ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்துகின்றனர். எனினும் அவ்வப்போது தனியுரிமை மீறல் வழக்குகள் கூகுள் தேடுபொறியைக் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. அதே சமயத்தில் கூகுளின் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் எனப் பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகின்றன. இந்நிலையில் தனக்கு இந்த தேடுதல் பொறி போட்டியே வேண்டாம் என ஒதுங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் தன்னுடைய சொந்த இணைய உலாவியான சஃபாரியை மேம்படுத்தி வருகிறது. எனினும் சஃபாரியின் தேடுதல் பொறியாகக் கூகுளே உள்ளது. இவ்வளவு வளர்ச்சயைடைந்த பின்பும், சொந்தமான தேடுபொறி இல்லாதது குறையாகவே இருந்துவந்தது. இந்நிலையில் அதற்கான காரணம் என்னவென்பது பற்றியும், அது தேவையா என்பது பற்றியும், ஆப்பிள் நிறுவனத்தின் துணைத்தலைவரான எட்டி கியூ (Eddy Cue) பேசியிருக்கிறார். ஆப்பிள் ஒருபோதும் சொந்த தேடுதல் பொறியை உருவாக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் கூகுள் நிறுவனம், தங்களது கூகுள் தேடுபொறியை ஆப்பிள் கருவிகளில் முதன்மையாக வைத்திருப்பதற்காக, சுமார் இருபது பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்பிள் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அதோடு சஃபாரி இணைய உலாவியின் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் 37 சதவீத வருமானத்தையும் ஆப்பிள் நிறுவனமே பெறுகிறது. இதன்மூலமே சொந்தமான தேடுபொறி என்பது ஆப்பிள் நிறுவனத்திற்குத் தேவையற்ற செலவுதான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கான காரணங்கள் என்னவென்று எட்டி கியூ சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
1. ஆப்பிள் புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில் ஒரு தேடுபொறியை உருவாக்க அதிகளவிலான முதலீடுகள் மற்றும் பணியாளர்கள் தேவைப்படும். இதன்மூலம் பல பில்லியன் டாலர்கள் செலவு ஏற்படும்.
2. செயற்கை நுண்ணறிவின் சமீபகால முன்னேற்றங்கள் காரணமாக, தேடல்களில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே ஒரு தேடுபொறியை உருவாக்க, பெருமளவில் செலவு செய்வது பொருளாதார ரீதியாக மிகவும் ஆபத்தானது.
3. ஓர் ஆக்கப்பூர்வமான தேடுபொறியானது, பயனர்களுக்கு விளம்பரங்களைக் காட்டும் வகையில் அமைய வேண்டும். ஆனால் ஆப்பிளின் அடிப்படைக் கொள்கைகள் அதற்கு நேர்மாறாக உள்ளன. ஆப்பிளிடம் விளம்பர வணிகத்தை உருவாக்கத் தேவையான பணியாளர்கள் அல்லது பெரிய உள்கட்டமைப்புகள் இல்லை. ஆப்பிள் அதன் ஆப்ஸ்டோர் தளத்தில் விளம்பரங்களைக் கொண்டிருந்தாலும், தேடல் விளம்பரம் என்பது முற்றிலும் வேறுபட்டது. ஒரு தேடல் விளம்பர வணிகத்தை உருவாக்க வேண்டுமாயின் அவர்களின் நீண்ட கால தனியுரிமைக் கொள்கைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இக்காரணங்களோடு ஆப்பிள் கவனம் செலுத்தும் சந்தையில் அவர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒற்றை நிறுவன மேலாதிக்கக் குற்றச்சாட்டுச் சிக்கலை கூகுள் பல காலமாக எதிர்கொள்கிறது. கூகுள் சந்திக்கும் வழக்கில் அவர்களுக்கு ஆதரவாகவே ஆப்பிள் இருக்கிறது. கூகுள் தேடுபொறி இல்லையெனில் தங்களுக்குத் தொல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.
-மு.இசக்கிமுத்து
