கூகுள் நிறுவனத்தின் பிளே இன்டகிரிடியில் (Play Integrity) வரப்போகும் புதிய மாற்றங்கள் ஆண்டிராய்டு செயலிகளின் பாதுகாப்பை வலுவாக்கும்.
Google Play Integrity API என்பது ஆண்டிராய்டு செயலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதிமுறைகள் அடங்கிய ஓர் அமைப்பாகும். இது செயலிகள், திறன்பேசிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதிக்க உதவுகிறது. இதன் விதிமுறைகளைப் பின்பற்றும் செயலிகள் மட்டுமே நம் திறன்பேசியில் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் மட்டுமே பயன்படுத்தத் தகுந்தவையாகக் கருதப்படுகின்றன. அதாவது நீங்கள் பயன்படுத்தும் ஏதோ ஒரு செயலியால் உங்கள் தனிநபர் விவரங்கள் திருடப்படும்போதோ, வேறு ஏதேனும் மோசடிகள் நிகழும்போதோ, அந்த செயலியை நீக்க வேண்டும் என பிளே இன்டகிரிடியால் அறிவுறுத்தப்படும்.

இதன் மூலம் சாதாரண பயனர்கள் பெரும்பாலும் நன்மைகளையே அடைகின்றனர். ஒருவர் நம்பகத்தன்மை அற்ற ஒரு மூலத்திலிருந்து செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, செயலின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. பிளே இன்டிக்கிரிடி சேவையின் மூலமாகத்தான் 80 விழுக்காடு குற்றங்கள் குறைவதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது.
இப்போது இதில் புதிய அம்சங்களைக் கொண்டுவரப் போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஆண்டிராய்டு 13, 14, 15, 16 இயங்குதளம் உள்ள திறன்பேசிகளில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட உள்ளது. 2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும். இதில், பல்வேறு புதிய விதிமுறைகள் உள்ளன. இதன் மூலம் முன்பு இருந்ததைவிடவும் 90 விழுக்காடு குற்றங்களை குறைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
இதன்மூலம் கூகுள் பிளே ஸ்டோர் தவிர, பிற மூலங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது, அதைப் பற்றிய தகவல்கள், உரிமம் போன்றவை பயனர்களுக்குக் காண்பிக்கப்படும். அதை பயனர்கள் விரும்பாத பட்சத்தில், அந்த செயலியை பதிவிறக்கம் செய்வதை நிறுத்திக் கொள்ளலாம். நிரலாளர்கள் (developer) அதிகளவில் பயன்படுத்தக்கூடிய SDKவுக்கும் (Software development kit) புதிய எளிமையான விதிமுறைகளை வகுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
பிளே இன்டகிரிடியால் (Play integrity) ஏன் நிரலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்?
அறியப்படாத மூலங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் நிரலாளர்கள் புதிய விதிகளால் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் நிரலாளர்கள் தம் வேலையைச் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படலாம். நிரலாளர்கள் தங்கள் பயன்பாட்டுத் தளத்தின் கட்டமைப்பையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். இது அதிக செலவினங்களை உருவாக்கும். மேலும் அவர்கள் பிளே இன்டகிரிடி வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால், அவர்களுடைய செயலிகள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படும் நிலை ஏற்படலாம். எனவே, இந்த புதிய APIல் எந்த மாதிரியான வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட உள்ளன என்பதை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.
- இசக்கிமுத்து
