வீட்டுத் திறன்கருவிகள் மையம்

ஆப்பிள் நிறுவனத்தின் திறன் கருவிகளைப் பயன்படுத்தி வீட்டை நடத்தும் மையத்தின் அறிமுகம் 2026க்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திறன் கருவிகளைப் பயன்படுத்தி வீட்டை நடத்தும் மையம் (smart home hub) என்பது வீட்டில் உள்ள அனைத்து திறன் கருவிகளையும் கட்டுப்படுத்தும் வகையிலானது. அதாவது ஓர் இயங்குதளத்தையோ அல்லது ஒரு கரு​வியையோ ​வைத்து, வீட்டி​ல் உள்ள அனைத்து கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். இது வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகள், உணரிகள், தானியங்கி எந்திரங்கள் போன்றவற்றை இதன் ​மூலம் கண்காணிக்க முடியும்.

பல நிறுவனங்கள் இத்தகைய அமைப்பைக் கொண்டுவந்திருந்தாலும், ஆப்பிள் எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த ஆண்டின் இறுதியில் ஒரு வேளை வெளியிடப்படலாம் என்ற கணிப்பு இருந்த நிலையில், அடுத்த ஆண்டே வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக புளூம்பெர்க் இதழில் வெளியான கட்டுரை ஒன்று இதனை உறுதிப்படுத்தியிருக்கிறது.

சிரி (Siri)யின் மேம்பாடுகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது திறன் வீட்டு மையம், அதன் துணை தயாரிப்புகளின் வெளியீட்டை தள்ளிப்போட்டுள்ளது. அதாவது 2026ல் நடைபெறவுள்ள ஆப்பிளின் உலகளாவிய நிரலாளர்கள் மாநாட்டிற்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படும். சிரியுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.

சிரியில் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் திறன், அரட்டையடிக்கும் வசதிகள் சேர்க்கப்படவுள்ளன. அதனால்தான் சிரியின் புதிய வெளியீட்டிற்காக ஆப்பிள் காத்திருக்கிறது. இந்த புதிய கருவி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் வெளியாகியுள்ளன.

ஐபாட் போன்ற ஒரு கருவியைப் போலத்தான் இதன் வடிவமைப்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது.  இதனுடன் சில துணை அமைப்புகளும் இருக்கிறது. மேலும் அதில் பயனர்கள் வைக்கும் எதிர்பார்ப்புகளையும் ஆப்பிள் நிச்சயம் நிறைவேற்றும்.  ஐபோன், ஆப்பிள் டிவி போன்ற ஆப்பிள் தயாரிப்புகளில் எதிர்கால ​​வீட்டு ஓஎஸ்​க்கு தேவையான வானொலி அமைப்புகள் ஏற்கனவே உள்ளமைக்கப்பட்டுள்ளன. அதனால் ஆப்பிள் ஏற்கனவே இதற்குத் தேவையான கட்டமைப்புகளை எல்லாம் உருவாக்கிவிட்டது.

அதோடு திறன்பேசிகளில் கலக்கிவரும் ஆப்பிள் நுண்ணறிவின் பங்களிப்பும் இதில் இருக்கும். இந்த தொழில்நுட்பம் தற்போது ஆப்பிள் ஊழியர்கள், நிரலாளர்களின் பயன்பாட்டில் இருக்கிறது. அவர்களின் கருத்துகளை பொறுத்து மேலும் மாற்றமைடைந்து வெளியாகும். வீட்டிலுள்ள அனைத்து கருவிகளையும், ஒரே தொழில்நுட்பம் ​மூலம் கட்டுப்படுத்துவது நிச்சயம் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். இந்த காலதாமதங்களால் பயனர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now