இன்று நாம் ஓட்டும் வாகனத்தில் கைப்பேசியை இணைப்பது, இருக்கைப்பட்டை அணிவது போலவே, ஓட்டுநர்களுக்கு இயல்பான ஒன்றாகி விட்டது. ஆனால், இவ்மைப்புகள் ஒருகாலத்தில் சிக்கலானதும், பயன்படுத்த கடினமான இடைமுகத்தை உடையதாகவும் இருந்தன. வாகன ஓட்டிகள் வழிகாட்டும் வரைபடம் பார்க்க, இசை கேட்க, அல்லது குறுஞ்செய்திகளை வாசிக்க முயன்றபோது, அந்த அமைப்புகளின் மந்தமான செயல்திறன் பெரும்பாலும் சிரமத்தை உருவாக்கியது.

இந்த நிலையை முற்றிலும் மாற்றியவை, ஆப்பிள் கார்பிளேவும் (CarPlay), ஆண்டிராய்டு ஆட்டோவும். இரண்டும் திறன்பேசிகளை கார் திரையுடன் இணைத்து, எளிதில் அணுகக்கூடிய வசதிகளை வழங்கின. கார்பிளே, ஆப்பிள் நிறுவனத்தின் வடிவமைப்பு தத்துவத்தை நேரடியாக பிரதிபலிக்கிறது. எளிமையும் ஒரே மாதிரியான அனுபவத்தையும் வழங்கும் இந்த அமைப்பு, ஐபோன் பயன்படுத்தி பழகியவர்களுக்கு உடனே பழக்கமான சூழலை உருவாக்குகிறது. ஜஸ்ட் வொர்க்ஸ் (Just works) என்ற ஆப்பிளின் முக்கியக் கொள்கையை இது முழுமையாக பின்பற்றுகிறது. இதற்கு மாறாக, ஆண்டிராய்டு ஆட்டோ, கூகுள் போன்று வெளிப்படையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. அதிக தனிப்பயனாக்கமும் விரிவான கட்டுப்பாடுகளும், பல்வேறு அம்சங்களும் தேடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
கார்பிளே எளிமையையும் நம்பகத்தன்மையையும் முன்னிலைப்படுத்தும் நிலையில், ஆண்டிராய்டு ஆட்டோ புதுமையும் விருப்பத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஆண்டிராய்டு ஆட்டோவில் கூகுளின் ஜெமினி செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட்டிருப்பதால், கார் ஓட்டும்போது வரும் குறுஞ்செய்திகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் வாசிக்காமல், அவை அமைதியாகிய பிறகு சுருக்கமாகச் சொல்லும் திறன் அதற்கு கிடைத்துள்ளது. சிரி பயன்படுத்தும்போது, ஒவ்வொரு கட்டளைக்கும் புதிதாக கேள்வி கேட்க வேண்டியிருக்கும். இதேபோல், கூகுள் ஹோம் கருவிகளை கார் ஓட்டும் போதே கட்டுப்படுத்தும் திறனும் ஆண்டிராய்டு ஆட்டோவுக்கு உள்ளது, ஆனால் கார்பிளேயில் சிரி சுருக்குவழிகள் (Shortcuts) வழியாக இயக்க முயல்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சிலவற்றை மறுக்கும்.
செயலி ஆதரவிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. ஆண்டிராய்டு ஆட்டோவில் வழிகாட்டி, பார்க்கிங், இசை, செய்தி உள்ளிட்ட பல மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த முடிகிறது. ஆனால், கார்பிளேயில் ஆப்பிள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்குவதால் அங்கு செயலிகள் ஒப்பீட்டளவில் குறைவு.
தனிப்பயனாக்கம் விரும்புபவர்களுக்கு ஆண்டிராய்டு ஆட்டோ அதிக சுதந்திரம் அளிக்கிறது. ஹோம் ஸ்கிரீனில் விருப்பமான செயலிகளை முன்னிலைப்படுத்துதல், வண்ண தீம் மாற்றுதல் போன்ற வசதிகள் உள்ளன. கார்பிளேயிலும் ஐஒஎஸ் 26 மேம்பாடுக்குப் பிறகு, புதிய திரைப்பின்னணியும் செயலி கூறுகளும் (widget) அதிகமாகியுள்ளன.
தற்போதைக்கு சில வகை வாகனங்களில் மட்டுமே ஜெமினி இணைப்பு வந்திருக்கிறது. ஆண்டிராய்டு ஆட்டோவை, பயன்படுத்தியோர் கருத்துப்படி, ஜெமினி ஏஐ இணைப்பால் தற்போது ஆண்டிராய்டு ஆட்டோ இயங்குதளத்தின் செயல்பாடுகளில் சிறப்பான முன்னேற்றம் உள்ளது. ஆப்பிள் நுண்ணறிவு இணையும்போது அதன் திறனும் மேம்படும். இரண்டின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு நம்முடைய தேவை எதுவோ அதைப் பயன்படுத்தலாம்.
- அருட்செல்வம்
