பயண வழிகாட்டலில் புதிய திருப்பம்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வரும் வழிகாட்டி செயலியான வேஸ் (Waze), நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கியமான வசதியை தற்போது சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. போக்குவரத்து சமிஞ்சை விளக்குகளை வரைபடத்தில் காட்டும் இந்த புதிய அம்சம், பயண திட்டமிடலில் ஓட்டுநர்களுக்கு கூடுதல் உதவியாக இருக்கும்.

பல ஆண்டுகளாகவே வேஸ் பயனாளர்கள், “போக்குவரத்து விளக்குகள் எங்கே உள்ளன?” என்பதைக் காட்டும் வசதியை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இந்த அம்சம் தற்போது இஸ்ரேலில் மட்டும் குறைந்த அளவில் சோதனைக்காக வழங்கப்படுகிறது. பயண வழிகாட்டல் செயல்பாட்டில் இருக்கும் போது, ஓட்டுநர்களின் கவனம் சிதறாமல் இருக்க, வரைபடத்தில் அதிகபட்சமாக மூன்று போக்குவரத்து விளக்குகள் மட்டுமே ஒரே நேரத்தில் காட்டப்படுகின்றன.

பயண வழிகாட்டலைத் தொடங்காத நிலையில், சாதாரண வரைபட பார்வையில், பயனாளர்கள் தங்கள் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள பல்வேறு போக்குவரத்து விளக்குகளைக் காண முடியும். இது புதிய இடங்களில் பயணம் செய்பவர்களுக்கு சந்திப்புகள், முக்கியமான சாலை இணைப்புகளை முன்கூட்டியே புரிந்து கொள்ள உதவும்.

இந்த அம்சம் தற்போது ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், அனைத்தும் முழுமையாக துல்லியமாக காட்டப்படுகிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், இந்த வசதி எப்போது உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்பதற்கான காலக்கெடு குறித்தும் வேஸ் நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

போக்குவரத்து நெரிசல், விபத்து எச்சரிக்கை, சாலை மூடல் தகவல்கள் போன்ற அம்சங்களால் பிரபலமான வேஸ், இந்த புதிய வசதியுடன் மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால், வருங்காலத்தில் உலகளாவிய பயனாளர்களுக்கும் இந்த வசதி விரைவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

2006 ஆம் ஆண்டு இஸ்ரேலில் தொடங்கப்பட்ட வேஸ், 2013 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. இருந்தும் தனித்துவமான செயலியாகவே இயங்கி வரும் வேஸ், கூகுள் வரைபடத்திலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை கொடுக்கிறது. வேஸ் செயலியின் மிகப்பெரிய பலம், அதன் பயனாளர்களே தகவல் வழங்குபவர்கள் என்பதுதான்.

வாகன ஓட்டுநர்கள் தாங்கள் செல்லும் பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்து, காவல் சோதனை, சாலைப் பணிகள் போன்றவற்றை செயலியில் உடனே பதிவிட முடியும். அந்த தகவல்கள் மற்ற ஓட்டுநர்களுக்கும் உடனடியாகக் கிடைப்பதால், அவர்கள் மாற்றுப் பாதைகளை தேர்வு செய்ய முடிகிறது. இதனால் பயண நேரம் குறைவதுடன், தேவையற்ற தாமதமும் தவிர்க்கப்படுகிறது.

வேஸ் செயலி குறுகிய நேரத்தில் இலக்கை அடைய உதவும் பாதையையே முதன்மையாகக் காட்டுகிறது. நெரிசல் அதிகமாக உள்ள சாலைகளை தவிர்த்து, குறைந்த போக்குவரத்து உள்ள வழிகளை பரிந்துரைப்பது இதன் முக்கியமான அம்சமாகும். அதே நேரத்தில், வேகக் கட்டுப்பாடு, அபாயகரமான சாலைப் பகுதிகள் போன்ற எச்சரிக்கைகளையும் வழங்குகிறது.

குரல் வழிகாட்டல், பயனாளர்கள் விருப்பப்படி தேர்வு செய்யக்கூடிய குரல் அமைப்புகள், வாகன ஓட்டுநர்களை ஈர்க்கும் எளிய வரைபட வடிவமைப்பு ஆகியவையும் வேஸின் சிறப்பம்சங்களாக உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்ந்து புதிய வசதிகளைச் சேர்த்து வரும் வேஸ், இன்றைய காலத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான ஒரு நம்பகமான துணையாக மாறியுள்ளது.

  • சத்யா கோபாலன்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now