ஆப்பிள் விழா ஏற்பாட்டாளன்

விருந்துகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பும் ஆப்பிள் செயலியில் பல்வேறு மேம்பாடுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

நாம் நிகழ்ச்சிகளுக்கு நேரில் சென்று அச்சு அழைப்பிதழ் கொடுப்பது போல, தொழில்நுட்ப உலகில் அழைப்பிதழ் உருவாக்கி அனுப்ப உதவுவதுதான் ஆப்பிள் இன்வைட்ஸ் (Apple Invites).

பாரம்பரிய அச்சு அழைப்பிதழ்கள் எப்படி அழகான வடிவமைப்புகளுடன் இருக்குமோ, அதேபோல இந்த செயலியும் மல்டிமீடியா அம்சங்களுடன் கூடிய அழைப்பிதழ்களை உருவாக்க உதவுகிறது. நிகழ்ச்சிக்கு ஏற்ற பின்னணி படங்கள், புகைப்படங்கள், இசை பட்டியல்கள் என எல்லாவற்றையும் சேர்த்து தனித்துவமான அழைப்பிதழை உருவாக்கலாம். அழைக்கப்படும் விருந்தாளிகள் தாங்கள் கலந்துகொள்வோம் (RSVP) என்று பதிலளிக்கலாம். அதோடு பகிரப்பட்ட புகைப்படங்களிலும் இசைப் பட்டியல்களிலும் தங்களுக்கு விருப்பமானவற்றை சேர்க்கலாம். வரைபடங்கள் (Maps) உடன் இணைந்து வழிகாட்டுதலும், வானிலை தகவலும் வழங்கப்படுகின்றன.

இதுவரை பயனர்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி அழகான அழைப்பிதழ்களை உருவாக்கி, நண்பர்கள், குடும்பத்தினருக்கு அனுப்பி வந்தனர். பிறந்தநாள் விழாக்கள், திருமண வரவேற்பு, வீட்டு விருந்துகள், பண்டிகை கொண்டாட்டங்கள் என பல நிகழ்வுகளுக்கு இதைப் பயன்படுத்தினர். விருந்தாளிகள் தாங்கள் வருவோம் என்று பதிலளிக்க முடிந்தது, புகைப்படங்களையும் இசையையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது. ஆனால் முக்கியமான ஒரு சில வசதிகள் விடுபட்டிருந்தன.

எடுத்துக்காட்டாக, ஒரு பிறந்தநாள் விழாவுக்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர் “நாங்கள் வருகிறோம்” என்று பதிலளித்தால், அவர் மட்டும் வருகிறாரா, அல்லது அவரது கணவர்/மனைவியும் குழந்தைகளும் சேர்ந்து வருகிறார்களா என்பது தெரியாது. குழந்தைகளுக்கான சிறப்பு உணவு, விளையாட்டு ஏற்பாடுகள், இருக்கை வசதி போன்றவற்றைத் திட்டமிட இந்த விவரம் மிக அவசியம். அதனால் தனியாக அழைத்து அல்லது செய்தி அனுப்பி “எத்தனை பேர் வருவீர்கள்? குழந்தைகள் வருகிறார்களா?” என்று கேட்க வேண்டியிருந்தது.

இதை இப்போது தீர்த்து வைத்திருக்கிறது ஆப்பிள். சமீபத்தில் வெளியான பதிப்பு 1.6 இல், விருந்தாளிகள் இனி எத்தனை பேர் வருவார்கள், அதில் எத்தனை பெரியவர்கள், எத்தனை குழந்தைகள் என்ற விவரங்களையும் துல்லியமாகக் கொடுக்க முடியும். இது விழா ஏற்பாட்டாளர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கிறது.

இந்த புதுப்பிப்பில் ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கமான பிழை திருத்தங்களும் செயல்திறன் மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த செயலி ஆப்ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கிறது. விழா ஏற்பாட்டாளர் iCloud+ சந்தா வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும் அவசியம். ஆனால் விருந்தாளிகளுக்கு எந்த சந்தாவும் தேவையில்லை.

ஆப்பிள் இன்வைட்ஸ் செயலி தொடர்ந்து புதிய அம்சங்களுடன் வளர்ந்து வருகிறது. செப்டம்பரில் நாட்காட்டி ஒத்திசைவு, காணொளிகளை மீண்டும் பார்க்கும் வசதி சேர்க்கப்பட்டது. ஆகஸ்ட்டில் நிகழ்ச்சிக்கு எத்தனை நாள்கள் உள்ளன என்பதைக் காட்டும் கவுன்ட்டவுன் விட்ஜெட் அறிமுகமானது. அக்டோபரில் பண்டிகை நிகழ்வுகளுக்கான சிறப்பு பின்னணி படங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு புதுப்பிப்பும் பயனர்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது.

பண்டிகை காலத்தில் விருந்துகளை ஏற்பாடு செய்பவர்களுக்கும், கலந்துகொள்பவர்களுக்கும் இது நேரத்தையும் குழப்பத்தையும் மிச்சப்படுத்தும் அற்புதமான வசதி. ஆப்பிள் இன்வைட்ஸ் வெறும் அழைப்பிதழ் அனுப்பும் செயலி மட்டுமல்லாமல் முழுமையான நிகழ்ச்சி மேலாண்மை கருவியாக வளர்ந்து வருகிறது

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now