ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் தனது முக்கியமான சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் நோக்கில், சாட்ஜிபிடிகோ (ChatGPT Go) திட்டத்தை ஓர் ஆண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. நவம்பர் 4-ம் தேதி தொடங்கும் இந்த சலுகை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கெனவே சாட்ஜிபிடிகோ சந்தாதாரர்களும் இலவச பன்னிரண்டு மாத திட்டத்துக்கு தகுதியுடையவர்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாதம் 5 டாலருக்கும் குறைவான விலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் சாட்ஜிபிடிகோ அறிமுகமானது. இது ஓப்பன்ஏஐயின் மிகக் குறைந்த கட்டணத் திட்டமாகும். பின்னர் இந்தோனீசியாவுக்கும், ஆசியாவின் பல நாடுகளுக்கும் இச்சேவை விரிவாக்கப்பட்டது. எழுபது கோடிக்கும் அதிகமான திறன்பேசிப் பயனர்கள், நூறு கோடிக்கும் மேற்பட்ட இணைய சந்தாதாரர்களைக் கொண்ட உலகின் அதிக மக்கள்தொகை நாடான இந்தியா ஓப்பன்ஏஐக்கு முக்கியமான சந்தையாக உள்ளது.
இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் புது தில்லியில் அலுவலகம் அமைத்து தற்போது உள்ளூர் குழுவை உருவாக்கி வருகிறது. ஓப்பன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் (Sam Altman) அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய சந்தை எனத் தெரிவித்துள்ளார். எனினும், இந்தியாவில் கட்டணத் திட்டங்கள் மூலம் வருமானம் ஈட்டுவது சவாலாக உள்ளது. ஆகஸ்ட் வரை 90 நாள்களில் 2.9 கோடி பதிவிறக்கங்கள் இருந்தபோதிலும், செயலியை வாங்குதன் வழியாக வெறும் 3.6 மில்லியன் டாலர் மட்டுமே கிடைத்தது.
சாட்ஜிபிடிகோ வழக்கமான இலவசப் பதிப்பைவிட பத்து மடங்கு அதிகப் பயனுள்ளது. பதில்களை உருவாக்குதல், படங்களை உருவாக்குதல், கோப்புகளைப் பதிவேற்றுதல் ஆகியவற்றில் மேம்பட்ட அம்சங்கள் கிடைக்கின்றன. மேம்படுத்தப்பட்ட நினைவகத்துடன் தனிப்பட்ட பதில்களும் வழங்கப்படுகின்றன. இதைத் தற்போது குறுகிய காலச் சலுகையாக இலவசமாகக் கொடுக்கிறார்கள். சாட்ஜிபிடி தலைவர் நிக் டர்லி (Nick Turley) இந்தியப் பயனர்களின் படைப்பாற்றல் ஊக்கமளிப்பதாக உள்ளதாகவும், இந்தக் கருவிகளால் பயனர்கள் வியக்கத்தக்க உள்ளடக்கங்களை உருவாக்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
பெர்ப்ளெக்சிட்டி (Perplexity), கூகுள் போன்ற போட்டியாளர்களும் இந்தியச் சந்தையில் கவனம் செலுத்துகின்றனர். பெர்ப்ளெக்சிட்டி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து 36 கோடி சந்தாதாரர்களுக்கு இலவச சேவை வழங்குகிறது. கூகுள் மாணவர்களுக்கு ஓர் ஆண்டு இலவச AI Pro திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஓப்பன்ஏஐ நவம்பர் 4-ம் தேதி பெங்களூரில் கணினி வல்லுநர்களுக்கான (DevDay Exchange) மாநாட்டை நடத்த உள்ளது. இந்தியாவுக்கென சிறப்பு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
- செல்லினம் குழு.
