கண்கள் மின்னும் நெஞ்சம் அள்ளும்: கொற்கை

ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் தமிழ் எழுத்துருக் கூட குழுவினர், செல்லினம், முரசு அஞ்சல் உருவாக்குநர், வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் வழிகாட்டலில் உருவாக்கியது கொற்கை எழுத்துரு. ஒண்மை அறக்கட்டளையின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த திறமூல எழுத்துரு சில மாதங்களுக்கு முன்பு இலவசமாக வெளியிடப்பட்டது. அதன் பயன்பாடு பற்றியும் அதில் உள்ள ஒள எழுத்தின் சிறப்பு பற்றியும் முத்து நெடுமாறன் தன்னுடைய வலைத்தளத்தில் விரிவாக எழுதியுள்ளார். தன்னுடைய முகநூல் பக்கத்திலும் அதைப்பற்றிய குறிப்பொன்றை எழுதியுள்ளார். செல்லினம் வாசகர்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளோம்.

*கொற்கை எழுத்துரு வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்டன. பல புதிய தமிழ் நூல்களின் பக்கங்களை இந்த எழுத்துரு மெருகேற்றிவருகிறது. அதே வேளை நாங்கள் சற்றும் எதிர்பாராத இடங்களிலும் இதன் பயன்பாடு ஊடுருவி வருவதைக் காண்கிறோம். அச்சு நூல்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த எழுத்துரு, இப்போது இணையதளங்களிலும் இடம்பெறத் தொடங்கிவிட்டது. இதைவிட சிறுவர் நூல்களிலும் மொழி விளையாட்டுகளிலும் கொற்கை பயன்படத் தொடங்கியிருப்பது எங்கள் மனத்தைத் தொடுகிறது. கொற்கையில் உள்ள எழுத்துகளின் வடிவமைப்பை நாங்கள் சிறுவர்களுக்காகத் திட்டமிடவில்லை. இருந்தாலும் ஒவ்வோர் எழுத்தும் தனித்தனியே பளிச்சென்று தெளிவாகத் தெரிவதால் குழந்தைகள் எந்தக் குழப்பமும் இன்றி வாசிக்க உதவுகிறது என்று நூலாசிரியர்கள் கருத்துரைத்துள்ளனர்.

இவையாவும் நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு பயன்பாடே. ஒவ்வோர் எழுத்தையும் உண்மையான அக்கறையோடு வரைந்து அடுக்கி வைத்தால், அது எண்ணிப் பாரா இடங்களுக்கும் பயணம் செய்யும் என்பதை இது மீண்டும் நினைவூட்டுகிறது.

‘எளிதாக வாசிக்க முடிகிறது’, ‘கண்களுக்கு அமைதியாக இருக்கிறது’, ‘பக்கத்திற்குப் பக்கம் வாசித்தாலும் சோர்வு தட்டவில்லை’ போன்ற கருத்துகள் நேரடியாகவும் நட்பு ஊடகங்கள் வழியாகவும் பயனர்களிடமிருந்து வந்துகொண்டிருக்கின்றன – இவை ஊக்கமளிக்கின்றன. ஓர் எழுத்துருவை முழுமையாக வடிவமைப்பதற்கு நமது கண்கள் பயிற்சி பெற்றிருந்தாலும் பயனர்களின் கண்களே அதன் நோக்கத்தின் வெற்றியை உறுதிசெய்கின்றன!

மற்ற எழுத்துகளும் குறிகளும்

கொற்கை வெறும் தமிழ் எழுத்துகளை மட்டும் கொண்டதல்ல. எண்கள், நிறுத்தற்குறிகள், இலத்தீன் (ஆங்கில) எழுத்துகள் ஆகிய அனைத்தையும் ஒரே எழுத்துருவுக்குள் அடக்கிய எழுத்துரு.

தமிழ் எழுத்துகளின் சாய்வுக்கும் அளவிற்கும் ஏற்ப மற்ற எழுத்துகளையும் குறிகளையும் வடிவமைத்தோம். ஒரு தமிழ் உரைநடைப் பக்கத்தில் ஆங்காங்கே ஆங்கில மேற்கோள்கள் வரும்போதெல்லாம், வேறொரு பொருத்தமான எழுத்துருவை இனி தேடவேண்டியதில்லை – இது நூல் வடிவமைப்பாளர்கள் எதிர்நோக்கும் மிகவும் கடினமான ஒரு சிக்கல். தமிழின் சாய்வுக்கேற்ப இலத்தீன் எழுத்துகளின் சாய்வு அமையாது. அவற்றின் எழுத்தளவும் பொருத்தமற்றிருக்கும். கொற்கையில் இந்தப் போட்டி இருக்காது–எல்லா எழுத்துகளும் அமைதியாக உட்காரும். வடிவமைப்பளர்களின் வேலை எளிதாகும். வாசிப்போரின் கவனமும் குலையாதிருக்கும்.

