முதல் வலைத்தளம்

உலகின் முதல் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டு முப்பத்து நான்காண்டுகள் ஆகின்றன. 1990ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி முதல் வலைத்தளம் உருவாக்கப்பட்டது. கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையின் ஒரு தொடக்கமான இதனை 1955ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த டிம் பெர்னர்ஸ் லீ எனும் கணினி அறிவியல் விஞ்ஞானி உருவாக்கினார். 

First Website

லீ, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர். கல்லூரிப் படிப்பை முடித்து தொலைத்தொடர்புத்துறையில் வேலைக்கு சேர்ந்தார். எண்பதுகளில் ஐரோப்பாவுக்கான அணு ஆராய்ச்சிக் குழுவில் ஒப்பந்ததாரராகப் பணி செய்துகொண்டிருந்தார் டிம். 

உலகெங்குமிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் அங்கு வந்து ஆய்வுகளை செய்வது வழக்கம். அப்போது தங்களுடைய சொந்தக் கணினிகளை எடுத்துவந்து ஆய்வுக்குப் பயன்படுத்துவதைப் பார்த்தார். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெற முடிந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் வந்தது. Hepertext, tcp, dns என மூன்று யோசனைகளை ஒன்றிணைத்து ஒரு தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்க முடிந்தால் அவர்களுடைய பணி எளிதாகிவிடும் என நினைத்தார். அதுதான் முதல் வலைத்தளத்தை உருவாக்கும் ஆர்வத்தை அவருக்கு ஏற்படுத்தியது. இன்றைக்கும் இந்த வலைத்தளம் உயிர்ப்போடு இருக்கிறது. 

முதலில் அவருடைய நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் மட்டுமே பார்க்கக்கூடியதாக இருந்தது அவரது வலைத்தளம். 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணையத் தொடர்பு வைத்திருக்கும் அனைவரும் பார்க்கும்படியான வலைத்தளமாக அதனை மாற்றினார். 

டிம் பெர்னர்ஸ் லீ முதல் வலைத்தளத்துக்கு எழுதிய சோர்ஸ் கோட் 5.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு 2021ஆம் ஆண்டு மாற்ற இயலாத கணிமச் சொத்து (NFT non-fungible token) மூலமாக ஏலம் போனது. டிம் இணையத்திற்கான அவருடைய பங்களிப்புக்காக பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

1960களில் பயன்படுத்தப்பட்ட ஆர்ப்பா நெட் (arpa-net) என்னும் நுட்பம் அமெரிக்கப் பாதுகாப்புத்துறையினர் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. இணையத் தொடர்பு அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமை என நாம் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த இடத்தை வந்தடைய  டிம் பெர்னர்ஸ் லீ-ன் கண்டுபிடிப்புதான் தொடக்கமாக இருந்தது. இந்தக் காரணத்திற்காக 2022ஆம் ஆண்டு சியோல் அமைதிப் பரிசு (Seoul Peace Prize) என்னும் விருதையும் பெற்றார் டிம் பெர்னர்ஸ் லீ. 

  • அ. பாண்டியராஜன்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now