தமிழி என்றழைப்போம் : மார்க்சியகாந்தி

மொழியும் அதன் எழுத்து வரிவடிவமும் ஒன்றுபோலவே வளர்ச்சியடைவதில்லை. வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு படிநிலையில் வளர்பவை. இந்தப் புரிதலை முன்னிறுத்தி, சென்னையில் பிப்ரவரி மாதம் நடந்த உலகளாவிய கல்வெட்டியல் மாநாட்டில் தமிழி பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார் முனைவர் மார்க்சியகாந்தி. தமிழி என்ற பெயரின் அவசியத்தை பெயரிடுதல் முறை (Nomenclature) பற்றிய விளக்கங்களுடன் உரையாக வழங்கினார். 

tamizi

தன் உரையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார் மார்க்சியகாந்தி. தமிழ் மொழி. தமிழ் எழுத்து வரிவடிவம். இரண்டின் பெயர்களையும் பெயரிடல் முறை வழியாக ஆராய்ந்து விளக்கினார்.

ஹோமோசேப்பியன்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி (Out of Africa) பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தனர். இந்தக் கருத்தாக்கம் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. அப்படி வந்தவர்கள் பண்டைய தமிழ்நிலத்திலும் வாழ்ந்தனர். அத்திரம்பாக்கத்தில் கிடைத்த கற்காலக்கருவிகள் அதை உறுதிசெய்கின்றன. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விருமாண்டியிடம் ஹோமோசேப்பியனின் டிஎன்ஏ (M130 genetic marker) இருப்பதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் மனிதர்கள் வசித்ததில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. 

அடுத்தது அவர்கள் பேசிய மொழி. வளமான நாகரிகம் மொழி செழித்து வளர ஏதுவான காலம். இன்றைக்குச் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புப் பயன்பாடு இருந்ததற்கான சான்றுகள் நம்மிடம் உள்ளன. சங்கப்பாடல்களில் 35000 அடிப்படைச் சொற்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். சொல்வளம் மிக்க தமிழ் மொழி பழங்காலத்தில் தோன்றிய செம்மொழியாகவே அறியப்படுகிறது. தமிழ் நிலம் சங்கப்பாடல்களில் வரையறுக்கப்பட்டுள்ளது. தங்கள் மொழியை இந்நிலத்தில் வாழ்ந்தோர் தமிழ் என்றே அழைத்தனர். 

மற்ற மொழியில் தமிழர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் மொழியில் இந்த ஒலிகள் இல்லாதபோது அதற்கு நெருக்கமான ஒலியைப் பயன்படுத்தி எழுதினர். தமிலி, தமிரா என மாற்றம் பெற்றது தமிழ் (Damili, Damira, Damela, Dameda). பாலி, பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளில் தமிழ் வெவ்வேறாக மாறி ஒலித்தது. இலங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை தமிழ் என்ற வேர்ச்சொல்லில் இருந்து நேரடியாக ஏற்பட்ட மாற்றங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. இந்த மாற்றத்துடன் கிடைக்கும் கல்வெட்டுகள் பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டுவரை உள்ளன.

த்ராவிட என்கிற சொல் இதிலிருந்து உருவான இரண்டாம் நிலை மாறுபாடு. பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் இது. மற்றவர்கள் தமிழரைக் குறிக்கப் பயன்படுத்திய சொல் என்பதைத் தாண்டி பலவற்றையும் குறிப்பதாக இச்சொல் இருக்கிறது. த்ராவிட என்ற சொல் ஓர் இடத்தையோ மன்னரையோ குறிக்கும். தொண்டைமண்டலப் பல்லவரையோ பொதிகை மலைப் பாண்டியனையோ குறிப்பிட இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகியவற்றை பஞ்சதிராவிட என்கிறது ராஜதரங்கிணி. திராவிடி என்ற சொல் எழுத்து வரிவடிவத்தின் பெயராக மஹாயான லலிதவிஸ்தரா நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம்நிலைத் திரிபான, பரந்துபட்ட பொருளில் கையாளப்படும் திராவிட என்பதைவிட தமிழ் என்பதே இம்மொழிக்குச் சரியான சொல்.

ஆய்வாளர்களும் தமிழ் என்பது உள்ளூர் மக்களால் தங்களைக் குறிப்பிடப் பயன்படுத்திய சொல் (endonym) என்றே கூறுகின்றனர். தம்+இழ், தம்+இல், தவ்+இழ், தக்+இழ் எனப் பலவாறு இதை விளக்க முயன்றுள்ளனர். தம்முடைய மொழி எனப் பொருள்தரும் தமிழின் வேர்ச்சொற்களை ஆராய முயன்றுள்ளனர். முழு- முழி- மொழி – தம்+மொழி என்றும் ஒரு விளக்கம் உள்ளது. தேவனேயப் பாவாணர், இதை ஒரு மர்மம் என்று விளக்கி முடித்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் வேர்ச்சொற்கள் ஆராயும் முயற்சியை அறிஞர்கள் கைவிட்டனர். 

