சிகரத்தில் டீப்சீக், சிக்கலில் சாட்ஜிபிடி

எண்பத்திரண்டு விழுக்காடு மக்களை டீப்சீக் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது அண்மைக் கருத்துக்கணிப்பு. செயற்கை நுண்ணறிவுச் சேவையை வழங்கும் மற்ற முன்னணி நிறுவனங்களுக்கு எச்சரிக்கைமணி அடித்துள்ளது இச்செய்தி.

Deepseek

இன்று செயற்கை நுண்ணறிவு உலகில் நம் காதில் ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்கும் பெயர் டீப்சீக். இதன் அதிரடித் தொடக்கமும் அசுரவேக வளர்ச்சியும் இத்துறையின் முன்னணி நிறுவனங்களான ஓப்பன்ஏஐ, கூகுள் போன்றவற்றை அரண்டு போகச்செய்துள்ளன என்றால் அது மிகையல்ல. இந்நிறுவனங்களின் அச்சம் நியாயமானதுதான் என்பதை நிரூபிக்கிறது ஆண்டிராய்டு அத்தாரிட்டி என்ற ஆங்கில மின்னிதழின் அண்மைக் கருத்துக்கணிப்பு.

இம்மின்னிதழ், தொழில்நுட்ப ஆர்வமுள்ள (Tech-savvy) வாசகர்களிடையே டீப்சீக் செயலியின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய விரும்பி, கருத்துக்கணிப்பொன்றை நிகழ்த்தியது. இதில், ‘டீப்சீக் செயற்கை நுண்ணறிவு மாதிரி உங்களைக் கவர்ந்துள்ளதா?’ என்ற தலைப்பில் பின்வரும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

  1. நீங்கள் தற்போது உங்கள் திறன்பேசியிலோ கணினியிலோ டீப்சீக் பயன்படுத்துகிறீர்களா?
  2. விரைவில் டீப்சீக்கைப் பயன்படுத்த எண்ணியிருக்கிறீர்களா?
  3. டீப்சீக்கின் மேல் கண்வைத்திருக்கிறேன். ஆனால், இன்னும் பயன்படுத்தத் தொடங்கவில்லை என்பவரா நீங்கள்?
  4. நீங்கள் டீப்சீக்கின் மேல் ஆர்வம் இல்லாதவரா?

அதிகமான வாசகர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, இம்மின்னிதழ் வெளியிட்ட பல்வேறு கட்டுரைகளிலும் இக்கருத்துக்கணிப்பில் பங்களிப்பதற்கான இணைப்பினை இடம்பெறச் செய்திருந்தது. இம்முயற்சிகளால், ஆயிரக்கணக்கான வாக்குகள் பெறப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ளது ஆண்டிராய்டு அத்தாரிட்டி.

மேற்கண்ட கேள்விகளில் முதற்கேள்விக்கு ‘ஆம்’ என்று 34.45 விழுக்காடு வாசகர்கள் வாக்களித்திருந்தனர். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான பயனர்கள் ஏற்கெனவே டீப்சீக்கைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இது அசாதாரணமானது. விரைவில் டீப்சீக்கைப் பயன்படுத்தப்போகிறேன் என 17.12 விழுக்காடு பயனர்களும் டீப்சீக்கின் மேல் ஆர்வம் கொண்டுள்ளேன் என்று 30.56 விழுக்காடு பயனர்களும் தெரிவித்துள்ளனர். ஆக, டீப்சீக்கின் மேல் ஆர்வமுள்ளோர் சுமார் 82 விழுக்காட்டினர்.

17.87 விழுக்காடு வாசகர்கள் டீப்சீக்கைப் பயன்படுத்த ஆர்வமில்லை எனத் தெரிவித்துள்ளனர். சீனச் செயலிகளின் மேலுள்ள பொதுவான பயமே இதற்கு அடிப்படைக் காரணமெனக் கூறப்படுகிறது. ஆனால், டிக்டாக் போலல்லாது, டீப்சீக் ஒரு திறமூலச் (Open Source) செயலியாக உள்ளது. எனவே, குறியிடல் குழுமங்கள் (Coding Communities) டீப்சீக்கை முழுமையாக ஆய்வு செய்திருப்பார்களென நம்பலாம்.

சாட்ஜிபிடி அளவுக்குத் திறன் கொண்டுள்ளதோடு விலையும் குறைவாக இருப்பதே டீப்சீக் மக்களிடம் எளிதாகச் சென்று சேர்ந்ததற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. பல பயனர்கள் குறிப்பிட்ட கேள்விகளுக்கு சாட்ஜிபிடியும் டீப்சீக்கும் அளித்த பதில்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர். அவற்றில் டீப்சீக் அளித்த பதில்கள் சற்று மேம்பட்டிருந்தது தெரிந்தது.

இருப்பினும், ஒரு தரப்பினர் டீப்சீக்குடன் ஒப்பிடுகையில் மற்றொரு முன்னணிச் செயலியான ஜெமினியின் சாதகங்கள் என்ன என்பதைக் கூறியிருக்கிறார்கள். தொழில் கூகுள் கணக்கு (Business Google Account) வைத்திருக்கும் ஓர் ஆண்டிராய்டு பயனருக்கு ஜெமினியை எங்கேயும் பயன்படுத்தும் சுதந்திரம் உள்ளது. கூகுளின் அனைத்துத் தளங்களிலும் ஜெமினி இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் சாதகமாக அமைகிறது.

எப்படியாகினும், டீப்சீக் குறுகிய காலத்தில் நம்பமுடியாத அளவுக்குப் புகழ்வீச்சைப் பெற்றுள்ளது கண்கூடு. அண்மையில் பங்குச்சந்தையையே டீப்சீக் புரட்டிப்போட்டதைப் பார்த்தோம். பல்வேறு போட்டி நிறுவனங்களுக்கு நடுவிலும் கோலோச்சிக்கொண்டிருந்த சாட்ஜிபிடி, இனி கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்க முடியாது. அது ஏற்கெனவே, தன்னுடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையை முடுக்கிவிட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளையும் சாட்ஜிபிடி தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. இது பயனர்களுக்கு நல்ல செய்திதான். எதிர்க்கட்சி வலுவாக இருந்தால்தானே ஆளுங்கட்சி தீவிரமாகச் செயல்பட்டு மக்களின் நன்மதிப்பைப்பெற முயற்சி செய்யும்.

  • ரிஷி ரமணா
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now