முத்திரைக் கதை – பெண்ட்லி

ஓர் எழுத்து… ஒரு நூற்றாண்டுச் சிறகுகள்

இருபுறமும் விரிந்த சிறகுகள்… நடுவே கம்பீரமாக வீற்றிருக்கும் ‘பி’ (B) எனும் ஆங்கில எழுத்து. சாலைகளில் ஒரு பெண்ட்லி (Bentley) மகிழுந்து சீறிப்பாயும்போது, அந்தச் சிறகுகள் நிஜமாகவே காற்றில் மிதப்பது போன்ற மாயையை உருவாக்கும். வெறும் அலங்காரத்திற்காக வரையப்பட்ட கோடுகளாகத் தோன்றும் இந்த முத்திரைக்குப் பின்னால், உலகப் போரின் வடுக்களும், ஒரு பொறியாளரின் தீராத லட்சியக் கனவும் ஒளிந்திருக்கின்றன.

வானில் உதித்த அடையாளம்

1919-ஆம் ஆண்டு முதலாம் உலகப் போர் ஓய்ந்திருந்த காலம். வால்டர் ஓவன் பெண்ட்லி (W.O. Bentley) என்ற பொறியாளர், போர் விமானங்களுக்கான உந்துபொறிகளை (Engines) வடிவமைத்து வந்தார். அவர் உருவாக்கிய ‘அலுமினியம்’ உந்துதண்டு  (Pistons), போர் விமானங்கள் வானில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய உதவின.

அந்த ‘வானத்து வேகத்தை’ நிலத்திலும் கொண்டு வர வால்டர் ஓவன் பெண்ட்லி விரும்பியபோதுதான் பெண்ட்லி மகிழுந்து நிறுவனம் பிறந்தது. அதனால்தான், பெண்ட்லியின் அடையாளமாக ‘சிறகுகள்’ தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்தச் சிறகுகளுக்கு நடுவில், ஒரு சிம்மாசனத்தில் அமர்வது போல அந்த ‘பி’ எனும் ஆ​ங்கில எழுத்து செதுக்கப்பட்டது. இது வெறும் அலங்காரமல்ல, அந்த விமான வரலாற்றின் நீங்காத நினைவு.

கைகளால் உருவான கலை

பெண்ட்லி முத்திரையில் காணப்படும் ‘பி’ ஆங்கில எழுத்து எந்த ஒரு பொதுவான எழுத்துருவிலிருந்தும் எடுத்ததல்ல. அது இந்த முத்திரைக்காகவே தனியாக கையால் வரையப்பட்ட எழுத்து வடிவம். எழுத்துரு வடிவமைப்பில் இதனை “தனிப்பயன் எழுத்து வடிவம்” என்று கூறலாம். அதாவது, ஒரு முழு எழுத்துருக் குடும்பத்தின் பகுதி அல்ல; முத்திரையின் அடையாளமாக மட்டும் உருவாக்கப்பட்ட எழுத்து.

இந்த முத்திரைக்கு உயிர் கொடுத்தவர் எஃப். கோர்டன் க்ராஸ்பி எனும் கலைஞர். அவர் வேகத்தை நேசிக்கும் ஓர் ஓவியர். அது முழுக்க முழுக்க அவரது கற்பனையில், கையால் வரையப்பட்ட ஒரு கலைப்படைப்பு. இன்றும் அந்த எழுத்துருவை கணினி மூலம் நூறு விழுக்காடு அப்படியே உருவாக்குவதற்கான வாய்ப்பு குறைவு. அதன் வளைவுகளில் மனிதக் கரங்களின் அசைவுகள் அத்தனை நுணுக்கமானவை.

இந்த ‘பி’ எழுத்து முழுமையாக ஒரு செரிப் எழுத்துரு அல்ல. ஆனால் அதில் பழமையான செரிப் எழுத்துருக்களின் தாக்கம் தெளிவாகத் தெரியும். செங்குத்துக் கோடுகள் தடிமனாக இருப்பதும், அதன் வளைவு அமைப்புகளும் பாரம்பரிய எழுத்துருக்களை நினைவூட்டுகின்றன. இதனால் அந்த எழுத்து அரச மரியாதைமிக்க தோற்றத்தைப் பெறுகிறது.

