கணினியுடன் இணையும் கூகுள்

கூகுள் ‘கணினி இணைப்பு’ (PC Connect) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மெய்நிகர் கருவிகளில் புதிய அனுபவத்தைத் தரவல்லது.

நவீன கணினி விளையாட்டுகள் மிக உயர் தரமான வரைகலை (கிராபிக்ஸ்) கொண்டவை, அதிக செயலாக்க சக்தி தேவைப்படும். மெய்நிகர் யதார்த்த கருவிகளில் உள்ள செயலி குறைந்த சக்தி கொண்டது. சாதாரண விளையாட்டுகளை மட்டுமே விளையாட முடியும். நவீன கணினி விளையாட்டுகள் பலவும் மெய்நிகர் கருவியில் இயங்காது.

இதற்கான தீர்வை தேடி அலைந்த நிறுவனங்க​ளின் கண்களுக்கு சிக்கியதுதான் கணினியுடன் இணைப்பது. கணினியில் சக்தி வாய்ந்த செயலி, வரைகலை அட்டை (கிராபிக்ஸ் கார்டு) இருக்கும். அதன் சக்தியைப் பயன்படுத்தி, விளையாட்டு கணினியில் இயங்கும், காட்சி மட்டும் மெய்நிகர் கருவிக்கு அனுப்பப்படும்.

ஆனால் இதை செய்ய பழைய முறையில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. அதற்கென இணைப்பு கம்பி தேவை, விலை அதிகம், இணைப்பது கடினம். கம்பி இருப்பதால் சுதந்திரமாக நடமாட முடியாது.

கூகுள் இந்த சிக்கல்களை எல்லாம் தீர்த்துள்ளது. கணினி இணைப்பு என்ற மென்பொருள் தீர்வு மூலம் எல்லாமே எளிதாக்கப்பட்டிருக்கிறது.

முதலாவதாக, இணைப்பு கம்பி தேவையில்லை. வைஃபை வழியாக கணினியும் மெய்நிகர் கருவியும் தொடர்பு கொள்கின்றன. அறை முழுவதும், வீடு முழுவதும் சுதந்திரமாக நடமாடலாம்.

இரண்டாவதாக, இரண்டு சூழல்களும் ஒரே நேரத்தில் இயங்குகின்றன. கணினி காட்சியில் இயங்கும் விளையாட்டை, மெய்நிகர் சூழலில் உணர முடியு​ம். இது எல்லாம் கூகுளின் எளிமையாக்கும் நடவடிக்கைகள். மேம்படுத்தும் நடவடிக்கையாக ஜெமினி செயற்கை நுண்ணறிவை உள்ளே சேர்த்திருக்கிறது கூகுள்.

நீங்கள் ஒரு கடினமான விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். “இந்த எதிரியை எப்படி தோற்கடிப்பது?” என்று ஜெமினி செயற்கை நுண்ணறிவை கேட்கலாம். அது கணினி திரையைப் பார்த்து என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு உதவிக்குறிப்புகளைத் தருகிறது. திரையில் குறிப்பிட்ட இடங்களை சுட்டிக்காட்டி விளக்குகிறது. விளையாட்டில் வெற்றிபெற ஜெமினி செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.

கூகுள் தனது கணினி இணைப்பு அம்சத்தை முதன் முறையாக சாம்சங்கின் கேலக்ஸி எக்ஸ்ஆர் மெய்நிகர் கருவியில் கொண்டுவந்திருக்கிறது. ஏற்கனவே கேலக்ஸி எக்ஸ்ஆர் மெய்நிகர் கருவியை வாங்கியவர்கள் உடனடியாக இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.

கம்பியில்லாமல், ஒரு சொடுக்கில், கணினியுடன் இணைக்கும் வசதி பெரிய முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இணைந்து இன்னும் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது. கூகுள் தொழில்நுட்பத்தை எளிதாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளது, இது பலருக்கும் மெய்நிகர் யதார்த்தத்தை அணுகக்கூடியதாக ஆக்கும்.

  • இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now