காணொளிகளுக்கு உணர்வுப்பூர்வமான அடிக்குறிப்புகள்

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் அடிக்குறிப்புகள் (Expressive Captions) வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது ஆண்டிராய்டு இயங்குதளத்தில் ஒரு புதிய வசதியைக் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. உணர்வூட்டும் குறிப்புகள் (Expressive Captions) எனப்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய குறிப்புகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக வந்திருக்கிறது. ஆண்டிராய்டு 14 அல்லது அதற்கு மேலான பதிப்புகளில் இந்த வசதியைப் பயன்படுத்தமுடியும் என்கிறது கூகுள். ஆங்கில மொழிப் பயன்பாட்டுக்கு மட்டுமே இப்போது இந்த வசதி அறிமுகமாகியுள்ளது.

expressive captions in Android

ஒரு செய்தி என்ன சொல்கிறது என்பது எவ்வளவு முக்கியமோ அது எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிவதும் முக்கியமல்லவா? உதாரணமாக “Good Morning” என்ற செய்தியைக் காணொளியில் நமக்கு ஒருவர் அனுப்பியிருக்கிறார் எனில் அந்த வாழ்த்து சொல்லப்பட்டிருக்கும் தொனியை அறிய இந்த புதிய வசதி உதவுகிறது. “GOOD MORNING” என அனைத்தும் பெரிய எழுத்துகளில் (Capital Letters) தெரிந்தால் மிகவும் உற்சாகத்தோடு இந்தச் செய்தியை அனுப்பியுள்ளதாகப் பொருள்கொள்ளலாம் என்கிறது கூகுள். 

மூச்சுத்திணறல், பெருமூச்சு விடுதல், முனகுதல் போன்ற உணர்வு வெளிப்பாடுகளையும் இந்த உணர்வூட்டும் குறிப்புகள் (expressive captions) வசதி கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. 

ஒரு காட்சியின் பின்னணியில் இருக்கும் கைத்தட்டல்களையும் ஆரவாரங்களையும் கூட எழுத்தில் கொடுக்கவுள்ளது. இதன் மூலம் அந்தக் காட்சியின் சூழலையும் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

1970களில் செவித்திறன் குறைபாடுடையவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துப் புரிந்துகொள்வதற்காக அடிக்குறிப்புகள் (Captions) பரவலாகப் பயன்பாட்டில் இருந்தன. தற்போது எழுபது விழுக்காடு ஈராயிரக் குழவிகள் (Gen Z) தலைமுறைப் பயனர்கள் துணைத்தலைப்புகளின் (Subtitles) உதவியோடே தொலைக்காட்சியையோ திரைப்படத்தையோ பார்க்கிறார்கள் எனச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். ஒலியில்லாமல் காணொளியைப் பார்க்கும் அனைவருக்கும் துணைத்தலைப்புகள் பயன்படுத்தப்படாத காணொளிகளுக்கும் இந்த உணர்வூட்டும் குறிப்புகள் வசதி பயன்படும். 

இந்த வசதியை ஆண்டிராய்டு அலைப்பேசியில் எளிதாகச் செயல்படுத்த முடியும். அலைப்பேசியின் பக்கவாட்டில் உள்ள ஒலியைக் கூட்டவோ குறைக்கவோ உதவும் பொத்தானை அழுத்த வேண்டும். அதன்பிறகு திரையில் தெரியும் உணர்வூட்டும் குறிப்புகளுக்கு உரிய உருவப்படத்தை அழுத்தி இந்த வசதியைச் செயல்படுத்தலாம். அவ்வளவுதான். மிக எளிது.

இந்த வசதி ஆண்டிராய்டு இயங்குதளத்தில் இயங்கும் பெரும்பாலான செயலிகளிலும் பயன்படும். பதிவு செய்யப்பட்ட காணொளியில் இந்த வசதியைப் பயன்படுத்த இணையம் தொடர்பு தேவையில்லை.

  • அ.பாண்டியராஜன்

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now