நாம் அன்றாடம் வாசிக்கும் எழுத்துக்களுக்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறும், ஆழமான அறிவியலும் ஒளிந்திருக்கிறது என்பதைப் பல நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. அத்தகைய ஓர் அச்சுக்கலைச் சவால்தான், ‘வேர்டில்’ (Wordle) விளையாட்டில் கடந்த மார்ச் 23 அன்று வெளியாகி, பலரை விவாதிக்க வைத்தது. செரிப் (SERIF) என்ற அந்தச் சொல் அப்படி என்ன செய்தது என விரிவாகப் பார்க்கலாம்.

வேர்டில்: ஒரு காதல் கதையும் உலகளாவிய வெற்றியும்
இந்தச் சொல்லின் முக்கியத்துவத்தை பலருக்கு உணர்த்திய ‘வேர்டில்’ விளையாட்டின் பின்னணியில் ஒரு களிநயமான காதல் கதை இருக்கிறது. மென்பொருள் பொறியாளரான ஜோஷ் வார்டில், சொல் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட தனது துணைவிக்காக உருவாக்கிய ஓர் எளிய பொழுதுபோக்குதான் இந்த விளையாட்டு. அக்டோபர் 2021-ல் பொதுவில் வெளியானபோது நூறு பேருக்கும் குறைவானவர்களால் மட்டுமே விளையாடப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே கோடிக்கணக்கான மக்களை ஈர்த்தது. இதன் அபரிமித வளர்ச்சியைக் கண்டு வியந்த ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நிறுவனம், 2022-ல் இதனை பத்து லட்சம் டாலருக்கும் அதிகமான விலைக்கு வாங்கியது.
அறியப்படாத சொல்லும் அறிவியலும்
இவ்விளையாட்டில் கடந்த மார்ச் 23 அன்று வெளியான புதிரில் செரிப் என்ற சொல் வந்தபோது, அது வழக்கமான சொற்களை விடக் கடினமான ஒன்றாகவும், சற்றே வழக்கத்துக்கு மாறான ஒன்றாகவும் கருதப்பட்டது. உண்மையில், ‘செரிப்’ என்பது பொதுச்சமூகத்தின் அன்றாடப் பேச்சில் புழங்கும் ஒரு சொல் அல்ல. ஆனால், நாம் வாசிக்கும் புத்தகங்கள், செய்தித்தாள்கள் எனப் பொதுவெளியில் நாம் காணும் ஒவ்வோர் எழுத்திலும் இது நீக்கமற நிறைந்திருக்கிறது. யூகிக்கவே முடியாத அளவுக்குப் பொதுச்சமூகத்திற்குப் பரிச்சயமில்லாத ஒரு சொல், ஆனால் சமூகத்தின் பார்வையில் ஒவ்வொரு நொடியும் புழக்கத்தில் இருக்கும் ஒன்று என்பதால்தான், வேர்டில் இதனை ஒரு சவாலான புதிராகக் கொண்டு வந்தது.
உண்மையில் ‘செரிப்’ என்பது ஒரு எழுத்தின் முனைகளில் காணப்படும் சிறிய அலங்காரக் கோடுகள் அல்லது நீட்சிகள் ஆகும். இது வெறும் அழகிற்காக உருவாக்கப்பட்டதல்ல. நீண்ட கட்டுரைகளை நாம் சோர்வின்றி வாசிப்பதற்கு இந்தச் சிறிய கோடுகளே பெரும் துணையாக இருக்கின்றன. புத்தகங்களிலும் செய்தித்தாள்களிலும் ஒரு வரியில் இருந்து அடுத்த வரிக்கு நம் கண்கள் தாவும்போது, வழிதவறாமல் இருக்க இவை ‘வழிகாட்டிகளாகச்’ செயல்படுகின்றன. இது கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து வாசிப்பை 10% வரை வேகப்படுத்துகிறது என்கின்றன சில முதல்நிலை ஆய்வுகள்.

