செய்திகள் வாசிப்பது செயற்கை நுண்ணறிவு

செய்தி அறிவிப்புகளைச் சுருக்கமாகப் பயனர்களுக்குத் தரும் விதமாகச் செயற்கை நுண்ணறிவு வசதியைக் கடந்த டிசம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. iOS 18.1 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்புகளில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்தது. 

AI news
AI news

முன்னணி ஊடகங்களின் செய்திகளைத் தொகுத்துத் தருவதற்காக உருவாக்கப்பட்டது இந்த வசதி. ஆனால் சில தொழில்நுட்பச் சிக்கல்களின் காரணமாக அந்த செய்திகள் சரியானதாகப் பயனர்களுக்குச் சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கின. 

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தொகுக்கப்படும் இந்தச் செய்திச் சுருக்கங்கள் ஊடகங்கள் வெளிப்படுத்தும் செய்திகளைச் சரியாகப் பிரதிபலிப்பதில்லை. மாறாக அந்தச் செய்திகளிலிருந்து முற்றிலும் முரண்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. நம்பகத்தன்மைதான் செய்தி நிறுவனங்களுக்கு ஆதாரம் என்பதால் ஆப்பிள் நிறுவனம் இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

பொதுமக்களுக்குத் தவறான செய்திகளை வழங்கும் இந்த வசதியை ஆப்பிள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனப் பத்திரிகையாளர்களுக்கான மிகப்பெரிய சங்கங்களில் ஒன்றான தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. 

இந்த செய்திச் சுருக்கங்களைப் பயனர்களுக்கு வழங்கும்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என ஆப்பிள் பயனர்களுக்குத் தெரியப்படுத்துகிறது. ஆனாலும் இந்த அறிவிப்பு குறைகளை முழுமையாகச் சரிசெய்ய போதுமானதாக இல்லை எனப் பல தரப்பிலிருந்தும் கருத்துகள் எழத்தொடங்கியிருக்கின்றன. 

ஆப்பிள் நிறுவனம் மட்டுமல்ல பிற நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு வசதிகளும் இத்தகைய குறைபாடுகளைக் கொண்டதாகவே வெளிவந்தன. குறிப்பாகக் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் இதுபோன்றதொரு செயற்கை நுண்ணறிவு வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. தங்களது தேடுபொறியில் முன்னணியில் இருக்கும் செய்திகளைத் தொகுப்பதன் மூலமாகப் பயனர்களின் கேள்விகளுக்கு முறையற்ற பதிலை அளிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பொதுவாக இந்த வசதி சரியாகச் செயல்படுவதாகவும் ஒரு சில தவறுகளை வைத்து முடிவு செய்யக்கூடாது எனவும் அப்போதைக்கு நிலைமையைச் சமாளித்தது கூகுள். 

இந்த செயற்கை நுண்ணறிவு வசதியைப் பயனர்களின் கருத்துகளைப் பெற்று மேம்படுத்தி வருவதாக ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறது. இன்னும் சில வாரங்களில் மேம்படுத்தப்பட்ட வசதியை வெளியிடும்போது இத்தகைய தவறுகள் சரிசெய்யப்படும் எனவும் உறுதியளித்திருக்கிறது. 

அன்றாடப் பயன்பாட்டிற்காகத் தொழில்நுட்பங்களை மக்கள் நம்பத் தொடங்கிவிட்ட காலம் இது. அத்தகைய நம்பிக்கைக்கு மதிப்பளித்துக் குறைவில்லாத சேவையைப் பயனர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது அனைத்து நிறுவனங்களுக்கும் இருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு. 

  • அ.பாண்டியராஜன்
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now