வண்ணக் காகித மழை

வாட்சாப் உயிரோட்ட உணர்ச்சிக் குறிகள் பட்டியலில் இணைந்தது வண்ணக் காகித மழை பொழியும் (Party popper) சின்னம்.

WhatsApp Party Popper emoji
WhatsApp Party Popper emoji

பண்டிகைக் கால கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் விதமாக வாட்சாப் செயலியும் புதுப்புது அம்சங்களைக் கொண்டுவந்தது. இதற்கு முன்பு வரை குறுஞ்செய்திகளுக்கு எதிர்வினை செய்யும்போது ஆறு உணர்ச்சிக்குறிகள் காண்பிக்கப்படும். கூட்டல் குறியீட்டைத் தட்டி அதற்கு மேல் தேவைப்படும் உணர்சிக்குறிகளை பயன்படுத்தலாம். பண்டிகைக் காலம் என்பதால் கொண்டாட்டத்தை உணர்த்தும் வகையில் ஏழாவதாக ஓர் உணர்ச்சிக்குறியை அறிமுகப்படுத்தியது வாட்சாப்.

விழாக்கள், கேளிக்கைகள், கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியைத் தெரிவிக்க வண்ணக் காகிதங்கள் அடங்கிய உருளையை வெடிக்க வைத்து காகித மழை பொழிய வைக்கிறோம். நிஜவாழ்வில் செய்யும் இதைக் குறியீடாக உணர்ச்சிக்குறிகளிலும் சேர்த்துள்ளார்கள். கேளிக்கைத் தொப்பியில் காகிதம் வெடித்துச் சிதறும் (Party popper) உணர்ச்சிக்குறி உள்ளது. இந்த உணர்ச்சிக்குறி கடந்த 2010இல் யூனிகோடு 6.0 பதிப்பின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. 2015இல் உணர்ச்சிக்குறி1.0 உடன் சேர்க்கப்பட்டது. பார்ப்பதற்கு, சிகப்பு மற்றும் தங்க நிறம் கொண்ட கூம்பு வடிவத் தொப்பியிலிருந்து பல வண்ணக் காகிதத் துண்டுகள் வெளிவருவதைப் போன்று காணப்படும்.

விழாக்காலத்தை முன்னிட்டு இதைத் தேடிச்சென்று பயன்படுத்தாமல் ஏழாவதாகக் காண்பிக்கும்படி வாட்சாப் வைத்திருந்தது. இந்த புதிய பதிப்பில் மற்றொரு கொண்டாட்டமும் இணைந்திருந்தது. குறிப்பிட்ட உணர்ச்சிக்குறிகளைக் கொண்ட குறுஞ்செய்திகளுக்கு எதிர்வினையாற்றும் போது Dynamic confetti animation வரும். அதாவது உணர்ச்சிக்குறிகள் வெறுமனே தட்டையான படமாக இல்லாமல் ஆடி அசையும் முப்பரிமாணப் படமாக இருக்கும். கேளிக்கைத் தொப்பியும் காகிதத் துண்டுகளும் இருக்கும் உணர்ச்சிக்குறியை அழுத்தினால் நிஜ வாழ்வில் வெடித்துச் சிதறுவதைப் போலவே வாட்சாப் திரையில் வண்ணக்காகித மழை பொழியும். எளிதாகத் தேர்ந்தெடுக்கும் வசதியும் காகித மழையும் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்த அம்சங்கள் ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் உள்ளிட்ட அனைத்து இயங்குதளங்களிலும், தனிப்பட்ட அரட்டைகள், குழு அரட்டைகள் மற்றும் சேனல்கள் உட்பட அனைத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டன. செயலி சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இது வேலை செய்தது. இதற்கு முந்தைய பதிப்பில் காணொளி அழைப்புகளில் தேவையான நபர்களைச் சேர்த்தல், ஃபில்டர்களைப் பயன்படுத்துவதற்கான வசதிகள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய வசதிகள் எல்லாம் இனிமேல் தொடரும் என்றாலும் உணர்ச்சிக்குறியை அழுத்தினால் காகித மழை பொழிவது விழாக்கால கொண்டாட்டங்களுக்கு மட்டுமே. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டாலும் தமிழர்களுக்குப் பொங்கல் கொண்டாட்டம் மிச்சமிருக்கிறது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு கொண்டாட்டம் இருந்துகொண்டுதானிருக்கிறது. வருடம் முழுக்க வாட்சப் திரையிலாவது காகித மழை பொழியும் கொண்டாட்டத்தை ரசிக்க பயனர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அனிமேஷன் வசதியையும் விழாக்காலம் முடிந்த பிறகும் வைத்திருக்கலாம் என்று பயனர்கள் விரும்புகிறார்கள்.


-மு. இசக்கிமுத்து.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now