ஓர் ஒன்றியம் ஒரு மின்னேற்றி

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது மின்னேற்றி (Charger) விதிமுறை டிசம்பர் 28, 2024 அன்று நடைமுறைக்கு வந்தது. இதன்படி, பல வகையான திறன்கருவிகளும் USB-C மூலம் மின்னேற்றம் செய்யப்படும் வகையில் இருக்க வேண்டும். இல்லையெனில் அவை ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யும் தகுதியை இழக்கும்.

USB C Charger

இந்தப் புதிய விதிமுறையால் ஐபோன் 14, ஐபோன் எஸ்ஈ ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. USB-C மின்னேற்றி வசதியானது மடிக்கணினிகளிலும் கட்டாயமாகிறது. கெடுத் தேதி மட்டும் வேறு. ஏப்ரல் 28, 2026ஆம் ஆண்டு முதல் இதுவும் நடைமுறைக்கு வந்துவிடும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது மின்னேற்றி விதிமுறை, உலகளவில் மாற்றத்தை உண்டாக்கும். உலகளாவிய தரப்படுத்துதலுக்கு வழி கோலுகிறது. பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் தாமாகவே USB-C மின்னேற்றியை ஏற்றுக்கொண்டன. ஆப்பிள் போன்ற சில நிறுவனங்கள் மட்டும் தயக்கம் காட்டின. இப்போது சட்டமாகவே வந்துவிட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

இப்போது வந்த சட்டமல்ல இது. 2022ஆம் ஆண்டே இச்சட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய சபை அங்கீகாரம் கொடுத்தது. திறன்கருவி உற்பத்தியாளர்கள் தங்கள் கருவிகளின் வடிவமைப்புகளை மாற்றிய அமைக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் திறன்பேசிகள், மடிக்கணினிகள், டிஜிட்டல் கேமராக்கள், ஒலிப்பான்கள், சிறிய ஒலிபெருக்கிகள், படிப்பான்கள், தட்டச்சுக் கருவிகள் அனைத்துக்கும் இவ்விதி நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. USB-C பயன்படுத்தும் வகையில் இல்லையேல் விற்பனை செய்யமுடியாது.

இதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் நன்மைகள் இருக்கிறதா என்றால் ஆம் எனலாம். ஒவ்வொரு நிறுவனத்தின் மின்னேற்றியும் ஒவ்வொரு விதமாக இல்லாமல் ஒரே மாதிரி இருந்தால் எதை வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நுகர்வோர் வசதி இதனால் அதிகரிக்கிறது. மின்னேற்றி இல்லாமல் விற்பனை செய்யும் திறன்கருவிகளின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. பணவீக்கச் சிக்கல்களால் ஒரு வேலை விலை குறையவில்லை எனினும் மேற்கொண்டு விலை கூடுவதைத் தடுக்கும்.

இவற்றைவிட முக்கியமான ஒரு விஷயம் ஒவ்வொரு முறை திறன்பேசியோ வேறு கருவியோ வாங்கும் போதும் பழைய மின்னேற்றியே பயன்படுத்தலாம். இதன் மூலம் மின்னணுக் கழிவுகள் குறைகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைகிறது.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now