வலைத்தளத் தேடல் அனுபவத்தைச் சிறந்ததாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் நோக்கில் வலை வழிகாட்டி (Web Guide) என்ற புதிய அம்சத்தைக் கூகுள் சோதித்து வருகிறது. இது சர்ச் லேப்ஸ் என்னும் கூகுள் பரிசோதனை மேடைகளில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வலை வழிகாட்டி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உங்கள் தேடல் முடிவுகளைச் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நீங்கள் கூகுளில் தேடும்போது தேவையில்லாத நீண்ட பட்டியலைக் காண்பிப்பதற்குப் பதிலாக வலை வழிகாட்டி உங்கள் கேள்வியின் வெவ்வேறு பகுதிகளின் அடிப்படையில் அவற்றை வகைகளாகப் பிரிக்கிறது. உதாரணமாக, கூகுளின் பழைய தேடலில் ‘ஜப்பானில் தனியாகப் பயணம் செய்வது எப்படி?’ எனத் தட்டச்சு செய்தால் தனிப்பட்ட வலைப்பதிவுகள், பயணப்கோப்புகள், அனுபவக் கதைகள் போன்ற கலவையான முடிவுகளையே தரும். ஆனால் வலை வழிகாட்டியில் பயணத் திட்டங்கள், தனிப்பட்ட அனுபவங்கள், அந்த பகுதி சம்பந்தப்பட்ட பண்பாட்டுத் தகவல்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே முடிவுகளாகக் கொடுக்கும்.
இந்த அமைப்பு குழப்பமான தேடல்களுக்குள் தெளிவான வழிகாட்டியை ஏற்படுத்தும். தேடலுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்ட தலைப்புகளைத் தரும். ஒவ்வொரு தலைப்பிற்குள் நுட்பமான, நேர்மையான இணையத்தள பக்கங்களைக் காண்பிக்கும். மேலும் நீங்கள் பழைய நடைமுறையில் முடிவுகளைப் பெற விரும்பினால் அதையும் தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளும் அம்சமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. வலை வழிகாட்டி ஜெமினியின் தனிப்பயன் பதிப்பால் இயக்கப்படுகிறது. கூகுளின் கூற்றுப்படி இது தேடல் கேள்வியையும் இணையத்தில் உள்ள உள்ளடக்கத்தையும் சிறப்பாக புரிந்துகொள்கிறது. மேலும் நீங்கள் முன்னர் கண்டுபிடிக்காத வலைப்பக்கங்களையும் சிறப்பாகக் காண்பிக்கும் சக்திவாய்ந்த தேடல் திறன்களை உருவாக்குகிறது.
வலை வழிகாட்டி மூலம் தேவையான தகவல்களை நேரடியாகத் தேடிச் செல்ல முடியும். தேவையில்லாத இணைப்புகளைச் சொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரே இடத்தில் பல தலைப்புகளை காட்டுவதால் குழப்பத்தையும் தவிர்க்கலாம். இந்த அம்சம் தற்போது மிகக் குறைந்த பயனர்களிடையே சோதனை செய்யப்படுகிறது. இது பொதுவாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கூகுளின் திட்டமாக இருந்தாலும் பயனர்களின் பின்னூட்டத்தை பொறுத்தே அதன் பரந்த விரிவாக்கம் முடிவாகும். இந்த வசதி வரும் நாட்களில் திறன் பேசி, கணினி இரண்டிலும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கூகுளின் வலை வழிகாட்டி என்பது தேடல் அனுபவத்தில் ஒரு புதிய பரிணாமம். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நாம் எதிர்பார்க்கும் துல்லியத்தையும், நேர்த்தியையும் தனது கூகுள் தேடலில் கொண்டு வர முயற்சி செய்கிறது. தேடும் தகவல்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தருவதல்ல மாறாக தகவல்களைத் தெளிவாகப் பிரித்து பயனாளருக்கு ஏற்ற முறையில் வழங்கும் சிறந்த முயற்சி இது.
- சத்யா கோபாலன்
