செயற்கை நுண்ணறிவுடன் குரல் கட்டளைகளைக் கையாளும் ஆண்டிராய்டு XR என்ற புதிய இயங்குதளத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அனைத்து நிறுவனங்களின் திறன்பேசிகளிலும் பயன்படுத்த ஆண்டிராய்டு இயங்குதளத்தை 2008ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் வெளியிட்டது. அதுவரை iOS, விண்டோஸ், சிம்பியான், பிளாக்பெர்ரி, பால்ம் எனப் பல இயங்குதளங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆண்டிராய்டு இயங்குதளம் வெளியானபிறகு திறன்பேசி வணிகத்தில் பெரிய புரட்சியே நிகழ்ந்தது. இப்போது திறன்பேசிகளில் மட்டுமல்லாது தொலைக்காட்சி, ஸ்மார்ட் கடிகாரங்கள் உள்ளிட்ட கருவிகளிலும் ஆண்டிராய்டின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது.

ஆண்டிராய்டு போலவே இப்போது மிகுவித்த மெய்ந்நிலை, மெய்நிகர் உண்மை (Augmented Reality, Virtual Reality) தொழில்நுட்பம் உள்ள கருவிகளில் பயன்படக்கூடிய பொதுவான ஓர் இயங்குதளத்தை ஆண்டிராய்டு XR என்ற பெயரில் கூகுள் வெளியிட்டிருக்கிறது.
2012ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற கருவியையும் அதற்கான மென்பொருளையும் வெளியிட்டது நினைவிருக்கலாம். ஆனால் அதிலிருந்த பல குறைபாடுகளின் காரணமாகப் பயனர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. கூகுள் இப்போது கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக்கொண்டுள்ளது. தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்குவதை விட அனைத்து நிறுவனக் கருவிகளிலும் பயன்படக்கூடிய ஓர் இயங்குதளத்தை வெளியிடுவது எனச் சரியான முடிவை எடுத்திருக்கிறது கூகுள் நிறுவனம்.
ஆண்டிராய்டு XR என்பது ஆண்டிராய்டு இயங்குதளத்தின் நீட்சி என எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் இந்த இயங்குதளத்தின் மூல நிரல் ஆண்டிராய்டு இயங்குதளத்தினுடையது. புதிய தொழில்நுட்பக் கருவிகளில் இயங்கத் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் குரல் கட்டளைகளைக் கையாளும் வகையில் இந்த இயங்குதளம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் புரோ கருவிக்கு visionOS இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் குரல் கட்டளை வசதியான Siri செயலியும் பயன்படுகிறது. ஆனால் visionOS இயங்குதளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைச் சார்ந்து இயங்கும் வசதியில்லை. இதையெல்லாம் கவனமாகக் கருத்தில் கொண்டு தனது புதிய இயங்குதளத்தை வெளியிட்டிருக்கிறது கூகுள்.
இந்தப் புதிய இயங்குதளம் அனைத்து நிறுவனக் கருவிகளிலும் இயங்குமென்பதால் பிற நிறுவனங்கள் மென்பொருள் சார்ந்து அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை. ஆண்டிராய்டு போலவே தங்கள் நிறுவனக் கருவிகளுக்கு ஏற்றவாறு மிகச்சிறிய மாற்றங்களைச் செய்தால் போதுமானது.
கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும் பெரும்பாலான செயலிகளும் இந்தப் புதிய இயங்குதளத்திலும் பயன்படும் என்பதால் அதிகமான செயலிகளை பயனர்கள் பயன்படுத்த முடியும்.
எந்தெந்த கருவிகளில் இந்த இயங்குதளம் செயல்படுமென்பதை இன்னும் கூகுள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. இதற்கென தனித்துவமான கருவி எதையும் வெளியிடவில்லை. விரைவில் வெளியாகவிருக்கும் சாம்சங் நிறுவனத்தின் Virtual Reality headset இந்தப் புதிய இயங்குதளத்தில் செயல்படும் முதல் கருவியாக இருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்தப் புதிய இயங்குதளம் குறித்த மேலதிகத் தகவல்களைக் கீழேயுள்ள இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
- அ. பாண்டியராஜன்
