எம்மி மேடையில் ஆப்பிள் வெற்றி

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் எம்மி விருதுகள் விழா. தொழில்நுட்ப நிறுவனமாய் தொடங்கிக் கலை உலகிலும் தடம் பதித்துள்ள ஆப்பிள் தொலைக்காட்சி+ க்கு மறக்க முடியாத சாதனையாக அமைந்துள்ளது. தி ஸ்டுடியோ  (The Studio) என்ற நகைச்சுவை தொடர், செவேரன்ஸ் (Severance)  என்ற மர்மம் நிறைந்த தொடர் ஆகிய இரண்டும் இணைந்து மொத்தம் 15 எம்மி விருதுகளை வென்றதால், ஆப்பிளின் ஒளிபரப்பு சேவை இத்துறையில் வலுவாக வேரூன்றியிருப்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டது.

23 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட தி ஸ்டுடியோ தொடர், 9 விருதுகளைக் கைப்பற்றியது. தயாரிப்பு வடிவமைப்பு, ஆடை அலங்காரம், தொகுப்பாக்கம், ஒலிக் கலவை போன்ற தொழில்நுட்பப் பிரிவுகளில் இந்த தொடர் சாதனை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக இதே தொடரில்  நடித்த புகழ்பெற்ற நடிகர் பிரையன் க்ரான்ஸ்டன், சிறந்த விருந்தினர் நடிகர் விருதைப் பெற்று ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தார். இது அவர் பெறும் ஏழாவது எம்மி விருது.

ஏற்கெனவே உலகம் முழுவதும் பாராட்டுகளையும் விவாதங்களையும் பெற்ற செவெரென்ஸ் தொடர், 27 பரிந்துரைகளுடன் எதிர்பார்ப்பை உயர்த்தி முன்னணியிலிருந்தது. ஒளிப்பதிவு, இசை அமைப்பு, தலைப்பு வடிவமைப்பு போன்ற பிரிவுகளில் வெற்றி பெற்று 6 விருதுகளைக் கைப்பற்றியது. இந்த தொடருக்கான சிறந்த விருந்தினர் விருதை நடிகை மெரிட் வெவர் பெற்று தொடரின் கதை சொல்லும் வலிமையை உலகத்துக்கு நிரூபித்துள்ளார்.  

ஆப்பிள் தொலைக்காட்சி+ க்கான இந்த சாதனைகள் வெறும் தொடக்கம் மட்டுமே. ஷ்ரிக்கிங், ஸ்லொ ஹார்செஸ், பிரெசெம்ட் இன்னசென்ட் போன்ற தொடர்கள் இன்னும் போட்டியிலிருக்கின்றன. தொழில்நுட்பமும் கலை நுணுக்கமும் கலந்து உருவாக்கப்படும் இந்த தொடர்கள் வருங்கால எம்மி விழாக்களிலும் ஆப்பிள் தொலைக்காட்சி+ தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் என்பத்தில் சந்தேகமில்லை.

ஒரு சாதாரண ஒளிபரப்பு சேவையாகத் தொடங்கிய ஆப்பிள் தொலைக்காட்சி+ இன்று உலக தொலைக்காட்சி மேடையில் தரம், தொழில்நுட்பம், கலை மூன்றையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக மாறியுள்ளது. 15 எம்மி வெற்றிகள் வெறும் விருதுகள் அல்ல அது ஒரு முக்கியமான வெற்றி. உலகளாவிய பார்வையாளர்களிடம் நாங்கள் தரத்துக்கான முகவரி என்கிற ஆப்பிளின் அறிவிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. 

  • சத்யா கோபாலன்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now