ஔகார நீட்டல் குறி

தற்காலத் தமிழ் வரிவடிவத்தில் உள்ள ஔகார நீட்டல் குறி ள-கரத்துக்கான அதே வடிவத்தைக் கொண்டது. ‘கௌவி’ என்று தோன்றும் சொல்லை கெ-ள-வி என்றும் வாசிக்கலாம் கௌ-வி என்றும் வாசிக்கலாம். எது சரி என்பதை அருகில் உள்ள சொற்களை வைத்தே சொல்ல முடியும். மற்ற எந்த தமிழ் எழுத்துக்கும் குறியீட்டிற்கும் இந்த மயக்கம் இல்லை. துணைக்கால் கொம்பு ஐகாரக்குறி போன்று ஔகார நீட்டல் குறிக்கும் குழப்பமற்ற வடிவம் இருந்தால் சிறப்பு என்ற எண்ணம் புதிதான ஒன்றல்ல. இதனை அளவில் சிறிதாக எழுதலாம் என்று ஒரு பரிந்துரை உள்ளது. எங்களுக்கு அது ஏற்புடைய ஒன்றாகத் தென்படவில்லை. எல்லா எழுத்துகளும் ஒரு சீரான உயரத்தைக் கொண்டிருக்கும்போது இந்தக் குறிமட்டும் குள்ளமாக இருந்தால் அது வாசிப்பவரின் கவனத்தை ஈர்க்கும். பனுவலுக்கான எழுத்துருவுக்கு இந்தப் பரிந்துரை பொருந்தாது.

இதற்கான தீர்வை 2015ஆம் ஆண்டில் நடந்த ஓர் எழுத்துருவியல் கருத்தரங்கில் முன்மொழிந்திருந்தேன். அதற்கேற்ப எமது முரசு அஞ்சல் எழுத்துருக்களிலும் ஔகாரக் குறியீட்டை வடிவமைத்துச் சேர்த்திருந்தேன். ன-கரத்தின் வடிவம் ஐகாரத்திற்கு மாறுவதுபோல ள-கரத்தின் வடிவம் ஔகாரத்திற்கு மாறும். அவ்வளவுதான். இது தமிழ் வடிவங்களிலிருந்து மாறுபட்ட ஒன்றன்று. எனவே, இந்த வடிவத்தையே கொற்கையில் சேர்த்தோம். சிறிய மாற்றம் தான், ஆனால் நீண்டநாள் குழப்பத்தை இது நீக்குகிறது. ‘புதுமையாக இருக்கிறது ஆனால் புரிகிறது – பொருத்தமாகவும் இருக்கிறது’ – இதுபோன்று வரும் பயனர் கருத்துகளே இந்த அணுகுமுறையின் வெற்றியைக் காட்டுகின்றன. புதிய வடிவத்தை விரும்பாதவர்கள் பழைய வடிவத்திற்கு மாற்றுவதற்கான வாய்ப்பையும் எழுத்துருவிலேயே சேர்த்துவிட்டோம்.

முறையாக ஆய்வு செய்து வடிவமைக்கப்படும் புதிய எழுத்துருக்களை மக்கள் விரும்பி ஏற்கிறார்கள் என்பது எங்களுக்கு மிகப்பெரிய உள்ளூக்கத்தை வழங்குகிறது. மேலும் பற்பல எழுத்துருக்கள் தமிழில் மலரட்டும். தமிழ் படைப்புக்கலை வளரட்டும்!

கொற்கை முற்றிலும் இலவசம். திறமூலம். ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் தமிழ் எழுத்துருக் கூட (TFS) குழுவினர், ஒண்மை அறக்கட்டளையின் ஆதரவுடன், ஓராண்டாக ஆழ்ந்த அன்போடும் உயர்ந்த நோக்கோடும் தமிழுக்காக உருவாக்கியது!”

கொற்கை பற்றிய ஆங்கிலக் கட்டுரை

கொற்கை பற்றிய முகநூல் குறிப்பு

கொற்கை எழுத்துரு வெளியீட்டு விழா

கொற்கை எழுத்துரு பதிவிறக்கம் செய்யும் இணைப்பு

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now