும் தொழில்நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளின் விருப்பப் பொருளாக இருக்கும் நிலையில், அதன் மின்கலம், ப்ளூடூத் இணைப்பு, அடிக்கடி நிகழும் தொழில்நுட்பக் கோளாறு, குறிப்பிட சில வெளிச்ச நிலைகளில் எழுத்துகள் தெரியவில்லை போன்ற எதிர்மறை விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 600 டாலருக்குக் கிடைக்கும் இந்தத் தொழில்நுட்ப அதிசயம், விரைவில் இந்தியா போன்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஈவன் ரியாலிட்டி நிறுவனத்தின் வலைத்தளம்

ஈவன் ரியாலிட்டி கண்ணாடி பயனரின் விமர்சனம்

  • விவேக்பாரதி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now