இரகசியத் திட்டங்களுக்கு வாட்சாப்

இரு நபர்கள், தங்களுக்குள் நிகழ்வுகளைத் திட்டமிடும் வசதியைத் தன்னுடைய புதிய பீட்டா பதிப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது வாட்சாப்.​ இதற்குமுன் இவ்வசதி, ​ வாட்சாப் குழுக்கள் (Groups), சமுதாயக் குழுமங்கள் (Communities) போன்ற அரட்டைக் களங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. 

அண்மையில்  வாட்சாப்பின் 2.25.3.6 புதுப்பிப்பு வெளியிடப்பட்டிருந்து. தனிப்பட்ட அரட்டைகளில்​, நிகழ்வுகளுக்காகத் திட்டமிடவும் அவற்றை மறுதரப்புடன் பகிர்ந்துகொள்ளவும் இதில் வசதியளிக்கப்பட்டுள்ளது. 

whatsapp planner

நண்பர்களுடனான சுற்றுலாக்கள், அலுவலகச் சந்திப்புகள், ஆர்வங்கள்சார்ந்த கூடுகைகள், வகுப்புகள், கேளிக்கைகள் போன்ற நிகழ்வுகளுக்காகத் திட்டமிட​, நம்மில் பலர் வாட்சாப்பைப் பயன்படுத்தியிருப்போம். குறிப்பிட்ட குழுவிலும் குழுமத்திலும் உள்ளோரின் கருத்துகளின்படி, அந்நிகழ்வைத் திட்டமிட்டிருப்போம். பலரும் இதனை மிகவும் வசதியான ஏற்பாடாகக் கருதுகின்றனர்.

ஆயினும், இரு நபர்களுக்கிடையேயான தனிப்பட்ட அரட்டைகளில் இது சாத்தியமற்றதாக இருந்தது. ​இதனுடைய தேவை கருதித் தற்போது இந்த அம்சத்தை இருநபர் அரட்டைகளிலும் அறிமுகப்படுத்துகிறது வாட்சாப். 

இனி, தோழருடன் இரவு உணவுக்குத் திட்டமிடலாம். தன்னுடைய வணிகக் கூட்டாளிக்குத் தொழில்சார்ந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கலாம். இணையக் கட்டணம் செலுத்துவதற்கானக் கடைசித் தேதியைக்கூட,  ஒரு நிகழ்வாகக் குறித்துக்கொள்ளலாம். இது, அறைத்தோழருக்கு அவருடைய பங்கைச் செலுத்துவதற்கான நினைவூட்டியாக இருக்கும்.​

​குழுக்களிலும் சமுதாயக் குழுமங்களிலும் நிகழ்வுகளை உருவாக்கும் அதே முறையில் இருநபர் அரட்டைகளிலும் நிகழ்வுகளை உருவாக்கிக்கொள்ளலாம். நேரடியாகச் சந்திக்கவேண்டிய நிகழ்வுகளில், தேதி, நேரம், இடம் போன்றவற்றைக் குறித்துக்கொள்ளலாம். நிகழ்நிலைச் சந்திப்பெனில், அதனை வாட்சாப்பின் குரல் அல்லது காணொளி அழைப்புடன் இணைத்துக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட நிகழ்வை மறுதரப்புடன் பகிர்ந்தபின், இருவரில் யார் வேண்டுமானாலும் அந்நிகழ்வை அணுகலாம். இது என்ன அந்த அளவுக்குப் பயனுள்ள அம்சமா என்றால், ஆம், இது நிச்சயம் பயனுள்ளதே. குறிப்பாக, தினமும் ஏராளமான செய்திகளை வாட்சாப் அரட்டை வழியாகப் பகிர்ந்துகொள்ளக்கூடிய இருநபர்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும். 

எடுத்துக்காட்டாக, களப்பணியாளர் ஒருவர் தனது மேலதிகாரிக்கு அன்றாடக் களநிகழ்வுகளைத் தெரிவிக்கும் நிலையிலுள்ளார் எனக் கொள்வோம். இவர்கள் ஒரு தொழில்சார்ந்த சந்திப்புக்கு வாட்சாப் அரட்டை வழியாகத் திட்டமிடுகிறார்கள். பிறிதொரு நாளில் அத்திட்டங்களைக் காணவேண்டுமெனில், அவர்கள் நீண்ட தூரத்துக்கு அரட்டையில் பின்னோக்கித் திரையை உருட்டவேண்டும். இது சலிப்பை ஏற்படுத்தக்கூடியது. தற்போது அறிமுகமாகியிருக்கும் புதிய அம்சம் இந்தத் தொல்லைக்குத் தீர்வு தரக்கூடியது.

ஒருவர் ஒரு நிகழ்வை உருவாக்கி, அடுத்தவருக்குப் பகிரும்போது, அடுத்தவர் அதனை ஏற்கவோ, தவிர்க்கவோ முடியும். எனவே, எந்தவிதக் குழப்பத்திற்கும் வாய்ப்பில்லை.

​இந்த அம்சத்தின் பயன்பாட்டை நமது தேவைக்கு ஏற்றாற்போல் விரித்துக்கொள்ளலாம். ஒரு நிறுவன மேலாளருக்கு அவரது வாடிக்கையாளர், தன்னுடைய செயற்திட்டப்பணிக்கான கெடுவை விதிக்கலாம். நோயாளி தனது மருத்துவருடன் கலந்தாலோசிக்க, முன்அனுமதி பெறலாம். இவை சில எடுத்துக்காட்டுகள். இவைபோல் பலவாறு, இதன் நடைமுறைப் பயன்பாடுகளை நீட்டித்துக்கொண்டே செல்லலாம். செல்லினம் செயலி, இவற்றைத் தமிழில் செய்ய உதவுகிறது.

வணிகக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இவ்வசதியளிக்கும் வேறு நிறுவனச் செயலிகளால், வாட்சாப்பின் பயனர்கள் கவரப்படுவதை இது தவிர்க்கும். முதற்கட்டமாக முன்னோட்டமாக சில பயனர்களுக்கு இவ்வசதி வழங்கப்பட்டுள்ளது.​ விரைவில் அனைத்து வாட்சாப் பயனர்களுக்கும் இச்சேவை விரிவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இனி, தோழியுடனோ தோழனுடனோ பொழுதைச் செலவிட வாட்சாப்பில் திட்டமிடலாம். தங்களது அரட்டைத் தளத்தில் குவிந்திருக்கும் குறுஞ்செய்திக் குவியல்களுக்கிடையே விரலை நிரடி, ரேகை தேயவேண்டிய அவசியம் இனி இல்லை.

  • ரிஷி ரமணா
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now