சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவோடு இணைந்து படிக்கும் வகையிலான அம்சத்தைச் சோதனை முறையில் ஓபன்ஏஐ வெளியிட்டுள்ளது.

சாட்ஜிபிடி என்பது ஓபன்ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மேம்பட்ட மொழி மாதிரி (Language Model) ஆகும். இது மனிதர்களுடன் இயற்கையான உரையாடலில் ஈடுபடக் கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு இயலி (ChatBot). சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகி செயற்கை நுண்ணறிவுத் துறையில் புயலைக் கிளப்பிவிட்டது. ஆசிரியர்கள் தொடங்கி மாணவர்கள் வரை சாட்ஜிபிடியை பயன்படுத்தி கற்பிக்கவும் கற்கவும் தொடங்கிவிட்டனர். அது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு செயலிகள் நமது பயன்பாட்டிற்காக வந்துவிட்டன.
மனிதர்கள் பேசுவது போன்று இயற்கையாகப் பதிலளிப்பது, கேள்விகளுக்கு பதிலளித்தல், கட்டுரைகள் எழுதுதல், கணினி நிரல்களை உருவாக்குதல், மொழிபெயர்ப்பு, கணிதப் பிரச்சினைகளைத் தீர்த்தல் என இவ்வகைச் செயலிகளின் பணிகளின் வரிசை நீண்டு கொண்டே செல்கின்றன. இந்த வகையில், சாட்ஜிபிடியில் ‘இணைந்து படிக்கலாம்’ எனும் ஒரு சிறப்பு கற்றல் அம்சத்தைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கற்றலை எளிதாக்கி, மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்டுக் கற்றுக்கொள்ளும் அனுபவத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.
சாட்ஜிபிடி பயனர்கள் குறிப்பாக மாணவர்கள் பலர் தற்காலிகமாக இந்த இணைந்து படிக்கலாம் முறையைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சாட்ஜிபிடியின் உரைப்பெட்டியின் கீழ் உள்ள கருவிகள் என்ற பட்டியலில் இந்த இணைந்து படிக்கலாம் அம்சத்தைக் காணலாம். இது முதலில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் புரிதலைப் பற்றித் தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் பதில்களை வடிவமைக்கிறது.
உங்களைப் புரிந்துகொண்டு இந்த அம்சம் ஒரு கற்றல் திட்டத்தைத் தயாரிக்கிறது. மேலும் சிக்கலான பிரச்சினைகளை எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மாற்றுதல், மாதிரி வினாடி வினாக்களை உருவாக்குதல் என இன்னும் பல பணிகளைச் செய்கிறது.
இணைந்து படிக்கலாம் இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளதால், மேலே குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்தும் இறுதி வெளியீட்டில் சேர்க்கப்படுமா என்பது தெரியவில்லை. இது எப்போது நிரந்தரமாக வெளியிடப்படும் என்ற தகவல்களும் வெளியாகவில்லை. இந்த அம்சம் கட்டணம் செலுத்தும் பயனர்கள், இலவச பயனர்கள் என இரு தரப்பிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இறுதி பதிப்பு அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.
இந்த அம்சம் கல்வித்துறையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக இருக்கக்கூடும். தனிப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குவதன் மூலம், இந்தக் கருவி கல்வி உலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர வாய்ப்புள்ளது.
- மு. இசக்கிமுத்து
