கூகுள் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தேடுதல் வசதியை ஆண்டிரய்டு போட்டோ பிக்கர் (Android Photo Picker) இடைமுகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்டிரய்டு போட்டோ பிக்கர் என்பது ஒரு பாதுகாப்பான, உள்ளமைக்கப்பட்ட இடைமுகம் ஆகும். இது பயனாளர்கள் தங்கள் கோப்பு தொகுப்பிலிருந்து, செயலிகளுடன் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இதன்மூலம் செயலிகளுக்கு அனைத்து புகைப்படங்களின் அணுகலையும் வழங்க வேண்டிய அவசியமில்லை. தேவையான சில படங்களுக்கு மட்டும் வழங்கினால் போதும். கடந்த 2022ஆம் ஆண்டு ஆண்டிராய்டு 13 இயங்குதளத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாப்பதையே கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த மேம்படுத்தப்பட்ட போட்டோ பிக்கர் வசதி ஒரு பெரிய வெற்றியாக இருந்தாலும், சில அடிப்படை வசதிகள் காணப்படவில்லை. குறிப்பாக, தேடுதல் அம்சம் இல்லை என்பது பெரிய குறையாக இருந்தது. இப்போது அந்த குறையை தீர்த்திருக்கிறது கூகுள். இனிமேல் புதுப்பித்த பின்னர், போட்டோ பிக்கரின் மேல் பகுதியில் தேடுதல் பட்டை காணப்படும். இது உங்கள் கோப்புகளில் எளிதாகத் தேடி, தேவையான புகைப்படத்தை விரைவாக கண்டுபிடிக்க உதவும்.
சரி எப்படி இந்த அம்சத்தை பெறுவது என்று கேட்டால், August 2025 Google Play system update ஐ பதிவிறக்க வேண்டும். இது மாதாந்திர பாதுகாப்பு பதிப்பிலிருந்து வேறுபட்டது. இதற்கு கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்ற வேண்டும். Settings > Security and privacy > System and updates > Google Play system update. பதிவிறக்கம் செய்த பிறகு, தேடுதல் பட்டைக்கான அம்சத்தை பெற முடியும்.
அடுத்த கட்டமாக படக்குழு பக்கத்தையும் (Collection tab) மேம்படுத்தி வருகிறது கூகுள். திறன்பேசியில் உள்ள கோப்புகளை தனியாகவும், செயலிகளுக்கென ஒரு தனியான கோப்பு வரிசையையும் உருவாக்க இருக்கிறது. இதன் மூலம் பகிர விரும்பும் கோப்புகளை மட்டும் தனிக் கோப்புகளாக பராமரிக்க முடியும். From this device, From your apps என இரண்டு பக்கங்கள் புதிதாக உருவாக்கப்பட இருக்கின்றன. இந்த அம்சமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த புதுப்பிப்புகள் ஆண்டிரய்டு போட்டோ பிக்கரை பயனர்களுக்கு ஏற்றார்போல் மாற்றியமைக்கின்றன.
- மு. இசக்கிமுத்து