பி எழுத்தின் செங்குத்துக் கோடுகள் வழக்கத்திற்கு மாறாகத் தடிமனாக இருக்கும். இது ‘அசைக்க முடியாத உறுதி’, ‘அதிகாரத்தை’க் குறிக்கிறது. ஆனால், அதன் கிடைமட்டக் கோடுகள் சற்றே மெலிதாகச் செதுக்கப்பட்டிருக்கும். இது அந்தத் தடிமனான எழுத்துக்கு ஒரு விதமான லேசான தன்மையைத் தருகிறது. ‘பி’ எழுத்தின் வளைவுகள் சற்றே முன்னோக்கிச் சாய்ந்தது போல வடிவமைக்கப்பட்டிருக்கும். இது மகிழுந்து நின்று கொண்டிருக்கும் போது கூட, அது முன்னோக்கிப் பாயத் தயாராக இருக்கிறது எனும் உணர்வைத் தரும்.

நிறங்கள் சொல்லும் கதை

பெண்ட்லியின் ‘பி’ எழுத்துக்குப் பின்னால் இருக்கும் ‘நிறம்’, அந்த ஊர்தியின் ஆற்றலின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

  • சிவப்பு : வேகம், துடிப்பு மிக்க மகிழுந்துகளுக்கு.
  • பச்சை : சொகுசு, நீண்ட தூரப் பயண மகிழுந்துகளுக்கு.
  • கருப்பு : பெண்ட்லியின் மிக வலிமையான பொறிகளைக் கொண்ட மகிழுந்துகளுக்கு.

சிறகுகளில் மறைந்திருக்கும் நுணுக்கம்

‘பி’ எழுத்தின் வலது, இடது பக்கங்களில் இருக்கும் சிறகுகளின் எண்ணிக்கை சமமாக இருக்காது எடுத்துக்காட்டாக, ஒரு பக்கம் 10, மறுபக்கம் 11). யாராவது இந்த முத்திரையை நகல் எடுத்தால், இந்தச் சிறு வித்தியாசத்தை வைத்து அது ‘போலி’ என்று கண்டுபிடித்துவிடலாம் என்பதற்காகச் செய்யப்பட்ட நுணுக்கமான ஏற்பாடு இது. பிற்காலத்தில் இது சமச்சீராக மாற்றப்பட்டாலும், இன்றும் பழைய வண்டிகளில் (கிளாசிக் மாடல்களில்) இதைக் காணலாம்.

கால மாற்றம்… மாறாத கம்பீரம்

நூறு ஆண்டுகளில் பெண்ட்லி நிறுவனம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இப்போது முத்திரையில் உள்ள சிறகுகள், ‘பெரிகிரைன் பருந்து’ (Peregrine Falcon) எனும் உலகின் மிகவேகமான பறவையின் சிறகுகளை அடிப்படையாகக் கொண்டு இன்னும் கூர்மையாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2025-2026 காலக்கட்டத்தில், பெண்ட்லி தனது மின்சார வாகனப் புரட்சியிலும் இதே கம்பீரத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.

‘பறக்கும் பி’: மகிழுந்தின் முகப்பில் ஒரு கம்பீரம்

பெண்ட்லி மகிழுந்துகளின் முகப்பில் செங்குத்தாக நிற்கும் அந்தச் சிறிய வெண்கலச் சிலை பறக்கும் பி (Flying B) என்று அழைக்கப்படுகிறது. இது 1920-களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது திருட்டுப் போவதைத் தடுக்கவும், விபத்துகளின் போது பாதசாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் அகற்றப்பட்டது. ஆனால், நவீன பெண்ட்லி மகிழுந்துகளில் ( Flying Spur), இந்த பறக்கும் பி சின்னம் ஒரு பொத்தானை அழுத்தினால் மெல்ல வெளியே வரும்படியும், மகிழுந்து நின்றதும் தானாகவே உள்ளே சென்று மறையும்படியும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இப்போது ஒளிரும் (Illuminated) வசதியுடனும் வருகிறது.

இப்படி பெண்ட்லி முத்திரையில் இருப்பது வெறும் கோடுகள் அல்ல; அவை வால்டர் ஓவன் பெண்ட்லியின் லட்சியமும், க்ராஸ்பி எனும் கலைஞனின் கைவண்ணமும் இணைந்த ஒரு மௌன இசை.

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now