கருவிகளைக் கண்டுபிடி

திறன்பேசி என்பது நம்முடைய அங்கங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. அந்த திறன்பேசி திடீரென காணாமல் போய்விட்டால், தேடும் போது ஏற்படும் மனநிலையை சொற்களால் கூற முடியாது. அந்த தேடுதல் வேட்டையில், வீட்டையே புரட்டிப்போடும்போது எவ்வளவு மன அழுத்தம் ஏற்படும் என்பதை நாம் அறிவோம். இப்படிக் காணாமல்போன ஆண்டிராய்டு திறன்பேசிகளையும், ப்ளூடூத் பொருத்தப்பட்ட பிற கருவிகளையும், டிஜிட்டல் பொருள்களையும் கண்டுபிடிப்பதற்காக, கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் கருவியைக் கண்டுபிடி (Find My Device) செயலி. இதன்மூலம் நமது ஆண்டிராய்டு கருவிகள் தொலைந்து போகும்போதோ அல்லது திருடப்படும்போதோ தொலைதூரத்திலிருந்தே அதைப் பூட்டிவைக்கலாம். அழைப்பை ஒலிக்கவிடலாம். தரவுகளை அழிக்கலாம்..

find my device

கருவியைக் கண்டுபிடி செயலி எப்படி வேலை செய்கிறது?

Find My Device செயலி பெரும்பாலான ஆண்டிராய்டு திறன்பேசிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் நமது கருவிகளில் கூகுள் கணக்கை வைத்திருந்தால் இது தானாகவே இயக்கப்படும். கூகுள் மேப்ஸ் மூலம் நமது திறன்பேசியைக் கண்டறிய இந்த வசதியைப் பயன்படுத்தலாம். உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க இச்செயலி பயனுள்ளதாக இருக்கிறது.

ஆண்டிராய்டு கருவியில் செயலியைப் பதிவிறக்கம் செய்து, கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும். அதற்குத் தேவையான இருப்பிடம் போன்ற அனைத்து அனுமதிகளையும் வழங்கவும். அவ்வளவுதான். பிறகு எப்போதாவது தொலைந்துபோனால் வேறொரு திறன்கருவியில் கருவியைக் கண்டுபிடிக்கும் செயலியில் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைந்தால் போதும். தொலைந்த திறன்பேசி இருக்கும் தற்போதைய தோராயமான இருப்பிடத்தைக் காண்பிக்கும்.

ஒருவேளை அது உங்கள் அருகில் இருப்பின், ஒலியை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். தொலைந்த கருவியானது தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்குச் சத்தமாக ஒலிக்கும். திறன்பேசியைக் கண்டறிந்ததும் ஒலிப்பதை நிறுத்த பொத்தானை அழுத்தவேண்டும்.

திறன்பேசி பக்கத்திலேயே இருந்தால் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் மீட்க முடியாத தூரத்தில் இருந்தாலோ திருடு போயிருந்தாலோ குறைந்தபட்சம் அதை மற்றவர் பயன்படுத்த முடியாதபடி தடுப்பது அவசியமாகிறது. அம்மாதிரி சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட தகவலை யாரும் பார்ப்பதையோ அல்லது திறன்பேசியின் தரவைப் பயன்படுத்துவதையோ தடுக்க உடனடியாக அதனைப் பூட்டலாம். கருவியைப் பாதுகாக்கவும் (Secure device) என்பதைத் தேர்ந்தெடுத்தால் நமது திறன்பேசி பூட்டப்படும். திருடு போகாமல் இருந்து யாரோ நல்லவர்கள் கையில் கிடைத்து அதைத் திருப்பித் தர நினைத்தால் அதற்கும் வழியுண்டு. பூட்டிய திரையில் நம்மைத் தொடர்பு கொள்ளும்படி செய்தியைச் சேர்க்கலாம். 

நமது திறன்பேசியை மீட்டெடுக்க முடியாது என்று முடிவாகிவிட்டால் கடைசி ஆயுதத்தை எடுக்கவேண்டியதுதான். இருக்கும் இடத்தில் இருந்தே நமது தரவுகளை தொலைந்து போன கருவியில் இருந்து அழிக்கலாம். அழித்துவிடு (Erase device) என்பதைத் தேர்ந்தெடுத்தால் எல்லாம் போய்விடும். இதன் மூலம் நமது அனைத்து தரவுகளையும் இழக்க நேரிடும். எனவே இது கடைசி முயற்சியாகவே இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் ஆப்பிள் பயனர்கள் நெடுங்காலமாகப் பயன்படுத்தி வந்த இச்சேவை சமீக காலத்தில்தான் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் இச்சேவை மேம்பட்டு வருவதில் ஆண்டிராய்டு பயனர்களுக்கு மகிழ்ச்சியே.

செயல்முறைப் படங்களுடன் விளக்கமாக கூகுள் வலைப்பக்கத்தில் படிக்கலாம்.

  • இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now