கூகுள் ஈஸ்டர் முட்டை : ஸ்க்விட் கேம்

கூகுள் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஈஸ்டர் முட்டை என்கிற வேடிக்கை விளையாட்டை வெளியிடும். பல ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம் இது. இந்த முறை நெட்பிளிக்ஸ் தளத்தின் அதிகப் புகழ் வீச்சுடைய ஸ்க்விட் கேம் தொடர்தான் அடிப்படை. 

Easter Eggs Squid Game

இத்தொடரில் சிவப்பு விளக்கு, பச்சை விளக்கு என்றொரு விளையாட்டு இருக்கும். அந்த விளையாட்டை ஈஸ்டர் முட்டை விளையாட்டாக மறு உருவாக்கம் செய்துள்ளனர். கைப்பேசியிலோ கணினியிலோ Squid Game எனத் தேடினால் இந்த ஈஸ்டர் முட்டை புலப்படும். திரையின் அடிப்பகுதியில் பெரிய கட்டத்தினுள் இத்தொடரில் பிரபலமான வடிவங்களான வட்டம், முக்கோணம், சதுரம் தெரியும்.

அதை அழுத்தினால் விளையாட்டு தொடங்கும். திரையின் அடியில் ஆறு வீரர்கள் இருப்பார்கள். அதற்குக் கீழே பச்சை வட்டத்தினுள்ளே ஒரு வட்டமும் சிவப்பு வட்டத்தினுள்ளே ஒரு பெருக்கல் குறியும் இருக்கும். பச்சை வட்டத்தை அழுத்தினால் ஆறு பேரும் திரையின் மேற்பகுதியை நோக்கி நகர்வார்கள். சிவப்பு வட்டத்தை அழுத்தினால் நின்றுவிடுவார்கள். 

திரையின் மேற்பகுதியில் ஒரு பொம்மை இருக்கும். அந்தப் பொம்மை திரும்பிப் பார்க்கும் போது ஆறு பேரில் யாராவது ஒருவர் நகர்ந்தால் முடிந்தது கதை. அந்த பொம்மை திரும்பிப் பார்ப்பதற்குள் சிவப்பு வட்டத்தை அழுத்தி ஆறு பேரும் நகராமல் நிறுத்த வேண்டும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பொம்மை வேறு பக்கம் திரும்பி இருக்கும் போது நகர்ந்து நகர்ந்து கோட்டைக் கடந்துவிட்டால் வெற்றி. 

வென்றால் பரிசெல்லாம் கிடையாது. வட்டம், முக்கோணம், சதுரம் எல்லாம் குட்டி குட்டியாக மழை போலப் பொழிந்து வெற்றியைக் கொண்டாடும் கூகுள். ஸ்க்விட் கேம் தொடரிலும் அப்படித்தான். வென்றவர்கள் உயிர் பிழைப்பார்கள். அதுதான் பரிசு. 

கடந்த டிசம்பர் 26, 2024 அன்று ஸ்க்விட் கேம் இரண்டாம் பருவம் நெட்பிளிக்ஸில் வெளியானது. முதல் பருவத்தைப் போலவே இரண்டாம் பருவமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தென் கொரியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான லீ ஜோங் ஜே, லீ பையிங் ஹான் ஆகியோர் நடிப்பில் உருவான இந்தத் தொடர், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளது.

ஸ்க்விட் கேம் தொடரின் முதல் பருவம் 2021ஆம் ஆண்டு வெளியானது. பணப்பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் மக்கள் பங்கேற்கும் கொடூரமான விளையாட்டுகளை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், நெட்பிளிக்ஸின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 111 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொடரைப் பார்த்துள்ளனர்.

தற்போது இரண்டாவது பருவத்தின் வெளியீட்டைக் கொண்டாட ஈஸ்டர் முட்டை வடிவத்தில் வந்துள்ளது. தொடரைப் போலவே கூகுள் ஈஸ்டர் முட்டைகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர். இரட்டைக் கொண்டாட்டமாக இருக்கிறது. நீங்களும் கூகுளில் Squid Game எனத் தட்டச்சு செய்து விளையாடிப் பாருங்கள்.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now