இணைந்த கைகள்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் ஹென்றி ராய்ஸ் என்ற பொறியாளரும், சார்லஸ் ரோல்ஸ் என்ற தொழிலதிபரும் சந்தித்தனர். இவர்கள் இணைந்து ஒரு மகிழுந்து நிறுவனத்தைத் தொடங்கினர். இருவரும் வித்தியாசமான மனிதர்கள். ஹென்றி ராய்ஸ் ஒரு தொழிலாளியின் மகனாக இருந்து முன்னேறியவர். ரோல்ஸ் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து கேம்பிரிட்ஜில் படித்தவர், விமானம் ஓட்டுவதில் ஆர்வமுள்ளவர். இந்த இரண்டு வேறுபட்ட உலகங்கள் சேர்ந்தபோது ஒரு நிறுவனம் பிறந்தது. அப்போது தொடங்கி இப்போது வரை சொகுசு மகிழுந்துகளின் உச்சமாக பார்க்கப்படுவது ரோல்ஸ் ராய்ஸ்.

முதல் முத்திரை
1906-ல் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் முத்திரை பார்ப்பதற்கு சிக்கலாக இருந்தது. இருவரின் பெயர்களில் உள்ள ஆர் என்கிற ஆங்கில எழுத்து நடுவில் இருந்தது. நான்காகப் பிரிக்கப்பட்ட கேடயத்தில் நடுவில் இந்த இரு எழுத்துகள். அதைச்சுற்றி சிங்கம், ரோஜா, தேவதை, கடல்குதிரை, சிறகு என்று ஏகப்பட்ட வடிவங்கள். பார்ப்பதற்குச் சிக்கலான தோற்றம். ஆனால் அப்போது அதுதான் வழக்கம்.
1911 – முத்திரைக்குள் ஒரு முத்திரை
முத்திரை மாறும் முன்பே, ரோல்ஸ் ராய்ஸின் மிகப் புகழ்பெற்ற சின்னம் பிறந்தது. காரின் முன்புறத்தில் நிற்கும் அந்த கிரேக்கர்களின் வெற்றி தேவதை. சார்லஸ் சைக்ஸ் என்ற சிற்பி இந்த உருவத்தை வடிவமைத்தார். 1911-ல் இந்த பெண் சிலை ரோல்ஸ் ராய்ஸ் மகிழுந்துகளில் சேர்க்கப்பட்டது. அதுவரை வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி பல்வேறு சிலைகளை மகிழுந்தின் மேல் வைத்துக்கொண்டனர். இது ஒரு சீரற்ற தோற்றத்தை கொடுத்தது. அதனால் ரோல்ஸ் ராய்ஸ் ஓர் அதிகாரபூர்வமான சிலையை உருவாக்க முடிவெடுத்தது. அதுவே ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி. அந்த உருவம் ரோல்ஸ் ராய்ஸிலிருந்து பிரிக்க முடியாத அடையாளமாக மாறிவிட்டது. இன்று இந்த உருவத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம். மகிழுந்திலிருந்து சிலையை பெயர்த்தெடுக்க முயன்றால் உள்ளே சென்று மறைந்துவிடும் அமைப்பு கூட இருக்கிறது.
எழுத்துரு
சிலை உள்ளே நுழைந்தபோது சிக்கலான முத்திரையையும் மாற்றி, மற்ற வடிவங்களை விட்டுவிட்டு இரண்டு ஆர்களை (R) மட்டும் வைத்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் தேர்வு செய்யப்பட்டது செரிப் எழுத்துரு. செரிப் என்பது எழுத்துகளின் முனைகளில் சிறிய கோடுகள் இருக்கும் பாணி. நூற்றாண்டுகளாக அரசவை ஆவணங்களிலும் சட்ட ஆவணங்களிலும் பயன்பட்டு வந்த பாணி இது. பழமை, நம்பகத்தன்மை, அதிகாரப்பூர்வம் என்ற உணர்வை தரும் எழுத்து வடிவம். இந்நிறுவனம் ஏற்கெனவே உள்ள செரிப் எழுத்துரு ஒன்றைப் பயன்படுத்தாமல் தமக்கென்று தனித்துவமாக இந்த எழுத்துகளை மட்டும் வடிவமைத்தது.
அப்போது உருவான முத்திரையில் இரண்டு ஆர்களும் ஒன்றோடொன்று சேர்ந்து நின்றன. இந்த வடிவம் ‘லிகேச்சர்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஓர் எழுத்தின் கோடுகள் அடுத்த எழுத்தோடு தொடுகின்றன. இரண்டு நிறுவனர்களும் பிரிக்க முடியாதவர்கள் என்ற கருத்தை இந்த இணைப்பு காட்டுவதாக சொல்லப்படுகிறது.
1973-ல் புதிய முயற்சியாக முத்திரையை முப்பரிமாண வடிவமாக கொண்டுவந்தனர். அடர் நீல பின்னணியில் பழைய அதே இரண்டு ஆர் எழுத்துகள். சாம்பல் நிறத்துடன் நிழல் விழுவது போல உருவானது முத்திரை.
அதன்பிறகு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் கைமாறியது. களிநயமான பின்னணி என்னவென்றால் நிறுவனத்தின் உரிமையும் அதன் முத்திரையின் உரிமையும் தனித்தனியாக இருந்தது. ஒரு வழியாக பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்துக்கு இந்த உரிமை வந்து சேர்ந்தது. பல ஆண்டுகள் அந்த முத்திரையில் மாற்றம் எதுவும் செய்யாமலே வைத்திருந்தனர். பின்னர் சாம்பல் நிறச் செவ்வகத்தில் எழுத்துகளை வைத்தனர்.
2020ல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது இந்த முத்திரை. கில் சான்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ரிவேரா நைட்ஸ் எழுத்துரு பயன்படுத்தி பழைமையைத் தக்கவைத்து புதுப்பொலிவு கொடுத்துள்ளனர். பெரிதாக எதையும் மாற்றவில்லை. எளிமையில் இருந்து இன்னும் கொஞ்சம் அதிக எளிமையானது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் வரலாற்றைத் தாங்கி நிற்பது அந்த இரண்டு ஆர் எழுத்துகள்தானே. அதற்கு மேல் வேறென்ன வேண்டும்? எனவே வெள்ளைப் பின்னணியில் கருப்பு ஆர் எழுத்துகளுடன் தனித்துவமாக இருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ் முத்திரை.
- மு. இசக்கிமுத்து
