இயற்கையைக் காப்பதிலும், பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதிலும் நாம் பயன்படுத்தும் கலைச்சொற்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. சூழல் தொடர்பான ஒரு சொல், மக்களிடையே ஓர் உயிரினத்தைப் பற்றியோ அல்லது ஓர் இயற்கை வளத்தைப் பற்றியோ துல்லியமான புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

மாறாக, அச்சத்தையோ அல்லது தவறான பார்வையையோ உருவாக்கக் கூடாது. ஆனால், இன்றளவும் சூழலியல் சார்ந்த பல சொற்கள் சரியான ஆய்வின்றி, தவறான பார்வையை உருவாக்கும் வகையிலேயே அன்றாட வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பொதுவெளியில் நிலவும் இந்தத் தெளிவற்ற சொல்லாக்கச் சிக்கல், இன்றைய மின்னணு ஊடகச் சூழலிலும் இயல்பாகவே ஊடுருவி விடுகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களிலும் செய்தி அட்டைகளிலும் (News Cards) பயன்படும் சூழலியல் கலைச்சொற்கள், மக்களிடம் சில உயிரினங்கள் பற்றிய தவறான உருவகத்தை ஆழப் பதித்துவிடக்கூடும்.
சூழலியல் ஆய்வாளர் நாராயணி சுப்பிரமணியனின் வருத்தம்
அண்மையில் தனியார் தொலைக்காட்சி செய்தி அட்டை ஒன்றில் இடம்பெற்ற பிழையைச் சுட்டிக்காட்டி சூழலியல் ஆய்வாளர் நாராயணி சுப்பிரமணியன் முகநூலில் குறிப்பு ஒன்று எழுதியிருந்தார். அதில், “பாறுக்கழுகு என்று இந்தப் பறவையைக் குறிப்பிட வேண்டும் எனப் பல சூழலியல், பறவையியல் வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், செய்தி அட்டையில் ‘பிணந்தின்னிக் கழுகு’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பிணந்தின்னிக் கழுகு என்ற பெயரே ஓர் அருவருப்பான, எதிர்மறை மனநிலையைத் தருகிறது. இது அந்தப் பறவையின் பாதுகாப்புக்கே எதிரானதாக மாறிவிடும். குறிப்பாக அதிகம் பேசப்படாத விலங்குகள், பறவைகளைப் பற்றி எழுதும்போது கூடுதல் கவனம் தேவை. அறிவியல் தகவல்களைத் தரும்போது ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும்” எனத் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.
இயற்கையின் கழிவுகளை அகற்றி, நோயை உண்டாக்கும் உயிரிகள் பரவுவதை கட்டுப்படுத்தும் ஒரு பறவையை, ‘பிணந்தின்னி’ என்ற எதிர்மறைச் சொல்லால் குறிப்பிடுவது மக்களிடையே அச்சத்தையும் அருவருப்பையுமே உருவாக்கும். மாறாக, சங்க இலக்கியத்திலும் பறவையியலிலும் குறிப்பிடப்படும் ‘பாறு’ அல்லது ‘பாறுக்கழுகு’ என்ற சொல் அதற்குரிய மரியாதையையும் பாதுகாப்பு உணர்வையும் மக்களிடம் இயல்பாகக் கொண்டு சேர்ப்பதாகவே கருதப்படுகிறது.

சூழலியல் கலைச்சொற்களின் சமூக முக்கியத்துவம்
சூழலியல் சார்ந்த கலைச்சொற்கள் என்பவை வெறும் அறிவியல் தகவல்கள் அல்ல. அவை நிலத்தின் பண்பாட்டையும், மக்களின் மனநிலையையும், இயற்கையைப் பேணும் சமூகக் கடமையையும் முடிவு செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒரு தவறான சொல், ஓர் உயிரினத்தையோ அல்லது இயற்கை வளத்தையோ மனித குலத்திற்கு எதிரானதாகக் சித்தரித்துவிடும்.
மனிதர்களுக்குக் கேடு விளைவிக்காத பல உயிரினங்கள், தவறான பெயர்களால் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகின்றன. சரியான பெயரிடல் மட்டுமே மக்களிடையே ஆக்கமான பாதுகாப்பு எண்ணத்தை விதைக்கும்.
மக்களும் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளத் துல்லியமான கலைச்சொற்கள் அவசியம். மக்கள் பயன்படுத்தும் சொற்களே அரசிடமும் கொள்கை வகுப்பவர்களிடமும் எதிரொலிக்கும்.
