ஒரு கையொப்பத்தின் இனிமையான வரலாறு
கேட்பரி (Cadbury) என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த ஊதா நிறப் பின்னணியும், பொன்னிறத்தில் வளைந்து நெளிந்து ஓடும் அந்த அழகிய கையொப்பமும்தான். 1824-ல் ஜான் கேட்பரி (John Cadbury) இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தனது சிறிய கடையைத் தொடங்கியபோது, அது சாதாரண வணிக முயற்சியாகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த நிறுவனம் உலகின் மிகப் பெரிய சாக்லேட் நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. அதே நேரத்தில், அதன் அடையாளமான முத்திரையும் ஒரு சாதாரண அச்சு எழுத்திலிருந்து உலகம் முழுவதும் அறியப்படும் ஒரு தனித்துவமான கையொப்ப வடிவமாக மாறியது.

அச்சு எழுத்திலிருந்து கையொப்பம் வரை
19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கேட்பரி தனது பெயரை வழக்கமான அச்சு எழுத்துக்களிலேயே பயன்படுத்தியது. அந்தக் காலத்தில் நிறுவனத்தின் விவரச்சீட்டுகளிலும் விளம்பரங்களிலும் பலவிதமான ஓவியங்களும் அலங்கார வடிவங்களும் இடம்பெற்றன.
1921-ல் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. அப்போது கேட்பரி குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் கேட்பரியின் (William Cadbury) கையொப்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய எழுத்துரு வடிவமைக்கப்பட்டது. அந்த கையொப்பத்தின் இயல்பான வளைவுகளையும் ஓட்டத்தையும் பாதுகாத்து, அதை ஒரு வணிக முத்திரையாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதுவே இன்று நாம் அறிந்திருக்கும் கேட்பரி கையொப்ப முத்திரையின் அடிப்படை வடிவமாகும்.
ஆரம்பத்தில் இந்த கையொப்ப முத்திரை நிறுவனத்தின் சில வாகனங்களிலும், விளம்பரப் பொருள்களிலும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் காலப்போக்கில் அது கேட்பரியின் முக்கியமான அடையாளமாக மாறி, சாக்லேட் பொட்டலங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படத் தொடங்கியது.
எழுத்துக்களின் ஓட்டமும் வடிவமைப்பு நுணுக்கமும்
கேட்பரியின் முத்திரை ஒரு கையெழுத்து பாணி (script style) எழுத்துருவாகும். எழுத்துகள் ஒன்றோடொன்று இணைந்து ஓடும் விதம், உண்மையான கையொப்பத்தைப் போலத் தோற்றமளிக்கிறது.
முதலில் உள்ள சி (C) எழுத்தைத் தவிர மற்ற அனைத்து எழுத்துக்களும் (a-d-b-u-r-y) ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவாறு இணைக்கப்பட்டுள்ளன. இது சாக்லேட் உருகுவதைப் போன்ற ஒரு மென்மையான உணர்வைத் தருவதற்காக வடிவமைக்கப்பட்டது.
மேலும், இந்த எழுத்துருவில் காணப்படும் தடிமன்-மெலிது மாறுபாடு, ஒரு பேனா நுனியால் எழுதப்பட்ட கையெழுத்தை நினைவூட்டுகிறது. கீழே இறங்கும் கோடுகள் சற்றே தடிமனாகவும் மேலே எழும் கோடுகள் மெலிதாகவும் தோன்றும் இந்த தன்மை, எழுத்துருவிற்கு ஓர் உயிரோட்டத்தை அளிக்கிறது.
இறுதியாக வரும் ஒய் (y) எழுத்தின் நீண்ட கீழ்வளைவு, ஒரு கையொப்பத்தை இட்டு முடிக்கும் இறுதி அசைவைப் போல அமைந்துள்ளது. அதுவே முத்திரைக்கு ஒரு தனித்துவமான நிறைவை வழங்குகிறது.
