சமையல் முதல் படிப்பு வரை இல்லாத காணொளிகளே இல்லை என வலம் வருகிறது யூடியூப். இந்த யூடியூப் படைப்பாளிகள் ஒரு காணொளியை உருவாக்க எவ்வளவு யோசிக்கிறார்களோ அதைவிட அதிகமாக அதன் சிறுபடத்தை(Thumbnail) உருவாக்குவதில் தங்கள் மொத்த சிந்திக்கும் திறனையும் களம் இறக்குகிறார்கள். இந்த அதீத சிந்திக்கும் திறன்தான் பார்வையாளர்களை சில நேரங்களில் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.

இதற்கெல்லாம் காரணமாக இருப்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அதன் மூலம் அதிக சந்தாதாரர்களைப் பெறுவதுமே. இந்த ஆவல் மிகுதியால் சில நேரங்களில் நல்ல உள்ளடக்கத்தைக் கொண்ட காணொளிகள் கூட பார்வையாளர்கள் மத்தியில் ஒரு வித ஏமாற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன. சிறுபடங்களில் கொடுக்கப்படும் தலைப்புகள் காணொளிகளுக்குத் தொடர்பில்லாமல், பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் வைக்கப்படுகின்றன. ஒரு நம்பகத்தன்மையான தகவலுக்காக யூடியூபில் தேடுதலை மேற்கொள்ளும் பயனர்கள், இதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. செய்திகளுமே இந்த வகையில் திரித்துக் கூறப்படுவதால் பார்வையாளர்கள் பெருமளவில் விரக்தியடைகின்றனர்.
உதாரணமாகப் பள்ளிக்கூட விடுமுறை செய்திகளை எடுத்துக்கொள்வோம். மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது செய்தியாக இருந்தாலும், தலைப்பில் ‘மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை’ எனக் காட்டப்பட்டு இருக்கும். அதன் அருகில் கண்ணிற்கே தெரியாத வகையில் கேள்விக்குறி இடம்பெற்றிருக்கும். இவையெல்லாம் பார்வையாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளே.
இது பற்றி கூகுளும் தன்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. “யூடியூபில் மோசமான சிறுபடங்களை(Thumbnail) சமாளிப்பதற்கான எங்கள் முயற்சிகளை வலுப்படுத்தி வருகிறோம். அதாவது ஒரு காணொளியின் சிறுபடமானது, அந்த காணொளியில் இடம்பெறாத தகவல்களைப் பற்றிக் காட்டுவதாக இருந்தால் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். முக்கியமான செய்திகள் அல்லது தற்போதைய நிகழ்வுகள் போன்ற பிரிவில் வரும் காணொளிகளிலே இது அதிகளவில் காணப்படுகிறது. இதனைப் பார்க்கும் பயனர்கள் விரக்தியடைகிறார்கள். இனி வரும் காலங்களில் இந்தியாவில் புது விதிகளை அமல்படுத்துவதன் மூலம் இதனைத் தடுக்க முயல்வோம்.” என்கிறது கூகுள்.
முதல் நடவடிக்கையாக இது போன்ற காணொளிகளை, அதனைப் பதிவேற்றியவர்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் அகற்ற முடிவு செய்துள்ளோம். படைப்பாளர்களுக்கு இது தொடர்பான பயிற்சியை அளிக்க உள்ளோம். இது நல்லதொரு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
பார்வையாளர்களை ஏமாற்றி தங்கள் தளத்துக்கு வரச்செய்வது அறமற்றது என்பதை காணொளி உருவாக்குபவர்களும் உணரவேண்டும். ஓரிரு முறை ஏமாந்த பிறகு பார்வையாளர்கள் இத்தகைய தளங்களை புறக்கணிக்கவே செய்வார்கள். நீண்ட கால நோக்கில் உள்ளடக்கம் உருவாக்கும் தளங்களுக்கும் இதனால் எந்தப் பயனும் இல்லை. குறுகிய காலப் பலனுக்காக இப்படிச் செய்தல் முறையல்ல.
- மு.இசக்கிமுத்து.
