மருத்துவர்கள் விரும்பும் விஷன்புரோ

ஆப்பிள் விஷன் புரோ கருவியைப் பயன்படுத்திய மருத்துவர்கள், அதன் செயல்பாடு அற்புதமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் விஷன்புரோ அறிமுகமாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் கருவி முப்பரிமாண பயனர் இடைமுகத்தைப் பயன்படுத்தி ஐபேட் இயங்குதளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விஷன்ஓஎஸ் (visionOS) மூலம் செயல்படுகிறது. எனவே இது பயனருக்குச் சுற்றுப்புறங்களுக்குள் மிதப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது. இதில் முப்பரிமாண படக்கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன . இதன் மேற்புறத்தில் உள்ள ஒரு வட்ட வடிவிலான கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம், மெய்நிகர் சூழலை அதிகரிக்க இயலும். 

Apple vishionPro

பயனரின் முகத்தை ஊடறிவதன் (Scan) மூலம் பெர்சனாஸ் எனப்படும் அவதார்கள் உருவாக்கப்படுகின்றன. விஷன் புரோவின் முன்பக்கத்தில் உள்ள ஒரு திரையில், பயனரின் கண் அசைவுகள் காட்டப்படுகின்றன. இது பயனரின் மெய்நிகர் சூழலுக்குள் இருப்பதை அறிந்துகொள்ளவும் தகவல்தொடர்புகளுக்காகவும் பயன்படுகிறது. விளையாட்டு, சுற்றுலா, திரைப்படம் போன்ற பல தளங்களில் மெய்நிகர் அனுபவத்தைத் தருவதில் இக்கருவி முன்னணியில் இருக்கிறது. இதனை இயக்குவதற்குச் சைகைகள், கண் அசைவுகள் மற்றும் பேச்சுக் குறியீடுகள் போன்ற உள்ளீடுகளைப் பயன்படுத்தலாம்.

இந்நிலையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த Sharp HealthCare என்ற அமைப்பு , கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 30 ஆப்பிள் விஷன் புரோ கருவிகளை வாங்கியிருந்தது. இந்த மருத்துவ நிறுவனம் உலகெங்கிலும் உள்ள அதன் மருத்துவர்களுக்கு விஷன் புரோ கருவியை வழங்கி பயன்படுத்திப் பார்க்கும் படிக் கூறியுள்ளது. அந்த கருவியைப் பயன்படுத்திய மருத்துவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறுவதற்காக, ஒரு மாநாட்டையும் ஒருங்கிணைத்திருந்தது. இதில் பத்து நாடுகளைச் சேர்ந்த முந்நூறு மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஒரு வருடமாக விஷன் ப்ரோவைப் அறுவைசிகிச்சைகளில் பயன்படுத்திய மருத்துவர்கள், அதன் பயன்பாடுகளைப் பார்த்து வியந்துள்ளனர். தரவுகளை முப்பரிமாண முறையில் காண்பிக்கும் விதமும் அவர்களுக்குப் பெரிதும் உதவி புரிந்துள்ளது. இருபதாயிரம் டாலர் மதிப்பிலான கண்காணிப்பு கருவிகளை வாங்குவதற்குப் பதிலாக, மூவாயிரத்து ஐந்நூறு டாலர் மதிப்புள்ள ஒரு விஷன் புரோ கருவியை வாங்கினால் போதும் என்கின்றனர். இதன் எடை 600 முதல் 650 கிராம் வரை இருந்தாலும், பெரியளவில் வலியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் கண்காணிப்புக் கருவிகளைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் ஏற்படும் கழுத்து வலியோடு ஒப்பிடுகையில் இது மிகவும் எளிதாக இருக்கிறது.

முப்பரிமாண படக்கருவிகளின் மூலம் அறுவை சிகிச்சை செய்யும் பணி எளிதாகியுள்ளது. பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, பின்பகுதியில் மங்கலாக இருப்பதாக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். எனினும் அறுவை சிகிச்சை செய்யும்போது அது பெரிய அளவில் இடையூறாக இருப்பதில்லை என தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர் மருத்துவர்கள்.

மருத்துவத்துறையில் எந்த ஒரு புதிய கருவியும் அவ்வளவு சீக்கிரத்தில் பயன்படுத்தப்படாது‌. ஆனால் மருத்துவர்களிடம் நல்ல கருத்துகளைப் பெற்றுள்ளது விஷன் புரோ. ஆரம்பக்கட்டத்திலேயே இவ்வளவு சிறப்பாக இருக்கிறதென்றால், இனி வரப்போகும் மெய்நிகர் கருவிகள் மருத்துவ உலகில் பல மாற்றங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

  • மு. இசக்கிமுத்து.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now