எழுதுதல் முதல் வங்கிப் பரிவர்த்தனை வரை அனைத்தையும் இன்று நாம் திறன்பேசிகள் மூலமே செய்கிறோம். அப்படி ஒரு பணியில் ஈடுபட்டிருக்கும்போதே அதன் கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் இன்னொரு அறிவிப்பால் திசை மாற நேர்கிறது. இது செய்துகொண்டிருக்கும் பணியில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஆனால், எங்களுக்கு அந்தச் சிக்கல் இல்லை என்கின்றனர் மேக்ரோடிராய்டு என்ற தனியார் செயலி நிர்வகிக்கும் செயலியின் பயனர்கள்.

மேக்ரோடிராய்டு என்பது நாம் வேலை பார்க்கும் திறன்பேசிக்குள் நமக்காக வேலை பார்க்கும் தனிப்பயனாக்க பணியாள். அதாவது, நாம் பயன்படுத்தும் செயலிகளை ஒருங்கிணைத்து, எந்த நேரத்தில் அவை எதைச் செய்ய வேண்டும் என்று மேக்ரோடிராய்டிடம் கட்டளைகளைப் பிறப்பித்தால் போதும், அவற்றைத் திறம்பட வேலை வாங்கி, நமக்கு சிக்கலற்ற திறன்பேசி பயன்பாட்டு அனுபவத்தைக் கொடுக்கும். இதைப் பயன்படுத்தும் பயனர்களில் பலர், இச்செயலியின் கட்டற்ற செயல்பாட்டினால் திறன்பேசியில் ஏதேனும் வேலையைச் செய்யும்போது ஏற்படும் சிக்கல்கள் இல்லாததால், மன அழுத்தமின்றி வேலை செய்ய முடிவதாக கருத்து கூறியுள்ளனர்.
மேக்ரோடிராய்டு செயலியின் முக்கியப் பணியே, பயனரின் தனிப்பயனாக்க அடிப்படையில் திறன்பேசிகளின் செயலிகளை தானாக இயக்குவது மட்டுமே. எடுத்துக்காட்டாக வீட்டின் அருகலையில் (WiFi) நாம் இணைந்துவிட்டாலே திறன்பேசியை அமைதிப் படுத்திக்கொள்ளலாம் (Mute Notifications). புளூடூத் ஒலிப்பான்களைக் காதில் மாட்டியவுடனே பாடல் கேட்கும் செயலி தானாக இயங்கும்படி கட்டளையிடலாம். இரவில் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் தானாக ‘தொந்தரவு வேண்டாம்’ (Do Not Disturb) என்ற அம்சத்தை இயங்க வைக்கலாம். வங்கிப் பரிவர்த்தனை, நோட்ஸ் செயலியில் எழுதுதல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போது குறிப்பிட்ட அறிவிப்புகள் மட்டும் துருத்திக் கொண்டு வரும்படி மாற்றி அமைக்கலாம். இன்னும் பல கட்டளைகளைப் பிறப்பித்து, திறன்பேசி பயன்பாட்டை ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம்.
மேக்ரோடிராய்டின் தானியங்கு அம்சங்கள் கேட்பதற்கு களிநயமூட்டுவதாக இருக்கிறதே. அதைச் செயல்படுத்த மென்பொருளுக்கு எழுதுவதுபோல் கட்டளைகளை எழுத வேண்டுமா என்று கேட்டால், அதைவிட எளிதாகச் செய்துகொள்ளலாம் என்று அதன் பயனர்கள் தெரிவிக்கின்றனர். மேக்ரோடிய்ராடு செயலிக்குள் நுழைந்தாலே, அதற்குள் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வுகளில் நமக்கு வேண்டியதைத் தொட்டு, எந்தச் செயலி எப்படி இயங்க வேண்டும் என்ற கட்டளைகளைப் பிறப்பித்துக் கொள்ளலாம். தொழில்நுட்பத்தில் அதிக பழக்கம் இல்லாதவர்களுக்குக் கூட இந்த வசதி எளிமையாகப் புரிந்துவிடும் என்கின்றனர்.
மேலும், மேக்ரோடிராய்டு செயலிகளை நிர்வகிப்பதுடன் மட்டுமன்றி திறன்பேசியின் மின்கல நலனிலும் கவனம் கொள்வதாக கூறப்படுகிறது. பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயலிகளில் எது அதிகம் மின்கல சக்தியை எடுத்துக் கொள்கிறதோ, அதை மேக்ரோடிராய்டு தற்காலிகமாக உறங்க வைத்து விடுகிறது. இதனால் மின்கல விரயமும் வெகுவாகக் குறைக்கப்படுகிறது.
மேக்ரோடிராய்டு போன்ற பல செயலிகள் இப்பணிகளைச் செய்வதற்காகக் கிடைக்கின்றன. ஆனால் இணையவாசிகள் அதிகமானோரின் விருப்பத்தை இந்தச் செயலி பெற்றிருக்கிறது. தானியங்கு அம்சத்தை நாம் கட்டளைகளாகப் பிறப்பித்ததன்மூலம் நமது தொழில்நுட்ப நலன் (Digital wellness) வளர்கிறது. எந்த நேரத்தில் எந்தச் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒழுங்கு பிறக்கிறது. அது திறன்பேசிக்கு அடிமையாகும் தன்மையிலிருந்து பலரை விலக்கியிருப்பதாகவும் கருத்துகள் காணக் கிடைக்கின்றன.
தனிப்பயன்பாட்டு தானியங்கி செயலியான மேக்ரோடிராய்டின் பலன்களைப் பட்டியலிடும் அதே நேரத்தில் இச்செயலி தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், பலர் இதைப் பயன்படுத்திய சில காலத்திலேயே நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ள கருத்துகளையும் உற்று நோக்க வேண்டியிருக்கிறது. அதாவது செயலிகளை நாம் பயன்படுத்தும் விதத்தை இந்த நிர்வாகச் செயலி குறிப்பெடுத்துக் கொள்வதைக் கூட தனிப்பட்ட தகவல்கள் படித்துக் கொள்ளப்படுவதாகவே கருதப்படுகிறது. இக்கருத்து மெக்ரோடிராய்டு முதலிய பல தனியார் செயலிகளின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறி ஆக்குகிறது.
- விவேக்பாரதி
மேக்ரோடிராய்டு பயன்பாட்டு அனுபவம் குறித்த செய்தி