விடை கொடுத்த தருணம்
தொடக்க காலக்கட்டத்தில் கேட்பரி முத்திரையின் இறுதியில் எஸ் (S) என்ற எழுத்து இருந்தது. இது அந்த நிறுவனம் ஒரு கேட்பரி குடும்பத்தால் நடத்தப்படுகிறது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அப்போது எழுத்துரு வடிவமைப்பாளர்கள், அந்த நீண்ட ‘ஒய்’ எழுத்திற்குப் பிறகு வரும் சிறிய ‘எஸ்’, முத்திரையின் ஒட்டுமொத்த அழகைக் குலைப்பதாக கருதினார்கள். ‘ஒய்’ எழுத்தின் அந்த வளைவு முற்றுப்பெறாமல், ‘எஸ்’ எழுத்து அதைத் தடுப்பது போல இருந்தது. அதனாலேயே அதை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. 1960 முதல் வெளிவந்த சில பதிப்புகளின் சாக்லேட் பொட்டலங்களில் எஸ்(S) எழுத்து நீக்கப்பட்டது. 2003ம் ஆண்டு முதல் உலகளாவிய மறுசீரமைப்பின் போது ‘எஸ்'(S) எழுத்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டு, வெறும் ‘கேட்பரி'(Cadbury) என்று மாற்றப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் முத்திரையில் பலமுறை சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. தேவையற்ற சுருள்கள் குறைக்கப்பட்டன.
நுணுக்கமான மாற்றம்… மாறாத அடையாளம்
அதன் பிறகு குறிப்பாக 2020-ல் செய்யப்பட்ட மாற்றம் மிக முக்கியமானது. தொழில்நுட்ப கருவிகளின் திரைகளின் ஒளியில் அந்த எழுத்துக்கள் இன்னும் பிரகாசமாகத் தெரிவதற்காக, அதன் கோடுகள் சற்றே மெலிதாக்கப்பட்டன. பழைய கம்பீரம் குறையாமல், நவீன வடிவில் அந்த எழுத்துக்கள் இன்னும் மின்னுகின்றன.
நவீன உலகிற்கான மெருகூட்டல்
2020ல் கேட்பரி முத்திரை நவீன தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப மேலும் மெருகேற்றப்பட்டது. சிறிய திரைகளிலும் எழுத்துக்கள் தெளிவாகத் தோன்றும் வகையில் கோடுகள் நுணுக்கமாக சீரமைக்கப்பட்டன. எழுத்துக்களின் இடைவெளியும் வளைவுகளும் கவனமாக மேம்படுத்தப்பட்டன.
கேட்பரியின் அடையாளத்தை முழுமையாக்குவது அதன் தனித்துவமான ஊதா நிறம். 1905இல் இருந்து இந்த ஊதா நிறம் கேட்பரி தயாரிப்புகளின் முக்கியமான அடையாளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்னர் அது பேண்டோன் என்ற குறிப்பிட்ட நிறத் தரத்தில் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிறமும் அந்த கையொப்ப முத்திரையும் சேர்ந்து, கேட்பரியை உலகம் முழுவதும் உடனே அடையாளம் காணக்கூடிய அடையாளமாக மாற்றியுள்ளன.
மௌன இசை பாடும் கையொப்பம்
கேட்பரியின் முத்திரையில் இருப்பது வெறும் எழுத்துக்கள் அல்ல; அது ஒரு குடும்பத்தின் வரலாறும் பாரம்பரியமும் கலந்த கையொப்பம். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் சாக்லேட் பொட்டலங்களில் அந்த கையொப்பம் அமைதியாகப் புன்னகைத்துக்கொண்டே இருக்கிறது.
ஒரு மனிதன் காகிதத்தில் இட்ட ஓர் எளிய கையெழுத்து, இன்று உலகின் இனிமையான அடையாளமாக மாறியுள்ளது.
- மு. இசக்கிமுத்து