சில சூழலியல் கலைச்சொற்கள்:
Vulture – பாறு / பாறுக்கழுகு: ‘பிணந்தின்னிக் கழுகு’ என்ற எதிர்மறைச் சொல்லைத் தவிர்த்து ‘பாறுக்கழுகு’ எனப் பயன்படுத்தலாம். அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகநானூற்று பாடல் எண்கள் 21, 247.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பாடநூல்களில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Biodiversity – உயிரியல் பன்முகத்தன்மை: வெறும் ‘இயற்கை வளம்’ எனப் பொதுமைப்படுத்தாமல், உயிரினங்களின் மாறுபட்ட பிணைப்பைக் குறிக்கும் சொல்.
Carbon Footprint – கரிமத்தடம், கரியமிலத் தடம்: ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் வளிமண்டலத்தில் வெளியிடும் பசுங்குடில் வாயுவின் மொத்த அளவைக் குறிக்கும் கலைச்சொல்.
Wetland – ஈரநிலம்: இவற்றை வெறும் பாழ்நிலமாகக் கருதாமல், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் ‘ஈரநிலம்’ என அழைப்பதே அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
Invasive Species – ஆக்கிரமிப்புச் சிற்றினங்கள்: உள்ளூர் சூழலை அழிக்கும் அயலக தாவரங்கள், விலங்குகளை ‘அந்நிய ஆக்கிரமிப்புச் சிற்றினங்கள்’ எனக் குறிப்பிடுவது அவசியம்.
Keystone Species – முதன்மைச் சிற்றினம்: ஒரு சூழலியல் மண்டலத்தின் ஒட்டுமொத்த சமநிலையைத் தாங்கிப் பிடிக்கும் உயிரினம்.
முரசு அஞ்சல் வழங்கும் நடைமுறைத் தீர்வு
செய்தி அறைகளில் (Newsrooms) வேகமாக தட்டச்சு செய்யும்போது ஏற்படும் இத்தகைய தவறுகளுக்கும், பொதுமக்கள் தங்கள் கட்டுரைகள் அல்லது வலைப்பதிவுகளில் தவறான சொற்களைப் பயன்படுத்துவதற்கும், முரசு அஞ்சல் ஒரு நேர்த்தியான தொழில்நுட்பத் தீர்வை வழங்குகிறது.
முரசு அஞ்சல் செயலியில் உள்ள தனிப்பட்ட சொற்பட்டியல் (Personal Word List) என்ற சிறப்புக்கூறு வழியாக இத்தகைய பிழைகளைத் தவிர்க்கமுடியும்.
சொற்பட்டியல் உருவாக்கம்: சூழலியலாளர்கள், ஊடக வல்லுநர்கள் அல்லது ஆர்வலர்கள் இணைந்து, சரியான கலைச்சொற்கள் அடங்கிய தனிப்பட்ட சொற்பட்டியலை ஒரு குழுவாக உருவாக்கி வைத்துக்கொள்ள முடியும்.
தானியங்கிச் சொற்பரிந்துரை: இந்தச் சொற்குழுவை முரசு அஞ்சல் மென்பொருள் அடையாளம் கண்டுகொள்ளும். அடுத்த முறை நாம் தவறுதலாக ‘பிணந்தின்னிக் கழுகு’ எனத் தட்டச்சு செய்யும்போது, மென்பொருள் உடனடியாக நாம் ஏற்கனவே அளித்த ‘பாறுக்கழுகு’ என்ற சரியான கலைச்சொல்லைச் சொற்பரிந்துரையாகக் காட்டி தவறான சொல்லைத் தவிர்க்க உதவும்.
பயன்பாட்டு வழிமுறை: மென்பொருளின் Tools -> Text Importer -> Add Annotations -> Save என்ற எளிய அமைவு மூலம் இதனை அமைத்துக் கொள்ளலாம். மேலும் தனிப்பட்ட சொற்பட்டியலை நண்பர்களுடனும் தெரிந்தவர்களுடனும் பகிரும் வசதியும் இருக்கிறது. முரசு அஞ்சல் செயலியை பதிவிறக்கம் செய்யவதற்கான வலைத்தள இணைப்புச்சங்கிலியைக் கீழே கொடுத்துள்ளோம்.
ஊடகங்களும் பொதுமக்களும் இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சரியான கலைச்சொற்களைக் கையாளும் போது, இயற்கையைப் பற்றிய நேர்மறையான அதே நேரத்தில் அறிவியல் பார்வையிலான விழிப்புணர்வு சமூகத்தில் மலரும்.
- மு. இசக்கிமுத்து
முரசு அஞ்சல் இலவசப் பதிப்பு பதிவிறக்கம்