மார்க்சியகாந்தியின் ஆய்வுக் கட்டுரை இத்தகவல்களைப் பதிவுசெய்து தமிழ் என்கிற சொல்லை புதிய கண்ணோட்டத்தில் பிரித்து ஆராய்கிறது. 

தம் + இமிழ் = தமிழ்.

இமிழ் என்பதற்கு ஒலித்தல், முழங்குதல் என்று பொருள் தருகிறது அகராதி (to sound, to buzz, to roar, to sprout, and to bind). தம், இமிழ் ஆகிய இரு சொற்களும் இயல்பாகப் புணர்ந்து தமிழ் என்றாகிறது. தம் ஒலி, தம் குரல், தம் முழக்கம், தம் மொழி என்கிற பொருள் தருகிறது தமிழ். மார்க்சியகாந்தியின் இவ்விளக்கம் மிகப் பொருத்தமாகவும் இயல்பாகவும் இருக்கிறது. எனவே தமிழ் மொழியைத் தமிழ் என்றழைப்பதே சாலச் சிறந்தது என வலியுறுத்தியது அவர் உரையின் முதல் பகுதி.

இரண்டாவது பகுதி தமிழ் வரிவடிவம் பற்றியது. 

இந்தியாவின் பழங்கால எழுத்து வடிவங்கள் பிராமி என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. புராண நம்பிக்கையின்படி பிரம்மன் உருவாக்கியது எழுத்து என்பதன் அடிப்படையில் பிராமி என்கின்றனர். தனி நபர் உருவாக்கிய சொல் அல்ல இது. ஜைன, பௌத்த மரபுகளில் காணப்படும் இப்பெயரை நவீன ஐரோப்பிய ஆய்வாளர்கள் எடுத்தாண்டு நிலைக்கச்செய்துவிட்டனர். 1837ல் ஜேம்ஸ் பிரின்செப் (James Princep) பயன்படுத்தியதில் இருந்து கல்வியியல் தளத்தில் இச்சொல்லே பயன்பாட்டில் உள்ளது. 

இந்திய எழுத்துமுறையை விவரிக்கும்போதெல்லாம் இச்சொல் எடுத்தாளப்பட்டது. இந்தியக் கல்வெட்டியல் துறையில் இச்சொல் முக்கியமான சொல்லாக மாறியது. அசோக, மெளரிய கல்வெட்டுகள் படிக்கப்பட்டபோது அந்த எழுத்து வரிவடிவங்களுக்கு பிராமி என்றே பெயரிட்டனர். தெற்கில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை அதன் தொடர்ச்சியாகவே பார்த்தனர். படிக்கமுடியாத எழுத்துகள் நிறைய இருந்தும் அதை வேறு ஒரு மொழியாக, வரிவடிவமாக எண்ணவில்லை.

பட்டிப்புரோலு கல்வெட்டுகள் படிக்கப்பட்டபோதும் அது பிராமியின் கிளையாகவே கருதப்பட்டது. பட்டிப்புரோலு எழுத்து முறை திராவிட ஒலியியலுக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவம் என்று அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். மற்றொரு மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது இலங்கைக் கல்வெட்டுகளில். இங்கு ஏராளமான பிராகிருத, தமிழ் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. 

தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளும் பிராகிருதத்தில் எழுதப்பட்டவை என்று தொடக்கத்தில் கருதப்பட்டன. கே.வி. சுப்பிரமணிய அய்யர் மற்றும் கிருஷ்ண சாஸ்திரி ஆகியோரின் முயற்சியால், அவை தனித்துவமான எழுத்து முறையுடனும் சிறப்பெழுத்துக்களுடனும் தமிழில் எழுதப்பட்டவை என்பது தெரியவந்தது. 

நிலையான வடிவத்தை இறுதி செய்வதற்கு முன்பு பல்வேறு இணையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிராமியிலிருந்து உருவான வேறு ஒரு படிநிலை என்றனர். அசோக பிரமியின் தழுவல் என்றனர். ஆனால் சுமார் நூறு குகைக் கல்வெட்டுகள், பொருந்தல் மண்பாண்டங்கள் முதலியவற்றை வாசித்தபிறகு இந்த வரிவடிவங்கள் தமிழின் ஆரம்பக்கால எழுத்துமுறை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொடுமணல், கீழடி, கொற்கை, அழகன்குளம், பொருந்தல், சிவகளையில் கிடைத்த சான்றுகள் மூலம் (22 AMS datings and 73 AMS ratings) இந்த வரிவடிவம் அசோக பிராமியைவிடக் குறைந்தது மூன்று முதல் நான்கு நூற்றாண்டுகள் பழையவை என்று நிரூபணம் ஆகியுள்ளது.

