ஜப்பானின் இஸ்ஸே மியாக்கே ஆடை நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் இணைந்து ஐபோனுக்கான புதிய பையை அறிமுகப்படுத்தின. சமூக வலைத்தளங்களில் பகடி செய்யப்பட்ட இந்தப் பை முற்றிலும் விற்றுத் தீர்ந்துவிட்டது.

இந்த ஆடை நிறுவனம் மறைந்த வடிவமைப்பாளர் இஸ்ஸே மியாக்கேயின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஸ்டீவ் ஜாப்ஸின் புகழ்பெற்ற கருப்பு டர்ட்டில்நெக் சட்டையை வடிவமைத்தவர் இவர்தான். இப்போது இந்த ஆடை நிறுவனமும் ஆப்பிளும் இணைந்து பல வண்ணங்களில் புதிய ஐபோனுக்கான தோள்பட்டை பைகளை உருவாக்கியுள்ளன.
ஐபோன் தோள்பட்டை பை என்பது நீளமான ஒற்றை துணி. அதன் நடுவில் ஐபோனை வைப்பதற்கான இடைவெளி போன்ற பை அமைப்பு உள்ளது. இந்த பை ஐபோனின் கேமராக்கள் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன், ஏர்பாட்ஸ் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் சிறிய பொருள்களை எடுத்துச் செல்ல இந்த பை உதவுகிறது.
இந்த பை முப்பரிமாண முறையில் நெய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் சிறப்பம்சம். முப்பரிமாண நெசவு இயந்திரம் ஒரு தொடர்ச்சியான நூலை எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக வளையங்களை உருவாக்கி பையின் வடிவமைப்பை உருவாக்குகிறது. மரபான நெசவுடன் ஒப்பிடும்போது, இதில் வெட்டுதல் இல்லை, பொருள்களை வீணாக்குவதும் இல்லை. மேலும் இறுதி தயாரிப்பு ஒற்றைத் துணித் துண்டிலிருந்து உருவாக்கப்படுகிறது.
“ஐபோன் பையின் வடிவமைப்பு ஐபோனுக்கும், பயனருக்கும் இடையே ஒரு வித பிணைப்பை உருவாக்குகிறது” என்று மியாக்கே டிசைன் ஸ்டுடியோவின் வடிவமைப்பு இயக்குனர் யோஷியுகி மியாமே தெரிவித்திருக்கிறார்.
இந்த ஐபோன் பை இரண்டு வித நீளங்களில் விற்பனைக்கு வந்தது. குறுகிய நீளம் கொண்ட பை $149.95 விலையில் எட்டு வண்ணங்களில் அறிமுகமானது. எலுமிச்சை, ஆரஞ்சு, ஊதா, இளஞ்சிவப்பு, மயில், நீலம், இலவங்கப்பட்டை, கருப்பு என வண்ணங்கள் விதவிதமாக இருக்கின்றன. நீண்ட நீளம் கொண்ட பை நீலம், இலவங்கப்பட்டை, கருப்பு வண்ணங்களில் மட்டும் $229.95 விலையில் அறிமுகமானது.
இந்த இரண்டு வித பைகளும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வந்தது. இதனை ஆப்பிளின் தனித்துவமான கடைகளில் மட்டுமே பெற முடியும். பிரான்ஸ், பெரிய சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆன்லைன் apple.com இல் மட்டுமே கிடைக்கும். ஆப்பிள் கடைகளில் நேரடியாக சென்று வாங்கினால், ஐபோனை பைக்குள் வைத்து எப்படியெல்லாம் வைத்து பயன்படுத்தலாம் என்பதை நேரடியாக விளக்குவார்களாம்.
இந்தப் பையின் படம் வெளியானதும் சமூக வலைத்தளங்கள் இவ்வளவு விலையா இதெல்லாம் ஒரு வடிவமைப்பா என்று எள்ளி நகையாடும் செய்திகள் வந்தன. ஆனால் விற்பனை அமோகம். எந்த நாட்டிலும் மிச்சம் மீதி இல்லாமல் விற்றுத் தீர்ந்துவிட்டதாம். குறைந்த அளவே தயாரிக்கப்பட்ட தனித்துவமான பைகள் (limited edition) என்பதும் காரணம். இனிமேல் இது தயாரிக்கப்படுமா விற்பனைக்கு வருமா என்பது தெரியவில்லை. வாங்கலாமா வேண்டாமா என யோசித்துத் தவறவிட்டுவிட்டதாகச் சில பயனர்கள் வருந்துகின்றனர். இதனால் போலித் தயாரிப்புகள் வரவும் வாய்ப்புள்ளது.
- மு. இசக்கிமுத்து
