இந்தோனீசியாவில் ஐபோன்16 தடை நீங்கும்

ஐபோன் 16 திறன்பேசிக்கு இந்தோனீசியாவில் இருந்த தடை நீங்க ஆப்பிள் நிறுவனம் $1பில்லியன்‌ முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் உலகின் பல்வேறு நாடுகளில் தங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களான ஐபோன் திறன்பேசி, ஸ்மார்ட்வாட்ச் விற்பனையில் கொடிகட்டிப் பறந்து வருகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இந்தோனீசியா ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 உள்ளிட்ட பொருள்களை தங்கள் நாட்டில் விற்கவும் வாங்கவும் தடைவிதித்திருந்தது‌. ஆப்பிள் நிறுவனம் தனது முதலீட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகத் தடைக்குக் காரணம் கூறப்பட்டது. 

Iphone16

உள்ளூர் முதலீட்டு விதிமுறைகள் படி இந்தோனீசியாவில் விற்பனை செய்யப்படும் திறன்பேசிகளில் 40% உதிரிப் பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்திருக்க வேண்டும். இந்த விதிமுறையைப் பூர்த்தி செய்யாததால் தடைவிதித்ததாக கூறப்பட்டது. தடைக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் இந்தோனீசியாவில் $10 மில்லியன் முதலீடு செய்வதாக அறிவித்தது. ஆனால் இந்தோனீசியா அதை நிராகரித்தது. மீண்டும் $100 மில்லியன் மதிப்பில் முதலீடு செய்வதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அதனையும் இந்தோனீசியா நிராகரித்தது.

இந்நிலையில் இந்தோனீசியாவின் முதலீட்டு அமைச்சர் ரோசன் ரோஸ்லானி “நாட்டில் விற்பனை செய்து பயனடைபவர் இங்கே முதலீடு செய்ய வேண்டும். நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நாட்டின் தேவைகள் உயர்ந்துள்ளதால் இந்தோனீசியாவும் அதன் தேவைகளை உயர்த்தும்” என்று கூறியுள்ளனர். 

பேச்சுவார்த்தைகள் தொடர்ந்ததில் தற்போது 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இத்தகவலை இந்தோனீசிய அமைச்சர் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முதலீடு தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திடம் எழுத்துப் பூர்வமாக ஒப்புதல் பெற்ற பிறகு தடை விலக்கப்படும் என முதலீட்டு அமைச்சர் ரோசன் தெரிவித்துள்ளார். எனினும் ஆப்பிள் இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கருத்து தெரிவிக்கவில்லை. 

சுமார் 280 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடு இந்தோனீசியா. கடந்த சில ஆண்டுகளில் ஆப்பிள் விற்பனை இங்கு வேகமாக அதிகரித்திருக்கிறது. தடையால் முறையற்ற வழிகளில் ஆப்பிள் திறன்பேசிகளை இந்தோனீசியா வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள். இது பற்றி ஃபினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனீசியா அரசும் ஆப்பிள் நிறுவனமும் பேசி விரைவில் முடிவெடுப்பார்கள் என நம்பலாம். ஓரிரு வாரங்களில் இதற்கான அறிவிப்பு வரும் என இந்தோனீசியா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

-சீதாராஜ்குமார்

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now