கூகுள் குறுஞ்செய்தியில் வாட்சாப் அழைப்பு

கூகுள் குறுஞ்செய்திச் செயலியிலிருந்து நேரடியாக வாட்சாப் காணொளி அழைப்புகளை மேற்கொள்வதற்கான அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கூகுள் மெசேஜஸ் செயலி, கூகுளின் முக்கியமான அரட்டை அமைப்புகளுள் ஒன்று. இதன் பயன்பாட்டை பயனர்கள் மத்தியில் அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு முன்னெடுப்புகளைக் கூகுள் மேற்கொண்டு வருகிறது. அதனால் காணொளி அழைப்புகளில் நேரடியாகக் கூகுள் மீட் செயலியுடன் இணையும் வகையில் அம்சங்கள் கொண்டுவரப்பட்டன. அது பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில், அதே முயற்சியை முன்னணி அரட்டை செயலியான வாட்சாப்பைக் கொண்டு மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது கூகுள்.

google messages

தற்போது கூகுள் மெசேஜஸ் செயலியில், ஒவ்வொரு தனிப்பட்ட உரையாடலின் மேல் வலதுபுறத்திலும் அழைப்பு மற்றும் காணொளி அழைப்பு குறியீடு இருக்கிறது. காணொளி அழைப்புக்கான குறியீட்டைத் தட்டினால், கூகுள் மீட் மூலம் காணொளி அழைப்பு மேற்கொள்ளப்படும். அழைப்பவருடைய திறன்பேசியில், கூகுள் மீட் நிறுவப்படவில்லை என வைத்துக்கொள்ளுங்கள்‌. அப்போது அழைப்பைத் தொடங்குவதற்குப் பயனரைக் கூகுள் மீட் செயலியை நிறுவுமாறு கோரிக்கை அனுப்பும். நிறுவப்பட்ட பின்னரே அழைப்பு மேற்கொள்ளப்படும்.

இது கொஞ்சம் சிரமமாகத்தானே இருக்கிறது? இந்த விதிமுறை தனி நபர் அரட்டைகள் மற்றும் குழு அரட்டைகள் இரண்டிலும் பின்பற்றப்படுகிறது. இனிவரப்போகும் கூகுள் மெசேஜஸ் பதிப்புகளில், தனிநபர் அரட்டையிலிருந்து பயனர்கள் வாட்சாப் காணொளி அழைப்பைத் தொடங்குவதற்கான அம்சம் வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, கூகுள் மெசேஜஸ் மூலம் காணொளி அழைப்புகளை மேற்கொள்வது எளிதாகப்போகிறது.

அதன்படி காணொளி குறியீட்டைத் தட்டினால், வாட்சாப் காணொளி அழைப்பிற்கான திரை தோன்றும். அதை அழுத்தினால் நேரடியாக வாட்சாப் வழியாகக் காணொளி அழைப்பு தொடங்கும். மறுமுனையில் உள்ள பயனரும் வாட்சாப் செயலியை நிறுவியிருக்க வாய்ப்புகள் அதிகம். அவருடைய திறன்பேசியில் வாட்சாப் இல்லையெனில், உங்கள் திரையில் காணொளி அழைப்பிற்கான கோரிக்கை காட்டப்படாது. அதற்குப் பதிலாகக் கூகுள் மீட் காணொளி அழைப்பிற்கு அது உங்களை வழி நடத்தும். இருவருடைய திறன்பேசிகளிலும், இரண்டு செயலிகளும் இருப்பின், வாட்சாப் அல்லது கூகுள் மீட் என எதில் வேண்டுமென்றாலும் அழைக்கும் அம்சம் வரும் வாய்ப்புள்ளது.

இந்த அம்சமானது தனிநபர் அரட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும். குழு அரட்டைகளுக்கு வழக்கம்போல கூகுள் மீட் காணொளி அழைப்பு காண்பிக்கப்படும். இந்த அம்சம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்பொழுது, இதே விதிமுறைகள் பின்பற்றப்படும் வாய்ப்புள்ளது. இந்த அம்சம் தற்போது பயன்பாட்டிற்கு வரவில்லை, வரப்போவதாக செய்திகள்தான் வந்துள்ளன.

  • மு.இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now