ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் புரோ, 2024ஆம் ஆண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என பாப்புலர் சயின்ஸ் என்னும் ஊடக நிறுவனம் அறிவித்திருக்கிறது.
கடந்த 1988ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கண்டுபிடிப்புகளை வரிசைப்படுத்துகிறது பாப்புலர் சயின்ஸ். அந்த வரிசையில் 2024ஆம் ஆண்டின் சிறந்த ஐம்பது கண்டுபிடிப்புகளைத் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ஆப்பிள் விஷன் புரோ முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இக்கருவி மிகுவித்த மெய்ந்நிலை (Augmented Reality) தொழில்நுட்பத்தில் ஒரு புதிய பரிணாமம்.

இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதுபோலக் கொண்டுவருவதுதான் மிகுவித்த மெய்ந்நிலை (Augmented Reality) தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம். கிரிக்கெட் விளையாட்டில் நாம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பார்த்திருப்போம். ஒரு பந்து பேட்ஸ்மேனின் மட்டையில் பட்டதா அல்லது காலில் பட்டதா என்பதை அறிய ஒரு கோடிட்டுக் காட்டுவார்கள். அந்தக் கோடு உண்மையானதல்ல. AR தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி புதிதாகப் புகுத்தப்படுவது. பந்து சென்ற திசையைக் கணித்து புதிதாக உருவாக்கப்படுவது. இதன் மூலமாக நடுவர் சரியான முடிவை எடுக்க முடியும்.
எந்தப் புதிய தொழில்நுட்பமானாலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரச் சிறிது காலமாகும். அப்படித்தான் இந்த AR தொழில்நுட்பமும். அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அனைவருக்குமானதாக இப்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. சரி, நமக்கு இந்தத் தொழில்நுட்பம் எப்படிப் பயன்படும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அன்றாடத் தேவைக்கான பொருள்களை இணைய அங்காடியில் வாங்கப் பழகிவிட்டோம் நாம். உதாரணமாக நம் வீட்டின் ஓர் அறைக்குத் தேவையான எழுத்து மேஜையை வாங்க முடிவெடுக்கிறோம். ஆனால் நாம் தேர்ந்தெடுத்திருக்கும் அந்த மேஜை அறைக்குப் பொருத்தமானதுதானா என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியமல்லவா? இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை நாம் இருந்த இடத்திலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். தொலைதூரத்திலுள்ள ஒருவரிடம் நேரடியாகப் பேசுவது போன்ற தோற்றத்தை இந்தத் தொழில்நுட்பத்தின் துணையோடு பெற முடியும்.
ஆப்பிள் விஷன் புரோ கருவியின் விலை அதிகம். 3500 அமெரிக்க டாலர் இதனுடைய அடிப்படை விலை. அதிகமான செயலிகள் தற்போது பயன்பாட்டில் இல்லை என்பது போன்ற சில குறைகள் உள்ளன. இருந்தாலும் இக்கருவி, தொழில்நுட்ப வல்லுநர்களிடம் அதிக கவனம்பெற்று வருகிறது.
பார்வைத்திறன் சார்ந்த சிக்கல் உள்ளவர்கள் கண்ணாடி அணிந்துகொண்டு ஆப்பிள் விசன் புரோவை பயன்படுத்த முடியாது. ஆனால் உங்கள் பார்வைத்திறனுக்கு ஏற்றவாறு இந்தக் கருவியிலேயே மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும். இந்தச் சாதனம் செயல்படுவதற்கென தனித்துவமான பேட்டரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை இணைத்துத்தான் பயன்படுத்த முடியும்.
இக்கருவி மூலம் திரைப்படங்களைப் பெரிய திரையில் பார்க்க முடிகிறது. கணினி விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்குச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. ஒரே நேரத்தில் பல காணொளிகளைப் பார்க்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஓர் உயர்தரமான கணினியைக் கண்களில் மாட்டிக்கொண்டிருக்கும் உணர்வைத் தருவதாக இதனைப் பயன்படுத்தியவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
வேறு என்னென்ன சிறந்த தொழில்நுட்பங்களை பாப்புலர் சயின்ஸ் பட்டியலிட்டுள்ளது என்பதை இணைப்பில் உள்ள சுட்டியின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
- அ.பாண்டியராஜன்
இணைப்புகள் :
https://www.popsci.com/technology/best-of-whats-new-2024
https://www.popsci.com/technology/wwdc-apple-vision-pro
