ஆண்டிராய்டு 10-க்கான செல்லினம்-5.0

செல்லினம்-5.0

செல்லினம்-5.0 இன் முன்னோட்டப் பதிப்பு இன்று வெளியீடு காண்கின்றது!

ஆண்டிராய்டு 10 கடந்த ஆண்டு கூகுளால் வெளியிடப்பட்டது. இவ்வாண்டு தொடக்கம் முதல், இந்தப் பதிகை பல புதிய ஆண்டிராய்டு கருவிகளில் இயங்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்குமுன் ஆண்டிராய்டு பதினொன்றாம் பதிகையையும் கூகுள் வெளியிட்டது. இதுவரை இந்தப் பதிகை கூகுளின் பிக்சல் கருவிகளில் மட்டுமே இயங்கி வருகின்றது. மற்ற சில கருவிகளில் ஆண்டு இறுதிக்குள் இயங்கும் என எதிர்ப்பார்கப் படுகின்றது.

ஆண்டிராய்டு 10 கருவிகளில் செல்லினம் சரிவர இயங்குவதற்குப் பல தடைகள் இருந்து வந்தன. ஆண்டிராய்டின் நான்காம் பதிகைக்காக உருவாக்கப்பட்ட இன்றைய செல்லினம், ஆண்டிராய்டு 9 வரை சரியாகவே இயங்கி வந்துள்ளது. ஆனால் ஆண்டிராய்டு 10க்கான சில சிறப்புத் தேவைகள் இப்போதைய செல்லினத்தில் இல்லை. இதனாலேயே, ஆண்டிராய்டு 10இல் இப்போதைய செல்லினத்தை பதிவிறக்கம் செய்யும் போது கீழ்க்காணும் அறிவிக்கைத் தோன்றுகிறது.

இந்தச் சிக்கலை நீக்கவும், பல புதிய மேம்பாடுகளைக் கொண்டுவருவதற்கான அடித்தளங்களை அமைக்கவும், புதிய செல்லினம்-5.0 ஐ, கடந்த ஓராண்டுக்கு மேல் உருவாக்கத் தொடங்கினோம்.

இப்போது இருக்கும் செல்லினம் நான்கில் மேம்பாடுகளைச் செய்வதைவிட, புதிதாகவே உருவாக்கலாம் என்ற முடிவை பல ஆய்வுகளுக்குப் பின் எடுத்தோம். இதனாலேயே இந்தப் புதிய பதிகை வெளிவர சில காலம் பிடித்தது.

கடந்த சில மாதங்களாக ஒருசில பயனர்கள் செல்லினம்-5.0 இன் முன்னோட்டப் (பீட்டா) பதிப்பைப் பயன்படுத்தி, சிறந்த முறையில் கருத்துகளை வழங்கி வந்தனர். புதிய செல்லினம் செம்மை அடைய இவர்களின் கருத்துகள் பெரிதும் உதவியாக இருந்தன. இந்தப் பயனர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆண்டிராய்டின் பத்தாம், பதினொன்றாம் பதிகை மட்டும் இல்லாமல், பிந்தைய பதிகைகள் 5.0 வரை இந்தப் புதிய செல்லினம் சிறப்பாக இயங்குகின்றது என்ற கருத்துகள், இந்தப் பதிகையை பொதுப் பயனீட்டிற்குக் கொண்டுவருவதற்கு எங்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளன.

இன்றுமுதல், புதிய செல்லினம்-5.0 ஆம் பதிகையைக் கட்டம் கட்டமாகப் பொதுப் பயனீட்டிற்குக் கொண்டுவர முடிவெடுத்துள்ளோம். ஆண்டிராய்டு 5, அல்லது அதற்கு மேற்பட்டப் ஆண்டிராய்டு கருவிகளைக் கொண்டுள்ள பயனர்கள், கீழ்க்கண்ட இணைப்பின் வழி செல்லினம் ஐந்தின் முன்னோட்டத் திட்டதில் (பீட்டா புரோகிராம்) இணையலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam

கூகுள் பிளே செயலியில் செல்லினத்தின் பக்கம் தோன்றும். இந்தப் பக்கத்தில் சற்று கீழே சென்றால் முனோட்டத் திட்டத்தில் சேர்வதற்கான இணைப்பு இருக்கும்:

முதற்கட்டமாக, 1000 பேர் இத்திட்டத்தில் சேர்வதற்கு வரவேற்கப்படுகிறார்கள். கட்டம் கட்டமாக இந்த எண்ணிக்கை கூட்டப்பட்டு இறுதியில் அனைவரும் இந்தப் புதிய பதிகையை, முன்னோட்டத் திட்டத்தில் சேராமலே பெறுவதற்கு வழிசெய்யப்படும்.

செல்லினம்-5.0 ஆம் பதிகையின் தலையாய நோக்கமே ஆண்டிராய்டு பத்திலும் பதினொன்றிலும் சரிவர இயங்கவேண்டும் என்பதுதான். இருப்பினும், கூடுதல் பாதுகாப்பு, உணர்ச்சிக் குறிகளின் எண்ணிக்கை போன்ற ஒருசில மேம்பாடுகளைச் செய்துள்ளோம். இவை குறித்து வேறொரு பதிவில் விளக்குகிறோம்.

புதிய செல்லினத்தைப் பெறுவதிலோ பயன்படுத்துவதிலோ ஏதேனும் சிக்கல் இருந்தால், வழக்கமான அஞ்சல் முகவரியில் எங்களை அனுகலாம்: sellinam புள்ளி help at gmail புள்ளி com :)

தொடர்புடையன:

  1. மீள்பார்வை : அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now