பழமையான மொ​ழிகள்

மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு கருவி அல்ல. அது மனித வரலாறு, பண்பாடு மற்றும் நாகரிகத்தின் உயிரோட்டமான சான்றாகும். காலப்போக்கில் பல பண்டைய மொழிகள் மறைந்துவிட்டாலும், சில மொழிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, செம்மொழிகளாக உயிர்வாழ்ந்து இன்றும் பேசப்படுகின்றன அல்லது கற்கப்படுகின்றன. சில மொழிகள் தற்கால பண்பாடு, தத்துவம் மற்றும் இலக்கியத்தில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருகின்றன. உலகின் மிகப்பழமையான மொழிகளில் தமிழுக்கு முதன்மையான இடம் உண்டு. வேறென்ன பழமையான மொழிகள் உள்ளன என்று பார்ப்போம்.

உலகின் மிகப் பழமையான வாழும் மொழியாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழி. இது 5,000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான இலக்கிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக கருதப்படும் தமிழ் மொழி, உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7.5 கோடி மக்களால் பேசப்படுகிறது. இது செம்மையான கவிதைகள், இலக்கணம், தத்துவ நூல்கள் உட்பட வளமான இலக்கிய வரலாற்றைக் கொண்டுள்ளது. கணினி, தொழில்நுட்பம், ஊடகம் போன்றவற்றி​ற்கு ஏற்றார்போல், தகவமைத்துக்கொள்கிறது தமிழ் மொழி.

இந்தியாவில் தமிழுக்கு அடுத்தபடியாக வருவது சமஸ்கிருத மொழி. இது ஒரு பண்டைய இந்தோ-ஆரிய மொழி. எனினும் இதன் பயன்பாடு பேச்சுவழக்கில் இல்லை என்றே கூறலாம். தற்போது பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமஸ்கிருதம், மத சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு இந்திய மொழிகளிலும் சமஸ்கிருத சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

3,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட எழுத்து வரலாறு கொண்டது மண்டரின். கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. யுலியாங் லியு (Yuliang Liu) போன்ற சாங் வம்ச மன்னர்களின் கால கல்வெட்டுகளிலிருந்து இம்மொழியின் எழுத்து வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. உலகளவில் 10 கோடிக்கும் அதிகமான மக்களால் இம்மொழி பேசப்படுகிறது.

கிரேக்கம் மகத்தான வரலாற்று, அறிவியல் முக்கியத்துவம் கொண்ட பழமையான மொழியாகும். ஆரம்பகால எழுத்து வடிவமான லினர் பி (Linear B), கி.மு. 1450-1350 காலகட்டத்தைச் சேர்ந்தது. இன்று 1.3கோடிக்கும் மேற்பட்ட மக்களால் நவீன கிரேக்க மொழி பேசப்படுகிறது. தற்கால பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளும் போது, பண்டைய பாரம்பரியத்தையும் தொடர்ந்து சுமந்து செல்கிறது. மேற்கத்திய தத்துவம், அறிவியல் மற்றும் இலக்கியத்தின் அடையாளமாகவே கிரேக்கம் இருக்கிறது.

மரணத்தி​லிருந்து ​மீண்ட மொழியாக கருதப்படும், ஹீப்ரு ஒரு பண்டைய செ​மித்திய மொழி குடும்பத்தை சேர்ந்தது. முக்கியமாக யூத மத நூல்களுடன் தொடர்புடையது. மக்களின் பேச்சுவழக்கிலிருந்து கிட்டத்தட்ட மறைந்துபோன பிறகு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. இப்போது இஸ்ரேலி​ல் ஏறத்தாழ 1 கோடி மக்களால்​ ஹீப்ரு மொழி பேசப்படுகிறது. கலாச்சார மற்றும் மத அடையாளத்துடன் அதன் தனித்துவமான தொடர்பை பராமரித்து வருகிறது ஹீப்ரு.

அரபி மொழி 1,500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது. இ​ஸ்லாமியர்களின் புனித ​​நூலான குரான் அரபி மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது. மத பயன்பாட்டிற்கு அப்பால், இது அறிவியல், இலக்கியம் மற்றும் தத்துவத்தில் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்று மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது.

3,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது அராமிக் மொழி. வளைகுடா நாடுகளில் பேசப்படும் இம்மொழி, இயேசு கிறி​ஸ்துவின் மொழியாக கருதப்படுகிறது. இன்று அழிவின் விளிம்பில் இருந்தாலும், சிரியா, ஈராக் மற்றும் துருக்கியில் உள்ள சிறிய சமூக குழுக்களிடம் பேச்சுவழக்கில் உள்ளது.

2,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது பெர்சியன் (ஃபார்சி) மொழி. ரூமி மற்றும் ஹாஃபேஸ் போன்ற கவிஞர்களின் கவிதைகளால், பெரும் இலக்கிய மரபை கொண்டுள்ளது. இன்று ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில் பேசப்படுகிறது. அடுத்ததாக பார்க்கும் இலத்தீன் மொழி இன்றும் குறிப்பிடத்தக்க செல்வாக்கைத் தக்கவைத்துள்ளது. 2,700 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது ரோமானியப் பேரரசின் மொழி இலத்தீன். மக்களின் பேச்சுவழக்கில் இல்லாவிட்டாலும், வாடிகன் நடவடிக்கைகள், சட்ட சொற்கள், மருத்துவ, அறிவியல் துறைகளில் பெயரிடுதல்கள் வாயிலாக நிலைத்திருக்கிறது.

இந்த மொழிகள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு இடையே ஒரு பாலமாக செயல்படுகின்றன.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now