டிக்டாக் செயலிக்குத் தடை

ஜனவரி 19ஆம் தேதி முதல்  டிக்டாக் செயலிக்குத் தடை விதித்து அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சீனாவைச் சேர்ந்த பைட்டேன்ஸ் (ByteDance) நிறுவனம் இந்த டிக்டாக் செயலியை நிர்வகித்து வருகிறது. தேசப் பாதுகாப்பு கருதி இந்த முடிவை எடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதே காரணங்களைச் சொல்லி இந்தியாவும் 2019ஆம் ஆண்டு டிக்டாக் செயலியைத் தடை செய்தது நினைவிருக்கலாம். பயனர்களின் தகவல்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது முதன்மைக் குற்றச்சாட்டு. 

tiktok ban

அமெரிக்காவில் மட்டும் பதினேழு கோடி மக்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துகின்றனர். பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல வணிகத்துக்காகவும் இந்தச் செயலியை அமெரிக்கர்கள் பயன்படுத்துகின்றனர். பைட்டேன்ஸ், பயனர்கள், இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் எனப் பலதரப்பும் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் பட்டியலில் இருக்கின்றனர். இந்தச் செய்தி வெளிவந்த பிறகு டிக்டாக் போன்ற பிற செயலிகளான லெமனேட் (Lemonade),  ரெட்நோட் (RedNote), ஃப்ளிப் கிளாப்பர் (Flip clapper) ஆகியவற்றை நோக்கி மக்களின் ஆர்வம் திரும்பியுள்ளது. இந்தத் தடையால் எந்த நிறுவனம் அதிகப் பயன்பெறப்போகிறது என்ற விவாதங்களும் தொடங்கிவிட்டன. 

பைடன் பதவிக்காலம் முடிந்து டிரம்ப் பதவியேற்க இருக்கும் இந்த சூழலில் இத்தகைய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடி வர்த்தகம் கொண்ட இந்த செயலி தடை செய்யப்பட்டால் ஏற்படும் இழப்புகளை சீனாவும் டிக்டாக் செயலியை நிர்வகிக்கும் நிறுவனமும் உணர்ந்தே இருப்பார்கள். தடையிலிருந்து தப்பிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான செய்திகளும் வலம்வரத் தொடங்கிவிட்டன. 

இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. எலன் மஸ்க் போன்ற அமெரிக்க வணிகர்களிடம் டிக்டாக் நிர்வாகத்தை ஒப்படைப்பது ஒன்று. தாங்களே முன்வந்து அமெரிக்காவில் செயல்பாட்டை நிறுத்திக்கொள்வது இரண்டாவது. இவையிரண்டும் இல்லையெனில் செயலிகளை அளிக்கும் நிறுவனங்கள் டிக்டாக்கை பதிவிறக்கம் செய்யும் பட்டியலிலிருந்து நீக்கிவிடும்.

எலன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்துக்கு சீனா இரண்டாவது பெரிய சந்தையாக இருக்கிறது. சீனாவுடனான வர்த்தக உறவுக்கு ஆதரவாக இருப்பதாகவே அவரது கடந்தகால செயல்பாடுகள் இருக்கின்றன. டிக்டாக்கின் அமெரிக்க வர்த்தகம் எலன் மஸ்க்கிடம் செல்லுமானால் ஏற்கனவே அவரிடமிருக்கும் எக்ஸ் தளமும் இணைந்து அதிகப் பயனர்களைக் கொண்ட சமூக ஊடகமாக மாற்றம்பெறும் வாய்ப்பிருக்கிறது.  

  • அ. பாண்டியராஜன்
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now