ஆப்பிள் ஐஓஎஸ்18, ஐபேட்ஓஎஸ்18 இயங்குதளம் கொண்ட திறன்பேசிகளுக்கு புதிய பதிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய 18.3 பதிப்பில் ஆப்பிள் நுண்ணறிவு மென்பொருள், காட்சி நுண்ணறிவு போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன

ஐபேட்ஓஎஸ்18.3 :
ஆப்பிள் நுண்ணறிவு (Apple intelligence) மென்பொருள் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அப்போதிலிருந்தே பல்வேறு குறைகள் இருப்பதாகப் பயனர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இப்போதைய ஐபேட்ஓஎஸ்18.3 பதிப்பில், அக்குறைகளைக் களையும் வண்ணம் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
18ல், அறிவிப்புகளைச் சுருக்கி சிறியதாகத் தருவதற்கான அம்சம் ஒன்று இருந்தது. சில செய்தி செயலிகளில் இருந்து, முக்கியமான செய்திகளுக்கான அறிவிப்புகள் பயனர்களுக்குச் செல்கிறதென வைத்துக்கொள்ளுங்கள். அறிவிப்புகளைச் சுருக்கும் அம்சமானது, அச்செய்திகளைச் சுருக்கி, திரித்து தவறான செய்திகளை வழங்கிவந்தது. அதைத் தொடர்ந்து முன்னணி ஊடக நிறுவனமான பிபிசி ஆப்பிள் மீது, தவறான தகவல்களை வழங்குவதாகப் புகார் அளித்தது. இதைத் தொடர்ந்து, புதிய பதிப்பில் செய்தி, பொழுதுபோக்கு தொடர்பான அறிவிப்புகளைச் சுருக்கும் அம்சத்தை நீக்கியுள்ளது.
நீங்கள் ஒருவேளை ஆப்பிள் நுண்ணறிவு அம்சத்தை விரும்பவில்லை எனில், அதை எளிதாக முடக்கி வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் ஆப்பிள் அதை முன்னிருப்பாக இயக்கும். அதற்கு அமைவுகளில் சென்று, ஆப்பிள் நுண்ணறிவு மற்றும் சிரி அமைவுகளைச் சொடுக்கி, பின்னர் முடக்கி வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்பட்சத்தில் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த மாற்றம் தவிர, சொந்தமாக உணர்ச்சிக்குறிகளை உருவாக்கிக்கொள்ளும் ஜென்மோஜி அம்சம், Healthkit மற்றும் writing tools போன்ற அம்சங்களில் சிறிய மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஐஓஎஸ் 18.3 :
ஐபோன்16 திறன்பேசியில் கொண்டுவரப்பட்டிருந்த அம்சம் காட்சி நுண்ணறிவு (Visual intelligence). இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திறன்பேசியில் ஒரு பொருளைப் படம் எடுக்கிறீர்கள். அப்போது அது என்ன என்று கேட்பதன் மூலம் அப்பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் . இப்போதைய ஐஓஎஸ்18.3 புதிய பதிப்பில், தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்றவற்றையும் அடையாளம் காணும் வகையில் விரிவாக்கப்பட்டுள்ளது. பிற பொருள்களைப் பற்றிய அதிக தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. விளம்பர, தகவல் சுவரொட்டிகளையும் புரிந்துகொள்ளும் வகையில் காட்சி நுண்ணறிவு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதோடு காட்சி நுண்ணறிவில் உள்ள தேதியைத் தொடுவதன் மூலம், அந்த தேதியில் செய்ய விரும்புபவை, செய்தவை போன்றவற்றைப் பதிவு செய்து கொள்ளலாம். இது எதிர்காலத்தில் நினைவூட்டுவதை எளிதாக்குகிறது.
இது தவிர கால்குலேட்டர் செயலியில், சமம் அடையாளத்தைத் தட்டினால், கடைசியாக மேற்கொண்ட கணித செயல்பாட்டை மீண்டும் செய்யும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. சிரியில் சில நேரங்களில் தட்டச்சு செய்ய முயலும்போது விசைப்பலகை மறைந்து வந்தது. அதற்கும் இந்த பதிப்பில் தீர்வு காணப்பட்டுள்ளது.
அறிவிப்புகளைச் சுருக்கும் ஆப்பிள் நுண்ணறிவிற்கு, ஐபேட்ஓஎஸ்18.3 யைப் போலவே இங்கும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த புதிய பதிப்பை அமைவுகளுக்குள் சென்று Software update என்பதைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- மு.இசக்கிமுத்து.