ஐராவதம் மகாதேவன் எழுதிய, பண்டைய தமிழ் கல்வெட்டியல் (Early Tamil Epigraphy) என்ற புகழ்வாய்ந்த நூலில் அனைத்து கல்வெட்டு எழுத்துகளையும் பிராமி, பிராமியின் மாறுபாடுகள் என்று வகைப்படுத்தினார். அசோக பிராமி, தெற்கு பிராமி, வடக்கு பிராமி, பட்டிப்புரோலு எழத்துமுறை, சிங்கள பிராமி, தமிழ் பிராமி போன்ற பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார். இப்பெயர்கள் மொழியின் அடிப்படையிலோ நிலத்தின் அடிப்படையிலோ சரியாக வகைப்படுத்தவில்லை என அறிஞர்கள் தெரிவித்த ஆட்சேபணையை நூலின் அடிக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் பிராமியை விவரிக்கும்போது இந்தோ-ஆரியர் அல்லாத திராவிட மொழிக்காகத் தனித்துவமான எழுத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தொல்லெழுத்துகளும் எழுத்து முறை மாற்றங்களும் தனித்துவமான எழுத்து முறை என்ற தகுதியை வழங்குவதாக ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் இதைத் தனி எழுத்து முறையாகக் கொள்ளவேண்டியதில்லை என்கிறார்.

தனித்துவமான எழுத்து முறைதான் ஆனால் தனி எழுத்து முறை அல்ல என ஐராவதம் மகாதேவன் நம்புவது ஒரு சுவாரஸ்யமான கூற்று. இதிலிருந்து மாறுபட்டு, தமிழ் வரிவடிவம் தனித்துவமான பெயரால் அறியப்படவேண்டும் என மார்க்சியகாந்தி தன் உரையில் வலியுறுத்தினார். 

ஒவ்வொரு மொழிக்கும் குறிப்பிட்ட ஒலியியல் தேவைகள் உள்ளன. தமிழுக்கும் பிராகிருதத்துக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தமிழில் வர்க்க எழுத்துகளும் கூட்டெழுத்துகளும் (Varga and Conjunct) கிடையாது. பிராமி குறியீட்டு முறையைத் தமிழ் பின்பற்றவில்லை. மிக முக்கியமாக தமிழ் ஒலிப்பு முறையில் சொற்கள் அவற்றின் மரபுசார்ந்த உச்சரிப்பிலேயே நிலைபெற்றுள்ளன. வல்லொலி, மெல்​லொலிகளுக்கு தனித்தனி வரிவடிவங்கள் தேவையில்லை (Aspirate – Inaspirate, ka – kha difference). இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப்போல இந்த ஒலிமாற்றங்கள் தமிழில் ஒரு சொல்லின் பொருளை மாற்றுவதில்லை. 

எனவே புராணங்களின் அடிப்படையில் அல்லாது முறையான வழியில் தமிழ் வரிவடிவத்துக்கான பெயரை இறுதிசெய்து தரப்படுத்துவது அவசியமாகிறது. தமிழி என்ற பெயர் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே பயன்படுத்தப்பட்டதற்கு நேரடி ஆதாரங்கள் உள்ளன. காலப்போக்கில் தாமிளி, திராவிடி என்ற சொற்கள் இந்த வரிவடிவத்தைக் குறிக்கப் பயன்பாட்டில் இருந்தன. தாமிளி (Damili) என்ற சொல் நேரடியாகத் தமிழி என்ற சொல்லில் இருந்து உருவானது. 1972ஆம் ஆண்டு டாக்டர் நாகசாமி, இந்த வரிவடிவத்தைக் குறிப்பிட, தமிழ்-பிராமி என்பதற்குப் பதிலாகத் தமிழி என்ற சொல்லைப் பயன்படுத்த முன்மொழிந்தார். தம் நூலில் அவ்வாறே எழுதிப் பதிப்பித்தார். 

புதிய ஆய்வு முடிவுகள் வெளிவந்து இத்துறை பல அறிஞர்களை ஈர்த்துள்ளது. தமிழ் வரிவடிவம் பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பெற்றுள்ளன. அசோக பிராமியின் மேம்பட்ட எழுத்துவடிவத்தின் அடிப்படை மாதிரியாக தமிழி எழுத்து வரிவடிவமே இருந்திருக்கவேண்டும். ஆரம்பக்காலத் தமிழ் எழுத்துமுறைக்கான பெயராக தமிழி என்பதைத் தரப்படுத்த சரியான தருணம் இது. 

இத்தகைய தெளிவான விளக்கங்களுடன் தமிழி என்ற பெயரை தரப்படுத்தும் கோரிக்கையை முன்வைத்துள்ளது மார்க்சியகாந்தியின் ஆய்வுக்கட்டுரை. தமிழ்நாடு அரசு இதைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்து உத்தரவிட்டால் உலகளாவிய அளவில் தமிழி என்றே தமிழ் எழுத்து வரிவடிவம் அழைக்கப்படும். பெயரிடும் முறையைப் பின்பற்றி உருவான சொல் இது என்பது கூடுதல் சிறப்பு.

  • ​கோகிலா.

முழு உரையைக் காணொளியில் பாக்கலாம்.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now