ரோமானியக் கல்வெட்டுகள் முதல் அச்சு இயந்திரம் வரை
செரிப்களின் வரலாறு என்பது எழுதும் கருவிகளின் பரிணாம வளர்ச்சியோடு தொடர்புடையது. இதன் வேர்கள் கி.மு. 1-ம் நூற்றாண்டு காலத்திய ரோமானியக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இதற்கு மிகச்சிறந்த வரலாற்று ஆதாரம், கி.பி. 113-ல் ரோமில் எழுப்பப்பட்ட ‘டிராஜன் தூண்’ (Trajan’s Column) ஆகும். கல் செதுக்குபவர்கள் உளியால் எழுத்துக்களை முடிக்கும்போது, விளிம்புகள் பிளவுபடாமல் இருக்கச் செய்த ஒரு நுட்பமே இந்தச் செரிப்கள் (finishing stroe). 15-ம் நூற்றாண்டில் நவீன அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்த ஜோஹன்னஸ் குட்டன்பெர்க், தனது முதல் அச்சுப் பணிகளுக்கு இந்த செரிப் எழுத்துக்களையே பயன்படுத்தினார். அவை அக்காலத்து மக்களின் கையெழுத்துப் போலவே இருந்ததால், வாசிப்பதற்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தன.
இந்த எழுத்துருக்கள் காலப்போக்கில் நான்கு முக்கியமான வகைகளாகப் பிரிந்துள்ளன:
- பழைய பாணி: கையெழுத்துப் நகல்களின் சாயலைக்கொண்ட இதமான வடிவம் (உதாரணம்: Garamond).
- இடைக்கால பாணி: 18-ஆம் நூற்றாண்டில் மெருகேற்றப்பட்ட வடிவம் (உதாரணம்: Times New Roman, Baskerville).
- நவீன பாணி: தார்மீகமான மெல்லிய கோடுகளுடன் கூடிய ஆடம்பர வடிவம் (உதாரணம்: Bodoni).
- தடிமனான செரிஃப்: 19-ஆம் நூற்றாண்டில் விளம்பரங்களுக்காக உருவாக்கப்பட்ட அழுத்தமான வடிவம் (உதாரணம்: Rockwell, Courier).
செரிப் குடும்பத்தில் உள்ள எழுத்துருக்களுக்கென பல்வேறு களிநயமான வரலாறுகள் இருக்கின்றன..
உலகிலேயே மிகவும் பிரபலமான செரிப் எழுத்துரு டைம்ஸ் நியூ ரோமன் (Times New Roman). இது 1931-ல் பிறந்தது. ‘தி டைம்ஸ்’ (The Times) பத்திரிகையின் அச்சு மோசமாக இருப்பதாக ஸ்டான்லி மோரிசன் என்பவர் விமரிசித்தார். “முடிந்தால் நீங்களே ஒரு நல்ல எழுத்துருவை உருவாக்கித் தாருங்களேன்” என அந்தப் பத்திரிகை சவால் விட்டது. அந்தச் சவாலில் உருவானதுதான் இந்த எழுத்துரு.
ஆப்பிள் கணினிகளில் செரிப் எழுத்துருக்கள் அறிமுகம்
ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய பிறகு, சும்மா இருந்த நேரத்தில் வனப்பெழுத்து (கலிகிராபி) வகுப்பிற்குச் சென்றார். அந்த ஆர்வத்தில்தான் முதல் மெக் (Macintosh) கணினியில் அழகான செரிப், சான்ஸ் செரிப் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தினார். “நான் அந்த வகுப்பிற்குச் செல்லவில்லை என்றால், இன்று கணினிகளில் இவ்வளவு அழகான எழுத்துருக்களே இருந்திருக்காது” என்று அவரே ஒருமுறை கூறினார்.
‘செரிப்’ என்ற சொல்லின் பிறப்பு குறித்தும் விவாதங்கள் உண்டு. இது ‘கோடு’ என்று பொருள்படும் டச்சுச் சொல்லான ‘ஸ்க்ரீஃப்’ (Schreef) அல்லது ‘எழுதுதல்’ என்று பொருள்படும் லத்தீன் சொல்லான ‘ஸ்க்ரிபெரே’ (Scribere) என்பதில் இருந்தோ பிறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் கணினித் திரைகளில் வாசிப்பதற்கேற்ப இவை நவீனமாக்கப்பட்டுள்ளன. அடுத்த முறை நீங்கள் ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, அந்தச் சிறிய கோடுகளைக் கவனியுங்கள். அவை வெறும் கோடுகள் அல்ல; நூற்றாண்டுகால அறிவு, வடிவமைப்பாளர்களின் சிந்தனை, வாசகர்கள் மீதான அக்கறையின் வெளிப்பாடு.
- மு. இசக்கிமுத்து
