விண்டோசு 11 இயங்குதளம் உள்ள கணினிகளில் தட்டச்சு செய்யும் போது, உணர்ச்சிக் குறிகள் (Emoji) பயன்பாடு எளிமையாகப் போகிறது.
ஒரு தொழில்நுட்பத்தை எளிமைப்படுத்துதலே அதன் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது நாம் அறிந்ததே. ஒரு தகவலைத் தெரிவிக்க குறுஞ்செய்திகளைப் பயன்படுத்தியபோது, அதனை எளிமையாக்க உருவானவைதான் உணர்ச்சிக் குறிகள் (Emoji). சொல்ல வரும் விஷயத்தைக் கொஞ்சம் வேடிக்கையாகச் சொல்லவும் பயன்படுகின்றன. நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், என அனைத்தையுமே உணர்ச்சிக் குறிகள் மூலம் கூறிவிட முடியும்.

ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட திறன்பேசிகளில் இவற்றைப் பயன்படுத்துவது எளிதான ஒன்றாக இருக்கிறது. ஆனால் விண்டோசு கணினிகளில் கொஞ்சம் கடினமான ஒன்றுதான். அதாவது, தட்டச்சுப் பலகையில் நீங்கள் விண்டோசு பொத்தானை(winky) அழுத்தி, தொடர்ச்சியாகப் புள்ளி(.) அல்லது அரைப்புள்ளி(;) பொத்தானை அழுத்திய பிறகுதான் ஈமோஜிக்களை பெற முடியும். இந்நிலையில் விண்டோசு 11 ல் கொண்டுவரப்பட உள்ள Insider Preview Build 22635.4580 மூலம் உணர்ச்சிக் குறிகள் எளிமையாக்கப்பட உள்ளது என எக்ஸ் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் Taskbar பகுதியில் விசைப்பலகை குறிக்கு அருகே உணர்ச்சிக் குறிகளுக்கான குறுக்கு வழி (short cut) இடம்பெற உள்ளது. நாம் எப்போது தட்டச்சு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோமோ, அப்போது மட்டும் தெரியும் வண்ணமும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஒருவேளை இந்த சேவையில் விருப்பமில்லாதவர்கள் பழைய முறையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையற்ற குறியீடுகள் இருப்பதை விரும்பாத பயனர்களுக்காக இந்தத் தேர்வு உள்ளது. அதோடு நம் விருப்பம்போல அதனை மாற்றி அமைத்துக் கொள்வதற்கான (customize) அம்சங்களும் வழங்கப்பட உள்ளன.
இதன்மூலம் கணினிகளில் உணர்ச்சிக் குறிகள் பயன்பாடு அதிகரிக்கும். பயனர்கள் குறுஞ்செய்திகளை அனுப்புவதை எளிமையாக்கும் எனக் கருதப்படுகிறது. இனிமேல் கணினியில் தட்டச்சு செய்யும் மின்னஞ்சல்கள், ஆவணங்கள் மற்றும் அரட்டைகளிலும் உங்கள் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்த இயலும்.
தற்போதைய பீட்டா அப்டேட்டில் இந்த அம்சம் முடக்கப்பட்டுள்ளது. எனவே இது அனைத்து விண்டோசு 11 பயனர்களுக்கும் கிடைக்குமா என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால் பயனர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் தகவல் தெரிந்தவுடனே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- இசக்கிமுத்து
அதிகமாகப் பயன்படுத்தப்படும் உணர்ச்சிக் குறிகள் பற்றிய செல்லினம் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்.
