லுப்தான்சா விமானங்களில் பயண உடைமை கண்காணிப்புச் சேவையில் ஆப்பிள் ஏர்டேக் இருப்பிடத் தடங்காட்டி அம்சத்தை இணைத்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி நம்முடைய கவனச் சிதறலைக் கூட்டியுள்ளது. கவனத்தைக் கூட்ட கணிமத் தொழில்நுட்பங்களை நம் வாழ்வில் இருந்து கொஞ்சம் தள்ளி வைக்கலாம். அதெல்லாம் முடியாது என்போர் தொழில்நுட்பத்திடமே உதவி கேட்கும் வசதிதான் தடங்காட்டி. கார் சாவி, வீட்டு சாவி, திறன்பேசி, மடிக்கணினி என்று எதைத் தேடவும் கருவியைக் கண்டுபிடி (Find my device) வசதிகள் உள்ளன.

ஆண்டிராய்டுக்கு முன்பே ஆப்பிள் இவ்வசதியைக் கொண்டுவந்துவிட்டது. வீட்டில் நாம் தொலைப்பது போதாதென்று விமானங்கள் நம் பெட்டிகளைத் தொலைப்பதைத் தடுக்கவும் இதைப் பலர் பயன்படுத்துவர். ஆப்பிள் ஏர்டேக் மூலம் எங்கே எப்படித் தவறவிட்டாலும் எளிதாக நம் பெட்டியைக் கண்டுபிடிக்கலாம்.
ஆனால் இரண்டாண்டுகளுக்கு முன்பு லுப்தான்சா ஏர்டெக் எல்லாம் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றது. பாதுகாப்பு விதிமுறை என்று ஏதேதோ சொன்னார்கள். அதற்கெல்லாம் முகாந்திரம் இல்லை. பயணிகள் கோபத்தைச் சமாளிக்க முடியாமல் மூன்றே நாளில் அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். ஏர்டேக் குறைந்த அளவு மின்சாரப் பயன்பாடு கொண்டது என்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை எனப் புதிதாகக் கண்டுபிடித்தது போலச் சொல்லிச் சமாளித்தார்கள்.
பிடிவாதமாகத் தடை போட்டால் பயணிகளின் பெட்டி படுக்கைகளுக்கு விமான நிறுவனங்கள் முழுப்பொறுப்பு ஏற்றுக்கொண்டாகவேண்டும். நாங்கள் தொலைக்கவே மாட்டோம் என்று உறுதியளிக்கவேண்டும். அதெல்லாம் நடக்கிற காரியமா? லுப்தான்சாவில் வேலை செய்யும் குழு ஒன்று கூடி ஆராய்ந்து நம் சேவையில் ஒன்றாகவே இதைச் சேர்ந்துவிட்டால் என்னவென யோசித்தது போலும்.
தற்போது அதைத்தான் அறிவித்துள்ளார்கள். இருப்பிடத் தடங்காட்டிகளைப் பயன்படுத்துவதை தங்கள் சேவையின் ஒரு அம்சமாக இணைத்துள்ளார்கள். பயணிகளின் ஏர்டேக், கருவியைக் கண்டுபிடி அம்சம் மூலம் விமானப் பணியாளர்கள், பயணிகளுக்குச் செய்யும் உதவி செய்வது மேம்படுகிறது. ஆயிரம் பேர் கொண்ட கணிம வல்லுநர்கள் குழு இதற்கெனவே இருக்கிறது. கண்டுபிடிப்பது தவிர மற்ற பல புகார்களையும் இக்குழு பரிசீலனை செய்து பயணிகளுக்குத் தீர்வுகள் கொடுக்க உதவிசெய்கிறார்கள்.
ஏர்டேக் மூலம் தொலைந்துபோகும் உடைமைகளைக் கண்டுபிடிப்பதில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக லுப்தான்சா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏர்டேக் தரவுகளின் ஒருங்கிணைப்பினால் நாங்கள் திறமையாகவும் வேகமாகவும் செயல்பட்டு பயணிகளுக்கு நல்ல சேவை வழங்கமுடிகிறது என்கிறார்கள்.
தங்களால் தடுக்க முடியாத விஷயத்தை ஏற்றுக்கொண்டு அதைத் தமக்கேற்றவாறு மேம்படுத்தி ஆஹா எங்கள் சேவையைப் பாரீர் என விளம்பரப்படுத்துவது நல்ல உத்திதான். சேவை தொடரட்டும்.
