கூகுள் வீட்டில் கோளாறா?

கூகுள் அசிஸ்டன்ட்ஸைப் பயன்படுத்தி, வீட்டின் மின் கருவிகளைக் கட்டுப்படுத்தும்போது உங்கள் குரல்வழிக் கட்டளையைக் அது கேட்க மறுக்கிறதா? உடனே குழம்பிவிட வேண்டாம். இதே பிரச்னை இருப்பதாகப் பயனர்கள் பலரும் புகார் அளித்துள்ளனர். அதைச் சரி செய்யும் முயற்சியில் கூகுள் நிறுவனமும் இறங்கியுள்ளது.

அமர்ந்த இடத்தில் இருந்தே வீட்டின் கருவிகளைக் குரல் வழியில் இயக்க உதவி செய்கிறது கூகுள் அசிஸ்டன்ட்ஸ். அதன் மூலம் இயல்பான வீட்டைக் கூகுள், திறன் வீடுகளாக (smart homes) மாற்றிவிடுகிறது. அதாவது கூகுள், தனது திறன் இல்லத் தளத்தை, கூகுள் அசிஸ்டன்ட்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளரை மையமாகக் கொண்டு உருவாக்குகிறது. கூகுள் கூடு (Google Nest Hub), கூகுள் வீடு (Google Home) போன்ற கருவிகளின் வாயிலாக, இந்த உதவியாளர் உங்கள் குரல் கட்டளைகளைப் பெற்று, பல்வேறு திறன் கருவிகளான மின்விளக்குகள், விசிறிகள், தொலைக்காட்சி, நீர் சூடேற்றிகள், ஒலிப்பெருக்கிகள், பாதுகாப்பு ஒளிப்படக் கருவிகள் முதலியவற்றை கட்டுப்படுத்துகிறது. இந்த ஒருங்கிணைப்பு, கூகுளின் சொந்த நெஸ்ட் தயாரிப்புகளையும், பிலிப்ஸ் ஹ்யூ, டிபி லின்க் போன்ற  பலதரப்பட்ட நிறுவனங்களின் கருவிகளையும் ஆதரிக்கிறது. அனைத்து கருவிகளும் ஒரே இணைய மேடையில் இணைக்கப்பட்டு, பயனர்கள் தங்கள் வீட்டைச் சுயமாகவும், தடையின்றியும் நிர்வகிக்க உதவுகின்றன.

உலகம் முழுவதும் கூகுள் அசிஸ்டன்ட்ஸ் அம்சத்தை 500 மில்லியன் பேர் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் பலருக்குத் தற்போது, “விளக்குகளை இயக்கு” போன்ற குழு சார்ந்த கட்டளைகள் வேலை செய்யாமல் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஒரு சில பயனர்களுக்கு என்பதன்றி, உலக அளவில் பலரும் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

“இந்தச் சிக்கல் ஒரு குழுவில் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும் கட்டளைகளுக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட விளக்கை மட்டும் இயக்கச் சொல்லும்போது எந்தப் பிரச்னையும் இல்லை” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழப்பத்திற்கு, தொழில்நுட்பத்தில் உட்கோளாறுதான் காரணம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். அதாவது, கூகுளின் சர்வர்களில் ஏற்படும் ஒரு தற்காலிகச் சிக்கல், இந்தத் தகவல் தொடர்புச் சங்கிலியைத் துண்டித்து விடுவதாகக் கூறப்படுகிறது. இது, குரல்வழிக் கட்டளையின் அத்தியாவசியமான பலனான உடனடிச் செயல்திறனை இல்லாமல் செய்துவிடுகிறது.

இந்தச் சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வுகளையும் பயனர்களே கண்டறிந்துள்ளனர். கூகுள் அசிஸ்டன்ட்டிடம் “ஓகே கூகுள்! அனைத்துக் கருவிகளையும் இணை” என்று சொன்னால், அது இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்கிறது. இது தற்காலிகமாக பிழையைச் சரி செய்வதாகக் கூறப்படுகிறது. இதைவிட தீவிரமான தீர்வாக, ஸ்மார்ட் லைட்டிங் சேவையை முற்றிலும் நீக்கிவிட்டு மீண்டும் இணைப்பதும் ஒரு வழியாக பரிந்துரைக்கப்படுகிறது.

கூகுள் தனது திறன் வீடுகள் தளத்தில் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிழைகளில் இதுவும் ஒன்று என்ற விமர்சனம் எழுந்துள்ளது. பயனர்களின் நம்பிக்கை நிலைத்து நிற்க, கூகுள் நிறுவனம் அதன் செயல்திறனையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. திறன் வீடு என்றாலே எந்தவொரு தடையும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதே அடிப்படை. கூகுள், உறுதியளித்தபடி இந்தப் பிழையைச் சரிசெய்து, தனது நம்பகத்தன்மையை மீட்டெடுக்கிறதா என்பதைப் பொறுத்து, திறன் வீடுகள் சந்தையில் அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்பதும் மறுக்கமுடியாது. 

  • விவேக்பாரதி

கூகுள் அசிஸ்டன்ட்ஸ் கட்டளைகளில் கோளாறு குறித்த செய்தி

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now